இந்திய மொழியில் மின்னஞ்சல் முகவரி

நம் மின் அஞ்சல் முகவரிகள் அனைத்தும் தற்போது ஆங்கிலத்தில் தான் அமைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இந்திய மொழிகளில் மின் அஞ்சல் முகவரிகளை அமைப்பது சாத்தியம் என்றாலும், அது குறித்த முயற்சிகள் இதுவரை எடுக்கப்படாமல் இருந்தன. ஆனால், தகவல் தொழில் நுட்ப உலகில்
முதல் இடங்களில் இயங்கும் மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இதனைச் சாத்தியமாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. ரீடிப் நிறுவனத்தின் உதவியுடன் இந்த மாற்றம் அமலுக்கு வரும். இந்திய அரசும், இந்த இரு நிறுவனங்களை விரைவில் இந்த வசதியைத் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளன. 
இந்திய ஜனத்தொகையில், 20% மக்கள் தான் ஆங்கில மொழியைப் பேசி வருகின்றனர். அதாவது, மொத்த மக்கள் 130 கோடிப் பேரில், 26 கோடி பேர் தான், ஆங்கில மொழியைக் கையாளுகின்றனர். ஆனால், இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 2016 ஆம் ஆண்டின் இறுதியில், 46.2 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைப் பயன்படுத்தக் கூடிய மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. எனவே, இந்திய மொழிகளில், மின் அஞ்சல் முகவரிகள் அமைக்க முடியும் என்றால், அது இந்தியர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். 
மைக்ரோசாப்ட், கூகுள், ரீடிப் ஆகிய நிறுவனங்கள் இது குறித்து இந்திய அரசுடன் நடத்திய கூட்டத்தில், தகவல் தொழில் நுட்ப துறையின் இணைச் செயலாளர் ராஜிவ் பன்சால் கருத்து தெரிவிக்கையில், “பாரதி நெட்” என்ற திட்டத்தின் கீழ், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள், வரும் ஐந்து ஆண்டுகளில், அதிவேக இணையத்துடன் இணைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். மின் அஞ்சல் அனைவரின் வாழ்க்கையில் மிக முக்கியம் என்றும், இணைய சகாப்தத்தில், டிஜிட்டல் உலகத்துடன் இணைய, அவரவர் மொழியில் மின் அஞ்சல் முகவரி அமைப்பது முதல் படி என்றும் கூறினார். ஆங்கிலத்தை எத்தனை பேர் படிக்கவும், உள்ளீடு செய்திடவும் முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். 
மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள், இந்திய மொழிகளில், மின் அஞ்சல் முகவரிகளை அமைத்து வழங்க தொழில் நுட்பம் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதில் சம்பந்தப்படுபவர்கள் அனைவரும், ஒரே ஒரு கட்டமைப்பில் வந்து செயல்பட்டால் தான் இது வெற்றிகரமாக அமல்படுத்த முடியும் என்றும் அறிவித்தனர். தற்போது, கிரேக்கம், ரஷ்யன், சீனம் மற்றும் இந்தி மொழிகளில் மின் அஞ்சல் முகவரிகளை அமைக்க முடியும் என்றனர்.
ரீடிப் நிறுவனத் தலைவர் கூறுகையில், இந்த எண்ணமே மிக உற்சாகம் தருவதாக உள்ளது என்று தெரிவித்தார். அதே வேளையில், இந்திய அரசு, மக்களுக்கான இணையக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். இணையத்திலும், இந்திய மொழிகளின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வந்துள்ளதையும் குறிப்பிட்டார். 
இந்திய மொழிகளில் மின் அஞ்சல் முகவரிகள் வரும் பட்சத்தில், இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக வளர்ச்சி அடையும் என்றார்.
மேலும் இந்த மாற்றத்தின் பின்னணியில், இதனை ஊக்குவிக்கும் வகையில், கூகுள் நிறுவனத்தின் 'லூன் திட்டம்' உள்ளது. அணுக முடியாத இடங்களில் வசிப்போருக்கு, விண்ணில் பறக்கும் பலூன்கள் மூலம் இணைய இணைப்பினை இந்தியாவில் வழங்க இருக்கிறது. அதே போல, கூகுள், இந்திய ரெயில் டெல் நிறுவனத்துடன் இணைந்து, இலவச இணைய இணைப்பினை வை பி மூலம் இந்திய ரயில் நிலையங்களில் தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போதைக்கு நாளொன்றுக்கு 20 லட்சம் பேர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது உற்சாகமூட்டும் தகவலாகும்.
மூன்றாவதாக, மலிவான விலையில் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன. இவை இணைய இணைப்பிற்கு எளிதாக வழி அமைத்துத் தருவதால், இவையும் இணையப் பயன்பாட்டினை ஊக்குவித்து வருகின்றன. இந்த சூழ்நிலைகளில், இந்திய மொழிகளில் மின் அஞ்சல் முகவரி என்பது, டிஜிட்டல் இந்தியாவை நோக்கி விரைந்து வரும் இந்திய மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை விரைவில் கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget