ஜய வருட புத்தாண்டு பொது பலன்கள்

விஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான ஜய வருடம் பிறக்கிறது. 14.4.14 திங்கட்கிழமை காலை 6:06 மணிக்கு, சுக்லபட்ச சதுர்த்தசி திதி, அஸ்த நட்சத்திரம் 2-ம்
பாதம், கன்னி ராசி, மேஷ லக்னம் முதலாம் பாதத்தில், நவாம்சத்தில்- மேஷ லக்னம், ரிஷப ராசியில், வியாகாதம் நாம யோகம், வணிசை நாமகரணத்தில், சித்த யோகம், நேத்திரம் ஜீவனம் நிறைந்த நன்னாளில், பஞ்ச பட்சியில் பகல் முதல் சாமம்- காகம் நடை பயிலும் நேரத்தில், சந்திரன் மகா தசையில், ராகு புக்தியில், செவ்வாய் அந்தரத்தில், சந்திரன் ஓரையில் ஜய வருடம் சிறப்பாகப் பிறக்கிறது.
ஜய வருடந் தன்னிலே செப்புலங்களெல்லாம்
வியனுறவே பைங்கூழ்விளையும் - நயமுடனே
அஃகம்பெரிதா மளவில் சுகம்பெருகும்
வெஃகுவார் மன்னரிறைமேல்
சித்தர் பெருமான் இடைக்காடரின் மேற்கண்ட பாடலின்படி தானியங்கள் விளையும். மக்கள் மனத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நாடாளுவோர் மத்தியில் ஈகோ பிரச்னைகள் வந்து போகும். இந்த வருடத்தின் ராஜாவாக சந்திரன் வருவதால், மக்கள் தங்களின் பலம்- பலவீனங்களை உணர்வார்கள். பணத்தைவிட ஆரோக்கியமும் நிம்மதியும்தான் முக்கியம் என்பதை உணரத் துவங்குவர். ஆடை, ஆபரண உற்பத்தி அதிகரிக்கும். நாட்டை ஆளுவோரும் சாதி, மத பேதம் பார்க்காமல் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுவர். காடு, மலை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழை பொழியும். மந்திரியாக வும் சந்திரன் வருவதால், விவசாயம் தழைக்கும். நிலத்தடி நீர் உயரும்.பெண்களின் ஆதிக்கம் ஓங்கும். அவர்களுக்கு வேலைவாய்ப்பும், வருவாயும் அதிகரிக்கும்.
சேனாதிபதியாக சூரியன் வருகிறார். ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குவார்கள். ஊழல்கள் கண்டறியப்பட்டுக் களையப்படும். முக்கிய ஏவுகணைகள், பீரங்கிகள், போருக்குப் பயன்படும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை இந்தியாவே தயார் செய்யும். எல்லையில் பதற்றம் தணியும். எதற்கும் தயாரான நிலையில் நம் தேசம் திகழும். ராஜாவாகவும், மந்திரியாகவும் சந்திரனே வருவதால் மத்தியில் ஆட்சி மாற்றம் உண்டு.
8.10.14 மற்றும் 4.4.15 ஆகிய தேதிகளில் சந்திர கிரகணம் நிகழ இருப்பதால், பெண் குழந்தை பிறப்பு குறையும். மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பச் சிதைவு அதிகரிக்கும். மன வளம் குன்றிய குழந்தைகள் அதிகம் பிறப்பார்கள். இதய நோயால் பெரும்பான்மையானவர்கள் பாதிக்கப்படுவார்கள். 14.7.14 முதல் 1.9.14 வரை விபத்துகள், தீவிரவாத தாக்குதல்கள், ஆட்சிக் கவிழ்ப்புகள், பிரபலங்களின் மறைவுகள் அதிகரிக்கும்.
17.9.14 முதல் 16.11.14 வரை சூரியன் வலுவிழப்பதால், அரசு ஊழியர்களைக் கட்டுப்படுத்த கடும் சட்டங்கள் அமலுக்கு வரும். 13.6.14 அன்று குரு கடகத்தில் உச்சமாவதால், அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும். உலகெங்கும் பணத் தட்டுப்பாடு குறையும். 4.5.14 முதல் செவ்வாய் வக்கிரமாகி வலுவடைவதாலும், 1.9.14 முதல் செவ்வாய் ஆட்சி பெற்று அமர்வதாலும் உலகெங்கும் நிலத்தின் விலை உயரும்; ரியல் எஸ்டேட் சூடுபிடிக்கும். மின் உற்பத்தி அதிகமாகும். மின்சார சாதனங்களின் விலை குறையும்.
இந்த வருடம் முழுவதும் சுக்கிரன் வக்ரமின்றி பயணிப்பதால் சினிமாத் துறை வளர்ச்சி அடையும். புதிய தொலைக்காட்சி சேவைகள் அதிகரிக்கும். வாகன உற்பத்தி பெருகும். நவீன வர்த்தக மையங்கள், புதிய மாதிரி நகரங்கள் உதயமாகும். மக்களின் அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். தனிநபர் வருமானம் உயரும். தென்கிழக்கு, வடமேற்கு திசைகள் வலுவடையும்.
டிசம்பர் 15-க்குப் பிறகு நீதித் துறை வலுவடையும். அதிகார மையங்களைத் தாண்டி நீதிபதிகள் ஆணைகள் பிறப்பிப்பார்கள். தீவிரவாதம் அடக்கப்படும். கறுப்புப் பணம் கண்டறியப்படும். வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணம் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும். 20.9.14 முதல் 11.10.14 வரை; 11.1.15 முதல் 4.2.15 வரையிலான காலகட்டங்களில், கல்வித் துறை அதிகாரிகளின் தவறுகள் கண்டறியப்படும். மாணவர்களிடையே புரட்சிகள் வந்து நீங்கும். சாஃப்ட்வேர் துறையில் தேக்கநிலை மாறும். வேலை வாய்ப்புகள் பெருகும். ஆனால், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறையும். பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் தங்கத்தின் விலை கட்டுக்குள் வரும்.
அர்க்காதிபதியாகவும், மேகாதிபதியாகவும் சூரியன் வருவதால் விளை நிலங்கள் வலிமையடையும். இயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரிக்கும். 'ஆர்கானிக்’ காய்- கனிகள் உற்பத்தி அதிகரிக்கும். நீர்த் தேக்கங்களை பலப்படுத்த, பாதுகாக்க புது சட்டங்கள் அமலுக்கு வரும். நதிகளை இணைப்பதில் முதல் முயற்சி பலிதமாகும். கறுப்பு மற்றும் சாம்பல் நிற மேகங்கள் அதிகம் உற்பத்தியாகும்.
கரஜூ என்ற பெயருடன் மகர சங்கராந்தி தேவதை ஆண் யானை வாகனத்தில் அமர்ந்து வருவதால், மக்கள் மனத்தில் நிம்மதி உண்டாகும். புயல் சின்னம் அதிகம் உருவாகும். அசைவ உணவுகளின் பயன்பாடு குறையும். மொத்தத்தில், இந்த ஜய வருடம் அனைத்து தரப்பினருக்கும் நிம்மதியையும், வளர்ச்சியையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பலன் படிக்க அந்தந்த ராசியின் மீது க்ளிக் செய்யுங்கள் !
1-mesha-rasi2-rishaba-rasi3-mithuna-rasi
4-Kadaga-rasi5-simma-rasi6-kanni-rasi
7-thula-rasi8-viruchiga-rasi9-danusu-rasi
10-makara-rasi11-kumba-rasi12-meena-rasi
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget