தமிழில் வெளியாகும் தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2

சோனி பிக்சர்ஸ்-ன் ‘தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2’ – தமிழில்… மே 1ம் தேதி வெளியாக உள்ள  பிரம்மாண்ட ஹாலிவுட் திரைப்படம்…

2014ம் ஆண்டு கோடை விடுமுறை, உங்களை மிகவும் கொண்டாட வைக்கப் போகிறது. அதற்கான காரணம்தான் ‘தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2’. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த, குதூகலப்படுத்த, கோலகலமாகக் கொண்டாட வைக்கக் கூடிய ஒரே படமாக இருக்கப் போகும் ‘ஹாலிவுட்டின் நம்பர் 1 சூப்பர் ஹீரோ’ படமான இந்தப் படம் மே 1ம் தேதி இந்தியா முழுவதும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படத்தை திரையிடப் போகிறார்கள். 2டி, 3டி, ஐமேக்ஸ் 3டி - மற்றும் டால்பி அட்மாஸ், ஆரோ 3டி என ஒளி, ஒலி நுட்பத்திலும் உங்களை திகைத்து ரசிக்க வைக்கப் போகும் படம்தான் இது.
ஏராளமான பொருட் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆன்ட்ரூ கேர்பீல்ட், எம்மா ஸ்டோன், ஜேமி பாக்ஸ், டேன் டி ஹான், கேம்ப்பெல் ஸ்காட் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மார்க் வெப் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
‘தி அமேசிங் ஸ்பைடர்மேன்’ படத்தில் ஸ்பைடர் மேன் – ஆக நடித்த ஆன்ட்ரூ கேர்பீல்ட்- தான் இரண்டாம் பாகத்திலும் ஸ்பைடர் மேனாக நடித்துள்ளார்.  ‘தி அமேசிங் ஸ்பைடர்மேன்’ படத்தின் இரண்டு பாகங்களிலும் நடிப்பதற்கு முன் அவர் ‘சோஷியல் நெட்வொர்க்’ என்ற படத்தில் நடித்திருந்தார். பல நடிகர்களைப் பார்த்த பின் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்திற்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார் எனத் தேர்வு செய்து முதல் பாகத்தில் அவரை நடிக்க வைத்து உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்.
2012ம் ஆண்டு வெளிவந்த ‘தி அமேசிங் ஸ்பைடர்மேன்’ படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் சுமார் 750 மில்லியன் டாலர்கள் வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது. இந்தியாவில் மட்டும் வெளியான முதல் வார முடிவில் 34 கோடி ரூபாய் வசூல் செய்து, ஹாலிவுட் பட வரலாற்றிலேயே இதுவரை அந்த சாதனையை தக்க வைத்துக் கொண்டுள்ள ஒரே படமாகத் திகழ்கிறது. மொத்தமாக 90 கோடி ரூபாய் வசூல் செய்தது. ‘ஸ்பைடர் மேன்’ சீரிசின் முதல் படமாக 2002ம் ஆண்டு வெளிவந்த ‘ஸ்பைடர்மேன்’ படத்தின் வசூலை விட இது மூன்று மடங்கு அதிகம்.
2012ம் ஆண்டுக்குப் பிறகு இரண்டு ஆண்டு இடைவெளியில்  அந்த வசூலையும் தாண்டும் விதத்தில் ‘தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஸ்பைடர் மேன் சீரிஸ் வரிசையில் இது ஐந்தாவது படமாகும். ‘ஸ்பைடர் மேன்’ படத்தின் முதல் பாகம் 2002ம் ஆண்டிலும், இரண்டாம் பாகம் 2004ம் ஆண்டிலும், மூன்றாம் பாகம் 2007ம் ஆண்டிலும் வெளிவந்துள்ளது. இந்த மூன்று பாகங்களையும் இயக்கியவர் சாம் ரைமி. மூன்று பாகங்களிலும் ஸ்பைடர் மேனாக நடித்தவர் டோபே மகுரி.
5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள், புதுப்புதுக் கலைஞர்களுடன் , ‘தி அமேசிங் ஸ்பைடர் மேன்’ என்ற தலைப்புடன் படத்தின் முதல் பாகத்தை, புது இயக்குனர், புது நடிகர்களுடன் , வித்தியாசமான காட்சிகளுடன் உலகமே வியக்க வைக்கும் வகையில் தயாரித்து, 2012ம் ஆண்டு வெளியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்கள்.
அதன் பின்னர் இன்னும் பல புதிய ஒளி, ஒலி தொழில்நுட்பங்களுடன் மேலும் மெருகேற்றி இந்த ‘தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2’ படத்தை வெளியிடுகிறார்கள். அடுத்து இரண்டு ஆண்டு இடைவெளிக்குள் மூன்றாம் பாகத்தை தயாரித்து வெளியிட உள்ளார்கள். இந்த சீரிஸின் அடுத்த படமான ‘தி அமேசிங் ஸ்பைடர் மேன் 3’ படத்தின் ஆரம்ப வேலைகளை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இப்போதே ஆரம்பித்து விட்டது. 2016ம் ஆண்டு மூன்றாம் பாகம் வெளிவர உள்ளது.
‘ஸ்பைடர் மேன்’  என்பது ஒரு சூப்பர் ஹீரோ கதைதான் என்றாலும் மற்ற சூப்பர் ஹீரோ கதைகளைவிட ‘ஸ்பைடர்மேன்’ கதைகளுக்குத்தான் உலக அளவில் ரசிகர்கள் அதிகம். மற்ற சூப்பர் ஹீரோக்கள் இளைஞர்களை மட்டும் அதிகம் கவர்ந்தாலும், ஸ்பைடர் மேனை மட்டும் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை மிகவும் விரும்பி ரசிக்கிறார்கள்.
 ‘தி அமேசிங் ஸ்பைடர்மேன் 2’ அமெரிக்காவில், மே 2ம் தேதிதான் வெளிவருகிறது. ஆனால், இந்தியாவில்  ஒரு நாள் முன்னதாகவே அதாவது மே 1ம் தேதியே வெளி வருகிறது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் ‘எலக்ட்ரோ’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜேமி பாக்ஸ்-க்கு, தமிழ்த் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகரான சுப்பு பஞ்சு டப்பிங் பேசியுள்ளார். முதலில் கொஞ்சம் அப்பாவித்தனம், பிறகு வில்லத்தனம் என கலவையாக பேசக் கூடிய கதாபாத்திரம் கொண்ட ‘எலக்ட்ரோ’ கதாபாத்திரத்திற்கு சுப்பு பஞ்சுவின் குரல் அவ்வளவு பொருத்தமாக அமைந்துள்ளது. ஹிந்தியில் பிரபல நடிகர் விவேக் ஓபராய் குரல் கொடுத்துள்ளார்.
இந்த படத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றமாகி வரும் படம் என ரசிகர்கள் நினைக்க முடியாத அளவிற்கு ஒரு நேரடி தமிழ்ப் படத்தைப் பார்த்தால் என்ன ஒரு திருப்தி வருமோ, அந்த அளவிற்கு திருப்தி வரும்.   இதுவரை ஆங்கிலத்திலிருந்து வந்த படங்களுக்கு ஒலி , அதாவது சவுன்ட் விஷயத்தில் அவ்வளவு கவனம் செலுத்த மாட்டார்கள். ஆனால், இந்த படத்தில் ஆங்கிலப் படங்களில் எந்த விதமான ஒலி வடிவங்கள் அமைந்திருக்கிறதோ அதை அப்படியே தமிழுக்கும் கொண்டு வந்திருக்கிறார்கள். டால்பி அட்மாஸ், ஆரோ 3டி தொழில்நுட்பத்துடன் தமிழில் வெளிவரும் முதல் ஹாலிவுட் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஹாலிவுட் திரைப்படங்களில் பார்த்திருக்காத பல விஷயங்கள் இந்த ‘தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2’ திரைப்படத்தில் கையாளப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் தயாராகியுயள்ள இத்திரைப்படம் ரசனையில் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தைக் கொடுக்கும்.
சோனி பிக்சர்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெர்சி தருவாலா படத்தைப் பற்றிக் கூறுகையில்,
“இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மே 1ம் தேதி விடுமுறை என்பதால் அன்றைய தினத்தில் படத்தை வெளியிடுகிறோம். அதோடு தொடர்ந்து கோடை விடுமுறை என்பதாலும் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவதற்கு ஏதுவாக இருக்கும். தமிழ்நாடு உட்பட இந்தியாவில் அன்றைய தினத்தில்  வெளிவர உள்ள முக்கியமான திரைப்படம் ‘தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2’ என்பது மகிழ்ச்சியான ஒரு விஷயம்.
படத்தை விளம்பரப்படுத்த பல வழிகளைக் கையாண்டிருக்கிறோம். இந்திய விளையாட்டு ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் ஐபிஎல் மேட்ச், சோனி மேக்ஸ்-டிவியின்  ‘எக்ஸ்ட்ரா இன்னிங்ஸ்’ நிகழ்ச்சியில் படத்தைப் பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்க உள்ளோம்,” என்றார்.
நியூயார்க் நகர மக்களுக்கு சவாலாக இருக்கும் ‘எலக்ட்ரோ’ என்ற கதாபாத்திரத்தை, ஸ்பைடர் மேன் எப்படி எதிர் கொள்கிறார் என்பதுதான் படத்தின் மிகப் பெரிய ஹைலைட். இருவருக்கும் இடையிலான சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் படங்களில் இதுவரை பார்க்காத ஒன்று.
சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பு நிறுவனமாகும். உலக அளவில் திரைப்படங்களை வெளியிடுவது, வினியோகம் செய்வது, தயாரிப்பது என திரைப்படம் சார்ந்த பல விஷயங்களை இந்நிறுவனம் செய்து வருகிறது. தொலைக்காட்சி நிறுவனங்கள், ஸ்டுடியோ அமைப்புகள், புதுப்புது பொழுதுபோக்கு தயாரிப்புகளின் மேம்பாடு என இந்நிறுவனம் இயங்கி வருகிறது.
சோனி பிக்சர்ஸ் இந்தியா, இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ள ஹாலிவுட் ஸ்டுடியோ நிறுவனமாகும். இதுவரை வெளிவந்த சிறந்த 10 ஹாலிவுட் திரைப்படங்களில் சோனி நிறுவனம் வெளியிட்ட 4 படங்களான ‘ 2012, தி அமேசிங் ஸ்பைடர்மேன்,  ஸ்பைடர் மேன் 3, ஸ்கை ஃபால்’ ஆகிய படங்கள் அடங்கும்.
கொலம்பியா பிக்சர்ஸ் (சோனி பிக்சர்ஸ்) வரலாற்றில் இதுவரை வெளிவந்த ஸ்பைடர் மேன் திரைப்படங்கள்  உலக அளவில் பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. நான்கு ஸ்பைடர் மேன் திரைப்படங்களும் சுமார் 3.2 பில்லியன் டாலர் வசூல் செய்துள்ளன.
கோடை விடுமுறையை உங்கள் குழந்தைகளுடனும், குடும்பத்துடனும் குதூகலமாகக் கொண்டாட ‘தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2’ திரைப்படத்தை, உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளுக்குச் சென்று காணத் தயாராகுங்கள்…. 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget