ஜிகர்தண்டா விமர்சனம்

நடிகர் : சித்தார்த்
நடிகை : லட்சுமி மேனன்
இயக்குனர் : கார்த்திக் சுபாராஜ்
இசை : சந்தோஷ் நாராயணன்
ஓளிப்பதிவு : கேவ்மிக் யு ஆரி


கார்த்திக் குறும்படம் இயக்குனர். இவருக்கு சினிமா படம் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ரத்தம் தெறிக்க ‘நாயகன்’, ‘தளபதி’ மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கார்த்திக்கிடம் கேட்கிறார். எனவே ஒரு பெரிய ரவுடியின் கதையை படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்கிறார். இதற்காக தமிழ் நாட்டில் உள்ள பிரபல ரவுடிகளை பற்றி அலசுகிறார். அப்போது மதுரையில் பிரபல தாதாவாக சேது ஒருவர் இருப்பதை அறிந்து தன் நண்பனான கருணா வீட்டிற்கு செல்கிறார். அங்கேயே தங்கிக் கொண்டு சேதுவின் வாழ்க்கையை பற்றி தெரிந்துக் கொள்ள முயற்சி செய்கிறார்.

அப்போது சேதுவிடம் நெருக்கமாக இருப்பவர்களை வைத்து சேதுவை நெருங்க நினைக்கிறார். அப்போது சேதுவின் உறவுக்கார பெண்ணான கயலிடம் பழக்கம் ஏற்படுகிறது. கார்த்திக் பழகுவதை கயல் காதல் என்று நினைத்து அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

அதன்பிறகு சேதுவைப் பற்றி தெரிந்துகொள்ள தீவிரமாக முயற்சி செய்கிறார் கார்த்திக். இந்த முயற்சியில் ஒரு அசம்பாவிதம் நிகழ கார்த்திக், சேதுவிடம் மாட்டிக்கொள்கிறார். அப்போது கார்த்திக், நான் ஒரு சினிமா பட இயக்குனர். உங்களைப் பற்றி தெரிந்துகொண்டு அதை படமாக்க முயற் செய்வதாக சேதுவிடம் கூறுகிறார். இதற்கு சேது சம்மதம் தெரிவித்து தான் கடந்து வந்த பாதையை கதையாக கார்த்திக்கிடம் சொல்கிறார். இந்த கதையில் சேதுவே நடிக்க ஆசைப்படுகிறார். இதற்கு கார்த்திக் மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் கோபமடையும் சேது, கார்த்திக்கை கொல்ல நினைக்கிறார்.

இறுதியில் தன்னை காப்பாற்றிக் கொள்ள சேதுவை வைத்து கார்த்திக் படம் எடுத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

முதல் படம் எடுக்க போராடும் கார்த்திக் என்னும் இளம் இயக்குனர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் சித்தார்த். ஆனால் இவருடைய நடிப்பு அழுத்தமாக பதிய வில்லை. லட்சுமி மேனனுக்கு படத்தில் காட்சிகள் குறைவு. ஆனால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

கனமான கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெறுகிறார் சிம்ஹா. சேது கதாபாத்திரத்திற்கு வலுவூட்டியிருக்கிறார். குறிப்பாக கழிப்பறையில் அவரை கொல்ல முயற்சி செய்யும் காட்சியில் அவரின் பாடி லாங்குவேஜ் சிறப்பாக உள்ளது. சித்தார்த் நண்பனாக வரும் கருணாகரன், தன் அப்பாவித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். ஆரண்யகாண்டம் சோமசுந்தரம் வரும் காட்சிகளில் ரசிகர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

கேவ்மிக் யு ஆரியின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். இவருடைய ஒளிப்பதிவில் மழை பெய்யும் காட்சிகளை கூடுதலாக ரசிக்கலாம். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். குறிப்பாக கண்ணம்மா பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையிலும் மிரள வைத்திருக்கிறார்.

வித்தியாசமான கதையை கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுபாராஜ். இடைவேளைக்குப் பிறகு படத்தில் அதிரடியான திருப்பங்களை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். படத்தின் இறுதி வரை அந்த திருப்பங்கள் நீடிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் நீளம் படத்திற்கு பலவீனம்.

மொத்தத்தில் ‘ஜிகர்தண்டா’ சுவைக்கலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget