தமிழ்ச்செல்வனும் கலைச்செல்வியும் சினிமா விமர்சனம்

நடிகர் : ராஜேஷ்
நடிகை : கலை அனாமிகா
இயக்குனர் : பாண்டியன்.பி
இசை : சந்திரா பார்ஸ்
ஓளிப்பதிவு : எம்.ஏ.ராஜதுரை


தமிழ்ச்செல்வன் ராணிப்பேட்டையில் வசிக்கும் பிரபல ரவுடி. இவன் கட்டப்பஞ்சாயத்து, ஆள்பலம் கொண்ட காசி என்ற தாதாவிடம் அடியாளாக வேலை பார்க்கிறான். காசி சொல்லும் வேலைகளை தனது நண்பர்களுடன் சேர்ந்து செய்து முடித்து வருகிறார் தமிழ்ச்செல்வன். 

அதே ஊரைச் சேர்ந்த கலைச்செல்வி நர்சிங் படித்து முடித்துவிட்டு காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ராணிப்பேட்டையில் வசிக்கும் கலைச்செல்வி தோழியின் செல்போன் தொலைந்து போய்விடுகிறது. அந்த செல்போனை தமிழ்ச்செல்வனின் நண்பர்கள் எடுத்துவிடுகிறார்கள். 

அப்போது தோழிக்கு போன் செய்கிறாள் கலைச்செல்வி. அந்த போன் தமிழ்ச்செல்வன் நண்பர்கள் வசம் இருப்பதால் தமிழ்ச்செல்வன் வாங்கி பேசுகிறான். அப்போது எதிர்முனையில் பேசும் கலைச்செல்வி அது தன்னுடைய தோழியின் செல்போன் என்றும், அதை அவளிடம் ஒப்படைக்குமாறும் அவனிடம் கெஞ்சுகிறாள்.

அவளிடம் தோழியின் முகவரியை வாங்கிக்கொண்டு அவளது வீட்டுக்கு சென்று ஒப்படைக்கின்றனர். அப்போது நாயகி தோழியின் செல்போனில் சார்ஜ் இறங்கிவிட, நாயகன் தன்னுடைய போனை கொடுத்து நாயகிக்கு போன் போடச் சொல்கிறான். அதன்மூலம் இருவரும் தங்கள் செல்போன் நம்பர்களை பகிர்ந்து கொள்கின்றனர். 

இதன்பின்னர் தமிழ்ச்செல்வனின் செல்போனுக்கு நாயகி போன் செய்து அவனை பற்றி விசாரிக்கிறாள். இவனும் அவளிடம் தான் ஒரு ரவுடி என்று சொல்கிறான். இதனால் மனவேதனையுடன் நாயகி அவனை மாற்ற முயற்சிக்கிறாள். இவனும் திருந்தி வாழ முடிவெடுக்கிறான். நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளாமலேயே இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. தன்னுடைய பிறந்தநாள் அன்று அவனிடம் காதலை சொல்வது என முடிவெடுத்திருக்கிறாள் நாயகி.

இந்நிலையில், காசிக்கு காஞ்சிபுரத்தில் இருக்கும் ஒரு பெண்ணை கொலை செய்யவேண்டும் என்ற வேலை வருகிறது. அந்த வேலையை தமிழ்ச்செல்வனிடம் ஒப்படைக்கிறார். தமிழ்ச்செல்வனோ அந்த வேலையை செய்ய தயங்குகிறான். காசியோ இந்த வேலையை செய்தால் பெரிய தொகை கிடைக்கும். அதை வைத்து செட்டிலாகிவிடலாம் என ஆசை வார்த்தைகூறி அவனை சம்மதிக்க வைக்கிறான்.

அந்த பெண்ணை தேடி காஞ்சிபுரத்துக்கு செல்கிறான் தமிழ்ச்செல்வன். காஞ்சிபுரத்தில் தமிழ்ச்செல்வன் அழைந்து கொண்டிருக்கும் வேளையில் காசிக்கு, தான் கொலை செய்யச் சொன்னது தமிழ்செல்வனுடைய காதலியான கலைச்செல்விதான் என்பது தெரிய வருகிறது. நண்பனுக்காக அந்த கொலையை செய்ய வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கிறான். பின்னர், தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்ல நினைக்கிறான். ஆனால், அவனது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகிவிடுவதால் அவனை தொடர்பு கொள்ள முடிவதில்லை.

இறுதியில் தமிழ்ச்செல்வன் கலைச்செல்வியை கண்டுபிடித்து அவளை கொலை செய்தானா? அவள்தான் தன்னுடைய காதலி என்பதை தமிழ்ச்செல்வன் அறிந்தானா? கலைச்செல்வியை கொலை செய்யச் சொல்ல காரணம் என்ன? என்பதை பிற்பாதியில் விளக்கியிருக்கிறார்கள்.  

தமிழ்ச்செல்வனாக ராஜேஷ் படம் முழுக்க ஒரே முகபாவணையில் நடித்து அனைவருக்கும் வெறுப்பை கொடுத்திருக்கிறார். இவரை ஒரு ரவுடியாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இவருடைய நண்பர்களாக வரும் மகேந்திரன், தில்சா, பாப் சுரேஷ் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். 

நாயகி கலை அனாமிகா, கருணையான முகத்துடன் அனைவரையும் கவர்கிறார். இறுதியில் இவர் கதறி அழும் காட்சியில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அடியாளாக வரும் ராம்ஸ் மனிதநேயத்துடன் கூடிய வில்லனாக மனதை கவர்கிறார். மருத்துவமனை அதிபராக வரும் அசோக் பாண்டியன் வில்லத்தனத்தில் அழுத்தம் இல்லை.

விறுவிறுப்பான கதை, ஆனால் அதை அழகான திரைக்கதையாக அமைக்க தவறியிருக்கிறார் இயக்குனர் பி.பாண்டியன். பெரும்பாலான காட்சிகளை நீளமாக வைத்தது, அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்கக்கூடிய காட்சிகளாக அமைத்தது என படத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கிறது. அதேபோல் படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். 

குறிப்பாக, காஞ்சிபுரத்தில் ஒரு பெண்ணை கொலை செய்வதற்காக கொடுக்கப்படும் போட்டோ செய்தித்தாளில் இருப்பதாக கொடுக்கப்படுகிறது. அந்த செய்திதாளில் அந்த பெண்ணின் புகைப்படம் மட்டுமே இருக்கிறது. அதற்கான செய்தியோ, அவளைப் பற்றிய ஒரு சிறு குறிப்போ அந்த செய்தித்தாளில் இடம்பெறவில்லை. இயக்குனர் எந்த செய்தித்தாளில் செய்தியில்லாமல் புகைப்படத்தை மட்டும் பார்த்தாரோ தெரியவில்லை. இதுபோல் லாஜிக் மீறலான நிறைய காட்சிகள் படத்தில் இருக்கின்றன.

ராஜதுரையின் ஒளிப்பதிவு தேசிய நெடுஞ்சாலையை அழகாக படமாக்கியிருக்கிறது. மற்ற இடங்களில் பெரிய அளவில் முயற்சி எடுக்காதது தெரிகிறது. சந்திரா பார்ஸ் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் பேசும்படி இல்லை.

மொத்தத்தில் தமிழ்செல்வனும் கலைச்செல்வியும் மனதோடு சேரவில்லை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget