டான் ஆப் த ஏப்ஸ் விமர்சனம்

நடிகர் : ஆண்டி செர்கிஸ்
நடிகை : கெரி ரிச்செல்
இயக்குனர் : மாத்தேவ் வாஹன்
இசை : மைக்கேல் ஜியாச்சினோ
ஓளிப்பதிவு : மைக்கேல் செரசின்


2011-ல் ரைஸ் ஆஃப் தி பிளானெட் ஆஃப் த ஏப்ஸ் என்ற பெயரில் வெளிவந்த படத்தில் மனிதனின் திறமை, அறிவு பெற்ற சீஸர் என்ற மனித குரங்கு, பரிசோதனை என்ற பெயரில் குரங்குகளை மனிதர்கள் கொடுமைப்படுத்துவதை கண்டு கோபமாகி அனைத்து குரங்குகளையும் விடுவித்து காட்டுக்குள் செல்வதுடன் நிறைவடைந்தது. தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. 

குரங்குகளை வைத்து பரிசோதனை செய்வதற்கான கிருமிகள் வெளியே பரவி உலகிலுள்ள மனித இனமே அழியும் சூழ்நிலை உருவாகிறது. இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பவர்கள் மட்டும் உயிர் பிழைக்கின்றனர். இவர்கள் கலிபோர்னியாவின் சிதைந்த நகரத்தில் உயிர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் அத்தியாவசிய தேவைக்கு மின்சாரம் அவசியம் தேவைப்படுவதால், காட்டுக்குள் சேதமடைந்த அணைக்கட்டில் இருக்கும் நீர்மின்சக்தி இயந்திரத்தை இயக்கிவிட்டால் சரியாகிவிடும் என்று நினைக்கின்றனர். 

நகரத்துக்குள் இருந்து காட்டுக்கள் தனது சகாக்களுடன் வந்த சீசர் குரங்கு, மனைவி, மகன் என தனது சகாக்களுடன் சந்தோஷமாக வேட்டையாடி, வாழ்ந்து வருகிறது. அந்த குரங்குகள் கூட்டத்துக்கே சீசர் தான் தலைவனாக திகழ்கிறது. மனித இனமே அழிந்துவிட்டது என்று நினைத்து அவர்கள் உயிர் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், அணைக்கட்டை பார்வையிட காட்டுக்குள் வரும் மனிதர்களை கண்டு ஆச்சர்யப்படுகிறது சீசரின் கூட்டம். அவர்களை சுற்றி வளைத்து, இனிமேல் காட்டுக்குள் வரக்கூடாது என எச்சரித்து விட்டு விடுகிறது சீசர். ஆனாலும், அவர்களை ரகசியமாக கண்காணிக்கவும் உத்தரவிடுகிறது.

அதன்படி, அதே கூட்டத்தில் சீசரின் நம்பிக்கைக்கு பாத்திரமான கூபா என்ற குரங்கு, அவர்கள் பின்னால் தொடர்ந்து நகரத்துக்குள் சென்று அவர்களை ரகசியமாக கண்காணிக்கிறது. காட்டுக்குள் திரும்பிய கூபா நகரத்துக்குள் மனிதர்கள் வசித்து வருகிறார்கள் என்று கூறுகிறது. உடனே சீசர் தன்னுடைய கூட்டத்துடன் நகரத்துக்கு சென்று மனிதர்களை மீண்டும் காட்டுக்குள் வரக்கூடாது என எச்சரித்து விட்டு வருகிறது. 

இருந்தாலும், தங்களது அத்தியாவசிய தேவைக்கு மின்சாரம் தேவைப்படுவதால், மனித குரங்குகள் மீது போரிட்டு அந்த அணையை கைப்பற்றலாம் என முடிவெடுக்கிறார் அந்த நகரத்தின் தலைவர். ஆனால், அவருடன் இருக்கும் ஜேசனோ தான் அந்த குரங்குகளின் தலைவரான சீசருடன் சுமூகமாக பேசி தீர்வு காண்கிறேன் என்று சொல்கிறார். அதற்காக மூன்று நாட்கள் தவணை கேட்டுவிட்டு காட்டுக்குள் போகிறார். 

காட்டுக்குள் சென்று சீசருடன் சமரசம் பேசுகிறார். சீசரோ நாம் இதற்கு மறுப்பு தெரிவித்தால் மனிதர்கள் நம் மீது போர் தொடுக்கக் கூடும். அதனால் பல உயிர்களை இழக்கக்கூடும் என்ற எண்ணத்தில் இவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடிவெடுக்கிறது. ஆனால், சீசரின் நண்பனான கூபாவுக்கோ இதில் துளியும் விருப்பமில்லை. சீசரோ துப்பாக்கிகளை எங்களிடம் கொடுத்துவிட்டு, அணையில் பணிகளை மேற்கொள்ள சொல்கிறது. 

அதன்படி, இவர்களும் துப்பாக்கிகளை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அணையில் பணிகளை மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு சீசரின் சகாக்களும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு கட்டத்தில் ஜேசனின் கூட்டாளி ஒருவர் ஒரு துப்பாக்கியை மறைத்து வைத்திருப்பது அவர்களுக்கு தெரிய வர அவர்களை காட்டைவிட்டு வெளியேற உத்தரவிடுகிறது சீசர். 

இதற்கிடையில், குரங்குகள் அணையில் பணிகளை மேற்கொள்ள சம்மதம் தெரிவிக்காவிட்டால், அவர்கள் மீது படையெடுக்க நகரத்தை சேர்ந்தவர்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக, ஆயுதக் கிடங்கில் இருக்கும் துப்பாக்கிகளை சோதித்து பார்க்கின்றனர். இதை ரகசியமாக கண்காணிக்கும் கூபா, அவர்கள் நம் மீது போர் தொடுக்க தயாராகி வருகின்றனர் என்று தவறாக நினைத்துக் கொள்கிறது. இதனை, சீசரிடம் வந்து கூபா சொல்ல, அதனை சீசர் நம்ப மறுக்கிறது. 

இறுதியில், குரங்குகள் மின்சாரத்தை எடுக்க சம்மதம் தெரிவித்ததா? கூபா சொன்னது போல் மனிதர்கள் அவர்கள் மீது படையெடுத்தார்களா? அல்லது குரங்குகள் மனிதர்கள் மீது படையெடுத்தனவா? என்பதே மீதிக்கதை. 

மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் குரங்குகளை மிகவும் தத்ரூபமாக உருவாக்கியிருக்கிறார்கள். இவைகள் சண்டை போடும் காட்சிகள் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. மனிதர்களைப் போலவே குரங்குகளும் குதிரைகளில் ஏறி வலம் வருவது ஆச்சர்யத்தை கொடுக்கிறது. அதே போல், நகரமும், காடுகளும் பிரம்மாண்டத்தை கொடுத்திருக்கிறது. ஒவ்வொன்றும் பிரம்மாண்டாக தெரிந்தாலும், படம் ஏனோ விறுவிறுப்பாக செல்ல மறுக்கிறது. குரங்குகளை அதன் பாஷையிலேயே பேச வைத்திருப்பது அருமை.

மொத்தத்தில் டான் ஆப் த ஏப்ஸ் விறுவிறுப்பில்லை...
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget