பறந்து செல்ல வா சினிமா விமர்சனம்

"8 பாயிண்ட் எண்டர்டெயின்மென்ட்" பி.அருமை சந்திரன் தயாரிக்க., "கலைப்புலி இண்டர்நேஷனல்" எஸ்.தாணு, உலகம் முழுமைக்கும் வாங்கி
வினியோகிக்க, தனபால் பத்மநாபன் இயக்கத்தில், நடிகர் நாசரின் வாரிசு லுத்புதீன் கதாநாயகராக நடிக்க, அவரது ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், சைனிஷ் புதுமுகம் நரேலி கெனங் இருவரும் நடிக்க முழுக்க, முழுக்க சிங்கப்பூரில் படமாகியிருக்கும் திரைப்பட ந்தான் "பறந்து செல்ல வா."

காதல், காதல் என்று காதலி கிடைக்காது அலையும் பையனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு இளம் பொண்ணுங்க காதலிக்கவும், கல்யாணம் கட்டிக் கொள்ளவும் கிடைத்தால் அவன் கதி என்ன? என்னும் கருவை சிங்கப்பூரில் கதையாக்கி, காட்சிப்படுத்தியிருக்கின்றனர்.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வேலைக்குப் போய், சரியான காதலி கிடைக்காமல் பார்க்கிற பெண்ணிடம் எல்லாம் பல்லைக் காட்டி, ஜொள்ளை உற்றி என் ஸ்டைலுக்கு ஏத்த மயிலு நீங்க தாங்க... என்றும் லவ்வு, லவ்வு... என்றும் வழிகிற சம்பத்தாக லுத்புதீன் நன்றாகவே நடித்திருக்கிறார். விறுவிறு துரு துரு என்று திரியும் இளம் நாயகர் லுத்புதீனை பார்த்தாலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும் அளவிற்கு மனிதரிடம் ஏதோ ஒரு வித ஈர்ப்பும், நடிப்பும் இருக்கிறது. அதை இந்தப் படத்தில் அவ்வளவு சரியாக பயன்படுத்திக் கொண்டார்களா? இல்லையா..? என்பதை விட, அடுத்தடுத்த படங்களில் சம்பந்தப்பட்டவர்கள்., அப்படியே பயன்படுத்திக் கொண்டால் சிறப்பு.

இப்படக் கதைப்படி, சம்பத் எனும் லுத்புதீனுக்காக, அவரது வீட்டில் பார்த்து பரிசீலித்த சிங்கப்பூர் வாழ் தமிழ் பெண்ணாக, சிங்கப்பூர் மணமகளாக "என் கிஸ் உனக்கு பனிஷ்மென்ட்டா?" எனக் கேட்டபடி வழியும் ஐஸ்வர்யா ராஜேஷ், செம மேட்சாய் இருக்கிறார். வழக்கம் போல் இயல்பாய் நடித்திருக்கிறார்.

அதே கதைப்படி, ஒரு சைணீஷ் - தமிழ் கூட்டணியில் உருவான அழகிய இளம் பெண்ணாக லில்லி அலைஸ் மின்யுவன் எனும் பாத்திரத்தில் சிங்கை வாழ் சீனப் பெண் நரேலி கெனங்கும், நச் சென்று நடித்து ரசிகனை அழகாய் அம்சமாய் டச் செய்திருக்கிறார்.

லுத்புதினின் ரூம்மேட்ஸ் மணியாக சதீஷ், அதேரூம் மேட் "கம்" பப் பார் பாடகர் டக்லஸாக ஜோமல்லூரி, கடன்பட்டு அடி, உதையும் படும் டி.வி புரோகிராம் தயாரிப்பாளர் அருணாக கருணாகரன், லுத்புதீனுக்கு அபார, ஆபாச ஐடியா தரும் அலுவலக நண்பர் மார்க்காக ஓவர் டோஸ் ஆர்.ஜே.பாலாஜி, மிரட்டல் தாதா டி.வி ஓனராக ஏதேதோ பேசும், செய்யும்... பொன்னம்பலம், வழக்கம் போல், மகனை வில்லங்கமாகவே பார்க்கும் அப்பாவாக பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், அதே வழக்கம்போல், புருஷனைத் தூற்றி புள்ளையை போற்றிடும் அம்மாவாக பசங்க சுஜாதா, நாயகரின் அறைத் தோழியர் ஆனந்தி, சுகன்யா, சன்னி பேங்... ஆகிய அனைவரும், அவர்களது நடிப்பும் கனகச்சிதம்.

சத்யராஜ்குமார், பாயன், இப்பட இயக்குனர் தனபால் பத்மநாபன் என மூன்று பேர் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளனர். மூவரது கூட்டு முயற்சியில் நச்-டச்வசனங்கள் ஒகே கதையும், திரைக்கதையும் ..? எம்.வி. ராஜேஷ்குமாரின் படத்தொகுப்பு முன்பாதியை விட, பின் பாதியில் பலே, பலே.

சந்தோஷ் விஜயகுமாரின் ஒளிப்பதிவில் சிங்கப்பூர் பக்காவாக ,முற்றிலும் புதிதாக ஜொலித்திருப்பது ஆறுதல்.

"காதல்" இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் காற்றில் ஏறி மிதக்குதே..., மண் மீது இன்பம் என்ன பெண் தானே..., நதியில் விழுந்து போயேன் ..., வெல்கம் பாய்ஸ் இது ..., சில்லென்று தாக்குதே பார்வை ... , யாருமே தனியாய் இல்லை ... , அடி சாலையோர பூங்காற்றே ... ஆகிய படத்தில் இடம்பெறும் அரை டஜனுக்கு மேலான புதிய பாடல்களைக் காட்டிலும் "நம்ம ஊரு சிங்காரி.." எனும் பழையபாடலின் ரீ-மிக்ஸ் செமயாய் இருக்கிறது . ரசிகனை ஈர்க்கிறது. சுண்டி இழுக்கறது! வாவ்!

தனபால் பத்மநாபன், இயக்கத்தில், "நீ வேணா என்ன பனிஷ்மெண்ட் வேணுமுன்னாலும் கொடு... ஆத்திரமா ஒரு கிஸ்..." கொடுத்து எனக்கு தண்டனை தாயேன்... என்பதும், "தமிழன் தான் போற இடமெல்லாம் அடி வாங்குறான்... அதே தமிழன் தான் அத வேடிக்கையும் பார்க்கிறான்" என்பதும் உள்ளிட்ட அர்த்தபுஷ்டி "பன்ச்" வசனங்கள் படத்திற்கு பக்கபலம். பக்கா பலமும் கூட. அதேசமயத்தில், மொத்தப் படத்தில் முன்பாதி முழுக்க வியாபித்திருக்கும் நாடகத்தன்மை., சற்றே பலவீனம் என்றாலும், இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து, ரசித்த சிங்கப்பூரை, யாருமே பார்த்திராத அழகிய கோணத்தில், கலர்புல்லாக காட்டியிருப்பதிலும், காமெடியாக கதை சொல்லியிருப்பதிலும், லவ் மேரேஜுக்கும், பியூஷன் மேரேஜுக்கும் உள்ள வித்தியாசத்தையெல்லாம் விறுவிறுப்பாய் அலசியிருப்பதிலும்..... "பறந்து செல்ல வா" படமும் அதன் அழகழகான காட்சியமைப்புகளும், செமையாய் ஜொலிக்க முற்பட்டிருக்கிறது.

ஆனாலும், ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்... சிங்கப்பூர் எனும் பின்னணி இருந்தும்.... படத்தில், ஏதோ ஒன்று., இல்லாத குறை. அது என்ன.? என்பது இயக்குனருக்கே வெளிச்சம். அது, ரசிகனுக்கு வெளிச்சமாகாத வரை, "பறந்து செல்ல வா" - படம், "பரபரப்பாய் பறக்கும், இருக்கும்... என நம்பலாம்!"
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget