சூரன் விமர்சனம்

நடிகர் : கரண்
நடிகை : ஷிபாலி
இயக்குனர் : பாலு நாராயணன்
இசை : பி.பி.பாலாஜி
ஓளிப்பதிவு : கே.எஸ்.செல்வராஜ்


சென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் தந்தை மணிவண்ணன் மற்றும் பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் கரண். இவர் ரவுடி மகாதேவனிடம் ஆடியாளாக இருக்கும் இவர், தன் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு குடிப்பது, பெண்களுடன் உல்லாசமாக இருப்பது, ஊரில் இருப்பவர்களை மதிக்காமல் ரவுடித்தனம் செய்வது என வலம் வருகிறார்.

சென்னையில் மற்றொரு ரவுடியான பொன்வண்ணனுக்கும், மகாதேவனுக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. ஒருநாள் பொன்வண்ணனின் ஆட்களை கரண் அடித்துவிடுகிறார். இதனால் மகாதேவனையும் அவருக்கு பக்கபலமாக இருக்கும் கரணையும் அழிக்க நினைக்கிறார் பொன்வண்ணன்.

இதற்கிடையில் கரண் இருக்கும் குப்பத்தில் மற்றொரு நாயகனான சதீஷ் குடியேறுகிறார். மிகவும் நல்லவரான இவர் ஊரில் இருக்கும் தாய், தந்தை மற்றும் மூன்று தங்கைகளை காப்பாற்ற வேண்டி ஒரு அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். ஒரு நாள் சதீஷ் இல்லாத போது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் குடித்துவிட்டு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கிறார் கரண். இதனால் கரண் மீது சதீஷ் கோபமடைகிறார்.

ஒருநாள் கரண் சாலையில் ஒரு பெண்ணை சந்திக்கிறார். உடனே அந்த பெண்ணை அடைய வேண்டும் என்று நினைக்கிறார். சிறிது நேரத்திலேயே அந்த பெண் காணாமல் போகிறார். எப்படியாவது அந்த பெண்ணை தேடி கண்டுபிடித்து அடைய நினைக்கிறார். அப்போது சதீஷ் வீட்டில் இருந்து அந்த பெண் வருவதை பார்க்கிறார். அதன்பின் அந்த பெண் சதீஷின் சகோதரி ஷீபாலி என்று தெரிந்துக் கொள்கிறார். 

பிறகு ஷீபாலியை எப்படியாவது அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தன் நண்பன் ஜெகன் மூலம் சதீஷ் குடும்பத்தின் முழு விவரமும் சதீஷின் அப்பா சதீஷுக்கு எழுதிய கடிதத்தையும் பெறுகிறார். ஷீபாலிக்கு திருமணம் நிச்சயம் செய்திருப்பதாகவும் அதற்கு ஒரு லட்சம் பணம் தேவை என்றும் கரண் அறிகிறார். இதையடுத்து சதீஷுக்கு தெரியாமல் அவருடைய ஊருக்கு தன் நண்பன் ஜெகனுடன் செல்கிறார் கரண். அங்கு சதீஷின் நண்பன் என்று கூறிக்கொண்டு ஒரு லட்சம் பணமும் தருகிறார். பிறகு அவர்கள் வீட்டிலேயே தங்குகிறார். ஷீபாலியின் திருமணத்திற்கு முன்பே அவளை அடைய திட்டம் தீட்டி வருகிறார். ஆனால் அவர்கள் குடும்பமோ கரண் மீது பாசம் காட்டுகிறது. ஒரு விபத்தில் இருந்தும் கரணை காப்பாற்றுகிறார் ஷீபாலி.

இதற்கிடையில் சென்னையில் கரணின் கூட்டாளி என்று நினைத்து சதீஷை போலீஸ் கைது செய்கிறது. பிறகு அவரை வெளியில் அழைத்து வரும் மகாதேவன், அவரை தன்னுடன் வரும்படி அழைக்கிறார். இதற்கு சதீஷ் மறுப்பு தெரிவித்து சென்று விடுகிறார்.

இறுதியில் சதீஷ், மகாதேவன் கும்பலில் சேர்ந்தாரா? ஷீபாலியை அடையும் நோக்கத்தில் சென்ற கரண் என்ன ஆனார்? ரவுடியான பொன்வண்ணன் மகாதேவனையும் கரணையும் தீர்த்து கட்டினாரா? என்பதே மீதிக்கதை.

படத்தில் சதா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கரண், முற்பகுதியில் ஆர்ப்பாட்டமாகவும் பிற்பகுதியில் அமைதியாகவும் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவர் பேசும் குப்பத்து மொழி ஒரு சில இடங்களில் பொருந்தாதது போல் இருக்கிறது. இரண்டாவது கதாநாயகனாக நடித்திருக்கும் சதீஷ் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். நண்பராக வரும் ஜெகன் படம் முழுக்க கரணுடன் சேர்ந்து மற்றவர்களை கலாய்ப்பதும், திட்டுவதும், கோபப்படுவதும் என தன் நடிப்பிற்கு தீனி போட்டிருக்கிறார்.

தந்தையாக வரும் மணிவண்ணன், படம் முழுக்க குடித்துக் கொண்டே இருக்கிறார். குடிப்பதற்காக இவர் செய்யும் முயற்சிகள் ரசிக்கும் படியாக இருக்கின்றன. ரவுடியாக வரும் பொண்வண்ணனின் நடிப்பு அருமை. கூட்டாளிகளை சாப்பிட வைத்து அவர்களை அடிப்பது ரசிக்கும் படியாக உள்ளது. கதாநாயகிகளான அனுமோல், ஷீபாலி ஆகியோருக்கு நடிக்க வாய்ப்பு குறைவு.

பாலாஜியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். செல்வராஜின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் அருமை. 

ஒரு கெட்டவன் நல்லவன் ஆகலாம், ஒரு நல்லவன் கெட்டவன் ஆகக்கூடாது என்ற கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் பாலு நாராயணன், அதை சுருக்கமாக சொல்லியிருக்கலாம். பிற்பாதியில் திரைக்கதையின் விறுவிறுப்பு குறைவு. 

மொத்தத்தில் ‘சூரன்’ சுறுசுறுப்பு இல்லாதவன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget