இன்டர்நெட் வழி டிஜிட்டல் வர்த்தகம்

சென்ற பத்து ஆண்டுகளுக்கு முன்னால், ஆடம்பர வசதி என்று கருதப்பட்ட பிராட்பேண்ட் இணைய இணைப்பு, மிக வேகமாக இந்தியாவில் பரவி
வருகிறது. மக்கள் இதனைத் தங்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக எண்ணத் தொடங்கிவிட்டனர். மொபைல் ஸ்மார்ட் போன் வழியாக இது மிக வேகமாகப் பரவி வருவதாலும், அனைத்து தேவைகளுக்கும் மக்கள் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டதாலும், டிஜிட்டல் பொருளாதாரம் என்ற வகையில் இன்டர்நெட் வழி வர்த்தகம் குறித்து பலமான சிந்தனை இப்போது நாட்டில் உருவாகி வருகிறது. அதனைச் சீரமைத்து நல்ல முறையில் வளரச் செய்திட வேண்டும் என்ற எண்ணமும் அனைவரிடமும் பெருகி வருகிறது. 

இன்றைய நிலையில், இந்தியாவில் இணையப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24.3 கோடியாக உள்ளது. தொடர்ந்து நாள் தோறும் இது அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை உலகில் இரண்டாவது பெரிய எண்ணிக்கையாகும். சீனா இந்த வகையில் முதல் இடத்தையும், அமெரிக்கா மூன்றாவது இடத்தினையும் பெற்றுள்ளன.

பத்து கோடி பேருக்கு மேல் இந்தியாவில் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள, உலகின் மிகப் பெரிய சமூக இணைய தளம் பேஸ்புக், தன் தளத்தினை இந்தியாவில், 8.4 கோடிப் பேருக்கு மேல், மொபைல் போன் வழி பயன்படுத்தி வருவதாகக் கூறியுள்ளது. இது, இணைய இணைப்பிற்கு மொபைல் போனையே தங்களின் முதல் தேர்வாகக்கருதும் ஒரு புதிய சமுதாயம் உருவாகி வருவதைக் காட்டுகிறது. 

இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. மக்களுடைய வருமானம் அதிகரித்து வருகிறது. மொபைல் போன்களின், குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் விலை குறைந்து வருகிறது. இந்திய மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்கள், ரூ.5,000 என்ற விலையை ஒட்டிய ஸ்மார்ட் போன்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்த வகையிலும் வழியிலும், இவை இந்திய மொபைல் சந்தையில் 59 சதவீத இடத்தைப் பிடித்துள்ளன. பாதுகாப்பான குடிநீர் பெறுவது பெரும் சவாலாகக் கருதப்படும் கிராமங்களில் கூட, இப்போது ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகி வருகின்றன.

கடந்த காலத்தில், அதிவேக இன்டர்நெட் இணைப்பு அனைத்து இடங்களிலும் கிடைக்காமல் இருந்து வந்தது. அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட கம்ப்யூட்டர்களும், இணைய இணைப்பினை எட்டாக் கனியாகவே வைத்திருந்தன. மேலும் மக்களும், தகவல்களையும் செய்திகளையும் தெரிந்து கொள்ள செய்தித் தாள்களுக்கும், தொலைக்காட்சி சேனல்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வந்தனர். 

ஆனால், அதிவேக மொபைல் டேட்டா அறிமுகமான பின்னர், இந்நிலை மாறி வருகிறது. இந்திய இணைய சேவை, அதன் பொருளாதார நிலையை உயர்த்தி வருகிறது. 2012ல் பொது வளர்ச்சி 1.6 சதவீதமாக இருந்தது. இது 3.3 சதவீதமாக வரும் 2015ல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய இணையத்தில் பரவலாக ஆங்கில மொழி பயன்படுத்தப்படுவதால், பன்னாட்டு நிறுவனங்கள், மிக எளிதாக இணையம் மூலம் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடிகிறது. இதனால், பயனாளர்களுக்கும் தங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்க அதிகமான ஆப்ஷன்கள் கிடைக்கின்றன.

தொழில் நுட்பத்தினை வழங்க, அமெரிக்க சிலிகான் பள்ளத்தாக்கினை உயர்த்திய இந்திய பொறியாளர்களும் தற்போது இந்தியாவிற்கு திரும்பி, தங்கள் திறனை இந்திய இணையச் சந்தைக்கு அளித்து வருகின்றனர். வேகமாக வளர்ந்து வரும் இணைய வர்த்தகச் சந்தையில் இவர்களின் பங்கு உயர்ந்து வருகிறது. 

பொருட்களை வாங்கிட, இந்திய நுகர்வோர் தற்போது போன் வழியாக இணையத்தை நாடுவதால், அவர்கள் தேர்ந்தெடுத்து வாங்கிட அதிக பொருட்கள் கிடைக்கின்றன. இந்தியாவில், நுகர்வோர் மேற்கொள்ளும் பயணங்கள், கல்வி, சில்லரை வர்த்தகம் மற்றும் வேளாண்மை ஆகியவை இணையத்தால் முற்றிலும் புதிய பரிமாணத்தை அடைந்து வருகின்றன. 

ஒரு காலத்தில் வரிசையில் நின்று, அதற்கென அரை நாள் ஒதுக்கி ட்ரெயின் மற்றும் பஸ் பயணத்திற்கான பயணச் சீட்டினை வாங்க வேண்டியதிருந்தது. இப்போது ஒரு சில நிமிடங்களில் இந்த சீட்டினை வாங்கிடலாம். வாங்கியதை ரத்து செய்து பணத்தையும் பெறலாம். இந்திய ரயில்வேயின் இந்த வர்த்தக இணைய தளம் தான், இந்திய வர்த்தகத்தில் அதிகம் மேற்கொள்ளும் முதல் இட தளமாக இயங்குகிறது.

வேகமாக வளர்ந்து வரும் இந்த இணையச் சந்தையின் பொருளாதார முன்னேற்றத்தினை உணர்ந்து கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் பல, இந்தியாவில் தங்கள் இணையச் சந்தையை உருவாக்கி வழங்கி வருகின்றன. உலக அளவில் இந்த வகையில் முதல் இடத்தில் இயங்கும் அமேஸான் நிறுவனம், இந்தியாவிற்கென தனித் தளத்தினைத் தொடங்கி, மிக நன்றாக மக்களிடம் நம்பிக்கையைப் பெற்று வருகிறது. இரண்டாவது இடத்தில் இபே நிறுவனம், ஸ்நாப் டீல் நிறுவனத்தில் முதலீடு செய்து இயங்கி வருகிறது. 

டிஜிட்டல் வழி வர்த்தகத்தில், இந்தியா புதிய வளமான வெளியைக் கொண்டுள்ளது. மத்திய நிலையில் வாழும் இந்திய மக்களும், கையில் ஸ்மார்ட் போனுடனும், வங்கியில் காசுடனும் பொருட்களை வாங்க பழகிக் கொண்டுள்ளனர். இந்த இரண்டும் இணைந்திருப்பதால் புதிய பொருளாதார மாற்றத்தினை இவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget