லேப்டாப் பேட்டரி வாழ்வை குறைக்கும் குரோம் பிரவுசர்

அண்மையில் வெளியான ஒரு தகவல் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. விண்டோஸ்
பயன்படுத்தப்படும் லேப்டாப் கம்ப்யூட்டரில், குரோம் பிரவுசரைப் பயன்படுத்தினால், அது அதன் பேட்டரியின் திறனை வெகுவாகக் குறைத்து, கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை மந்தப்படுத்துகிறது 
என்பதுதான். அப்படியானால், வேறு பிரவுசர்கள் பேட்டரியின் திறனை, வாழ்நாளைக் குறைப்பது இல்லை என்று பொருளாகிறது. 

இதனை முழுமையாகப் புரிந்து கொள்ள “system clock tick rate” என்பது குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த அளவினை விண்டோஸ் சிஸ்டம் தனக்குள்ளாக வைத்துக் கொண்டிருக்கிறது. நாம் இதனை அறிந்து கொள்ள வேண்டும் எனச் சென்றால், நிச்சயம் இது குறித்துத் தெரிந்து கொள்ளலாம். குரோம் பிரவுசர் திறக்கப்பட்டவுடன், இந்த கிளாக் டிக் வேகத்தினை 1.000ms என செட் செய்து கொள்கிறது.

க்ளாக் டிக் என்பது என்ன? அது இங்கே எப்படி பிரச்னைக்குள்ளாகிறது? விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகள் சிறிய கால இடைவெளியில் மேற்கொள்ளப்படுகின்றன. மின் சக்தியைக் குறைவாகப் பயன்படுத்த, தான் வேண்டப்படாத காலத்தில் ப்ராசசர் “தூங்குகிறது”. வரையறை செய்யப்பட்ட கால இடைவெளியில் எழுந்து தான் செயல்பட வேண்டுமா என்று பார்த்து, சூழ்நிலைக்கேற்ப செயல்படுகிறது. 

இந்த இடைவெளி காலத்தினை குரோம் 1.000ms ஆக குறைத்து செட் செய்கிறது. மாறா நிலையில், இது 15.625 milliseconds ஆக இருக்கும். அதாவது ப்ராசசர், ஒரு விநாடியில் 64 முறை விழித்தெழுந்து என்ன நிகழ்வுகள் நடக்கிறது என்பதனைப் பார்க்கிறது. 

இதனை 1.000ms என செட் செய்திடுகையில், ப்ராசசர் ஒரு விநாடியில் 1000 முறை விழித்தெழுந்து என்ன நடக்கிறது எனப் பார்த்து செயல்படுகிறது. 64க்கும் 1000க்கும் பெருத்த வேறுபாடு உள்ளதே. இதனால், 25 சதவீதம் கூடுதலாக மின் சக்தி உறிஞ்சப்படுகிறது. இந்த கிளாக் ரேட், அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாக விண்டோஸ் சிஸ்டத்தால் செட் செய்யப்படுகிறது. ஒரே ஒரு அப்ளிகேஷன் மட்டும் இதனை மாற்றினால், அனைத்து அப்ளிகேஷன்கள் இயங்குவதும் கெடுக்கப்படுகிறது. இது குறித்து நாம் அறிந்து கொள்வதில்லை என்பதால், இந்த பிரச்னை குறித்தும் அறியாமல் இருக்கிறோம். ஏன், இது ஒரு பிரச்னை என்றே உணர்வதில்லை.
இந்த பிரச்னை குறித்து தெரிந்து கொள்கையில், மற்ற பிரவுசர்கள் இந்த சூழ்நிலையில் என்ன செய்கின்றன? என்ற கேள்வி எழலாம். தற்போது புழக்கத்தில் உள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோர்ர் பிரவுசரில் இந்த டிக் ரேட் பொதுவாக, 15.625ms ஆக உள்ளது. ஆனால், அதிக வேலைப் பளு உள்ள தளத்திற்குச் செல்கையில், இது தானாக உயர்கிறது. எடுத்துக்காட்டாக, யு ட்யூப் தளம் சென்று, அங்கு உள்ள விடியோ பைல் ஒன்றை இயக்கும் போது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இதனை 1.00ms ஆக உயர்த்துகிறது. விடியோ பைலை மூடி, இந்த டேப்பினை மூடும்போது, பழையபடி இந்த வேகம் 15.625msக்குத் திரும்புகிறது. ஆனால், குரோம் பிரவுசர் திறக்கப்படுகையில் இது அதிகமாக்கப்பட்டு, பிரவுசர் மூடப்படும் வரை அப்படியே உள்ளது. மீண்டும் இதனைக் குறைத்து அமைக்கும் திறன் குரோம் பிரவுசருக்குத் தரப்படவில்லை. மைக்ரோசாப்ட், இது போல கிளாக் ரேட்டினை 1.00ms என அமைத்துக் கொள்வது தவறானது என்று கூறுகிறது. பார்க்க: http://msdn.microsoft.com/en-us/windows/hardware/gg463266.aspx 
நம்மில் பலர், குரோம் பிரவுசரை மூடுவதே இல்லை. எடுத்துக்காட்டாக, நான் ஜிமெயிலை என் மின் அஞ்சலாகப் பயன்படுத்துகிறேன். இதனை எப்போதும் திறந்து பார்க்க, குரோம் பிரவுசரைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன். எனக்கு மெயில் வருகிறதோ, இல்லையோ, குரோம் பிரவுசர் திறந்தே இருக்கும். அதனால், என் லேப்டாப் கம்ப்யூட்டரின் பேட்டரி பவர் அதிகம் எடுத்துக் கொள்ளப்படும் சூழ்நிலையிலேயே இயங்கும்.

டெஸ்க்டாப் பெர்சனல் கம்ப்யூட்டரில் இதனை நான் அளந்து பார்க்க முடிந்தது. எந்தப் பணியும் மேற்கொள்ளாத சூழ்நிலையில், குரோம் பிரவுசர் திறந்த நிலையில், பெர்சனல் கம்ப்யூட்டரின் மின்சக்தி பயன்பாடு 15 முதல் 20 வாட் ஆக உள்ளது. குரோம் பிரவுசரை மூடுகையில், மின் சக்தி பயன்பாடு 12 முதல் 15 வாட்ஸ் ஆக இருந்தது. இந்த மின் சக்தி கூடுதல் அல்லது குறைதல் பெரிய பிரச்னையை ஏற்படுத்துவதில்லை. ஆனால், லேப்டாப் கம்ப்யூட்டரில் இது பிரச்னையை ஏற்படுத்தும். ஏனென்றால், இங்கு மின் சக்தி பயன்பாடு என்பது நாம் தொடர்ந்து கண்காணித்து செம்மைப் படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். தேவை இல்லாமல், நாம் லேப்டாப் கம்ப்யூட்டரின் பேட்டரி சக்தியை வீணடிக்க வேண்டியதில்லை.

இந்த பிரச்னை மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் ஏற்படுவதில்லை. ஏனென்றால், அவை “tickless timers” என்ற ஒன்றைப் பயன்படுத்துகின்றன. ஆனால், நாம் அதிகம் பயன்படுத்துவது விண்டோஸ் சிஸ்டம் மட்டுமே. எனவே, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண பலரும் முயன்று வருகின்றனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களில் இந்த பிரச்னை இல்லை. மீடியா பைல்களை இயக்கும் போது மட்டும் சற்று கூடுதலாக மின்சக்தி பயன்படுத்த முனைகின்றன. மற்ற நேரங்களில், செட் செய்த அளவிற்கு மேல் செல்வது இல்லை. மைக்ரோசாப்ட் இது குறித்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கலாம்.
ஆனால், அதுவரை என்ன செய்திடலாம்? கூகுள் இந்தப் பிரச்னையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. கூகுள் பிரச்னையைத் தீர்வுக்கு என எடுத்துக் கொள்ளும்போதுதான், தீர்வினை எதிர்பார்க்கலாம். பயனாளர்கள் அனைவரும், கூகுள் நிறுவனத்தின் பக் ட்ரேக்கரில் (https://code.google.com/p/chromium/issues/detail?id=153139) இந்தப் பிரச்னையைப் பதியலாம். அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்கள், இது குறித்துப் பதிவு செய்தால், கூகுள் இதனைத் தீவிரமான ஒன்றாகக் கருதலாம். 
அடுத்த தீர்வு, குரோம் பிரவுசர் பயன்படுத்துவதை நிறுத்தி, இன்டர்நெட் எக்ஸ்புளோர்ர் அல்லது பயர்பாக்ஸ் பிரவுசருக்கு மாறுவதே. ஆனால், இந்த இரண்டு பிரவுசர்களில் உள்ள மற்ற பிரச்னைகள் இவற்றைப் பயன்படுத்துவதில் தயக்கத்தினை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்த பிரச்னையை உணர்ந்த பலரும், ”என்ன ஆனாலும் சரி, குரோம் பிரவுசரையே பயன்படுத்துவோம்” என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

ஆனால், கூகுள் நிறுவனத்தின் பிரவுசர் வல்லுநர் குழுவிற்கு இந்த பிரச்னை சென்றதாகவும், இது குறித்தும் இதற்கான தீர்வு குறித்தும் ஆய்வு செய்து தீர்வினைக் கண்டறியும்படி கூகுள் வல்லுநர் குழுவிற்கு அறிவுரை கூறியுள்ளதாகவும் அண்மைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, தீர்வுக்குக் காத்திருக்கலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget