முதல் தகவல் அறிக்கை பற்றி தெரியுமா

‘நிலா நிலா ஓடி வா’ என்று நிலவை துணைக்கு அழைத்து பிள்ளையின் பசியாற்றிய அம்மாக்கள் அன்று. நிலவுக்கே சென்று ‘பூமாதேவியே ஓடி வா’
என்று நிலவிலிருந்து பூமியை காட்டி பிள்ளையின் பசியாற்றும் விஞ்ஞான வளர்ச்சியை எட்டிய நிலையில் இருக்கும் அம்மாக்கள் இன்று. மனிதன் மண்ணுலகம் கடந்து விண்ணுலகிலும் தன் திறமையாலும் விஞ்ஞான அறிவாலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் இன்றைய நாளிலும், ஏனோ நம் சமுதாயம் பெண்களை ஆண்களுக்கு நிகரான சமதளத்தில் வைத்துப் பார்க்க மறுக்கிறது. அதிலும் சட்டம் என்று வரும்போது, பெண்களைப் பாதுகாக்க பல சட்டங்கள் இயற்றப் பட்டும் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டும் நடைமுறையில் இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு சட்டப்பிரச்னை ஏற்படும்போதோ, சட்டத்தின் உதவியை நாடும் நிலை வருகையிலோ எதுவும் எளிதாக இல்லை. 

தங்களுக்கான சட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது, அதன் பயனை எவ்வாறு முழுமையாக அடைவது என்று அறியாமலேயே கண்ணை கட்டி காட்டில் விட்டவர்கள் போலவே அவர்கள் நிலை இன்றும் இருக்கிறது. ஏழை, எளிய, படிக்காத, பாமரப் பெண்களுக்கு மட்டுமல்ல... பணம் படைத்த, படித்த, மேட்டுக்குடிப் பெண்களுக்கும் பெரும்பாலும் இதே நிலைதான். இப்புதிய பகுதியின் நோக்கம்... மக்களுக்காக இயற்றப்பட்டு அவர்களின் பயன்பாட்டுக்காகவே உள்ள சட்டங்களை எவ்வாறு பயன் படுத்துவது என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே. பொதுவாக மக்கள் சில சட்டச் சொற்றொடர்களை அதன் உண்மையான விளக்கத்தை அறியாமலேயே, பயன்படுத்தும் நிலை இருந்து வருகிறது. இதிலும், ஆண்களைவிட பெண்களின் புரிதலும் அறிதலும் மிகவும் குறைவாகவே உள்ளன.   

அனைவரும் நிம்மதியான, அமைதியான வாழ்வை வாழ்வதற்கே பிரியப்படுகிறோம். இருப்பினும், ஏற்ற இறக்கங்கள் பல கொண்ட இச்சமுதாயத்தில் நாம் எதிர்பாராமல் சில பிரச்னைகளை சந்திக்க நேரலாம். அவ்வாறு சட்டச் சிக்கல்களை எதிர்நோக்கும் நிலையில் படபடப்பு, இயலாமை, குழப்பம் என்று செய்வதறியாது நிற்கக்கூடிய நிலை பலருக்கும் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. அதிலும் ஒரு பெண் தன்னிச்சையாகவோ  துணையுடனோ கூட  போராடுவது மிகவும் கடினம் எனினும், கலங்க வேண்டியதில்லை. சி.பி.முத்தம்மா, பன்வாரி தேவி, ரூபன் டியோல் பஜாஜ் உள்பட சட்டத்துக்குச் சவால் விட்ட பெண்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே இருக்கிறது. அவர்கள் சந்தித்த பிரச்னைகளும் போராட்டங்களும் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகள். 

எல்லா இந்தியப் பெண்களுக்கும் இவ்வாறான ஒரு விடிவு வருவதில்லையே... ஏன்? 

ஒரு குற்றம் நடைபெறும்போது நாம் பாதிக்கப்பட்டவராகவோ, பாதிக்கப்பட்டவருக்கு உறுதுணையாகவோ இருக்கக்கூடிய நிலையில் அடுத்து என்ன செய்வதென அறியாமல் இருக்கும் நிலையில், ஆளாளுக்கு யோசனைகளை அள்ளி வீசும் போது குழப்பங்கள் அதிகமாகின்றன.  ஓரளவு சட்ட நுணுக்கங்களை  குறிப்பாக பெண்கள்  அறிந்து வைத்திருந்தால் பிரச்னைகளை எதிர்கொள்வது சற்று எளிதாக இருக்கும்.   திமிஸி (First Information Report) என்ற ‘முதல் தகவல் அறிக்கை’க்கான சொற்றொடரை பலரும் பயன்படுத்துவதை அறிகிறோம். ஆனால், இதற்கான விளக்கமோ, பயன்பாடோ, முக்கியத்துவமோ பலருக்குத் தெரிவதில்லை. 

குறிப்பாக நம் நாட்டுப் பெண்கள் பாதிக்கப்படும் போது, சமுதாயம் அவர்களை பாதிக்கப்பட்ட நபர்களாக பார்ப்பதை விடவும், குற்றத்துக்கு உடந்தையானவர்கள் போல  ஏன் குற்றவாளிகளைப் போல  அவர்கள் மீது பாய்ச்சும் பார்வை, அவர்களை சட்டத்தின் உதவியை நாடுவதையே தடை செய்கிறது. ‘காவல் துறை உங்கள் நண்பன்’ என்று கூறிவந்தாலும்கூட, சிலர் அவர்களை நாடி வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்பதோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு உணர்வு அளிப்பதோ, ‘பிரச்னையை தீர்த்து விடுவோம்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதோ இல்லை. இதன் காரணமாகவே பாதிக்கப்படும் பெண்களில் பலர் காவல் துறையினரை அணுகவே யோசிக்கிறார்கள்... தயங்குகிறார்கள்... சில நேரங்களில் பயப்படுகிறார்கள். 

பெண்களுக்கு எதிராக குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, வரதட்சணை கொடுமை, ஆட்கடத்தல், கொலை முயற்சி, கொலை என்று பல்வேறு தரப்பான குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டுதானே இருக்கின்றன? பாதிக்கப்பட்ட பெண்கள் இவ்வாறான வன்முறையிலிருந்து தங்களை காத்துக்கொள்ள தக்க தருணத்தில் காவல் நிலையத்தை நாடினாலும் அவர்களின் புகார் சரியான முறையில் பதிவு செய்யப்படுகிறதா என்று அறிந்துகொள்ள முடியாத ஒரு நிலைதான் இன்றளவும் உள்ளது. ஒரு குற்றத்தை காவல் துறையினரிடம் எடுத்துச் சென்று, அதை முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்து பெறுவது என்பது மலையையே உடைக்கும் செயல்தான். 

அதனாலேயே பெரும்பாலும் ஒரு குற்றம் நடைபெற்றாலும், அத்தகவலை காவல் துறையினரிடம் தெரிவிக்காமல் இருக்கிறார்கள். இந்த கால விரயத்தின் விளைவாக பல கொடிய குற்றவாளிகள் தப்பிக்கவும் செய்கிறார்கள். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, பாதிப்பினால் ஏற்பட்ட வலியை விட, தாங்கள் குற்றம் புரிந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க இயலாத நிலையில் இருப்பதே அதிக மனவேதனை அளிக்கும்.

1861ல் ஆங்கில அரசால் இயற்றப்பட்ட போலீஸ் சட்டத்தையே, இந்திய காவல் துறை இன்றும் பெரிதும் பின்பற்றுகிறது. அன்றைய நிலையில் இச்சட்டம் இயற்றப்பட்ட போது, சட்டம் ஒழுங்கை பராமரிப்பதையே தலையாய கடமையாகக் கொண்டிருந்தது. குடிமக்களின் உரிமையை பெரிதும் பொருட்படுத்தாத ஒரு நிலை. இன்றைய நிலையோ வேறு. கால மாற்றத்துக்கு ஏற்ப அச்சட்டத்தில் பல திருத்தங்கள் வரவேண்டியது அவசியம். ‘காவல் நிலையத்தில் ஓரளவுக்கு அதிகமாக வழக்குகள் பதிவானால், அந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கருதுவார்கள்’ என்றும் சில நேரங்களில் வழக்கு பதிவு செய்வதைத் தவிர்க்கும் நிலை உள்ளது.  

குற்றத்தைப் பதிவு செய்வதில் பாரபட்சம், விருப்பு வெறுப்பும் நிலவுகிறது. ‘சமரச முயற்சி’ என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்துகளும் காவல் நிலையத்தில் நடைபெறுவது சட்டத்துக்கும் தர்மத்துக்கும் புறம்பான செயலே.  FIR என்ற மூன்றெழுத்து மந்திரமே குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவாகும் ஒரு வழக்குக்கான அஸ்திவாரம். ஒரு தவறான திமிஸி ஒரு வழக்கையே குழி தோண்டி புதைத்துவிடும். குற்றவியல் சட்டத்தின் ஆக்சிஜனே திமிஸி என்று கூறலாம். குற்ற வழக்குகள் திமிஸி அடிப்படையிலேயே நீதிமன்ற விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. 

முதல் தகவல் அறிக்கையை யார், எங்கு புகார் தாக்கல் செய்யலாம்?

பாதிக்கப்பட்ட நபரோ, அவருடன் துணை வருபவரோ குற்றம் நடந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தின் ஆய்வாளரிடமோ, அவரின் கீழ் பணிபுரியும் காவலர்களின் முன்போ புகாரினை பதிவு செய்யலாம். குற்றம் பற்றி அறிந்த யாரேனும் ஒருவர் கூட புகாரை தாக்கல் செய்யலாம். அவர் கண்கூடாக பார்க்காவிட்டாலும், செவிவழியாகக் கேட்ட செய்தியாக இருப்பினும், புகாராகப் பதிவு செய்யலாம்.  

முதல் தகவல் அறிக்கையை எவ்வாறு பதிவு செய்யலாம்?

வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ காவல் நிலைய ஆய்வாளரிடமோ, புகாரை பெற்றுக்கொள்ளும் பொறுப்பிலிருக்கும் காவல் அதிகாரியிடமோ புகாரை பதிவு செய்யலாம். நாம் கொடுக்கும் தகவல்களை அவர்கள் பதிவு செய்த பின்னர், புகார் கொடுப்பவர் கையொப்பமிட வேண்டியது அவசியம். ஒரு முறை முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டு நிறைவடைந்து விட்டால், நீதிமன்றத்தின் முன் அனுமதி இல்லாமல் அதனை திருத்துவது இயலாத காரியம்.  

CSR என்றால் என்ன?

பெரும்பாலும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தவுடன் அதனை பதிவு செய்து விட்டு CSR (Community Service Register) பதிவு செய்து கொடுப்பார்கள். பெரும்பாலான ‘No ncognizable’ என்று சொல்லக்கூடிய பிடியாணையுடன் கைது செய்யக்கூடிய குற்றங்களுக்கு CSR மட்டுமே தருவார்கள். Cognizable என்று சொல்லக்கூடிய பிடியாணை இல்லாமல் கைது செய்யக்கூடிய குற்றங்களுக்கு மட்டுமே முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய இயலும்.  

காவல் துறையினர் புகார் பதிவு செய்ய மறுத்தல்

மக்கள் கொடுக்கும் புகாரினை காவல் துறையினர் பதிவு செய்ய மறுக்கிறார்கள் என்பதுதான் பரவலான குற்றச்சாட்டு. காவல் துறையினர்தங்கள் முன் வரும் புகார்களில் முகாந்திரங்கள் இருக்கும் பட்சத்தில் ஒரு CSR அல்லது திமிஸி பதிவு செய்வது அவசியம். அவ்வாறாக பதிவு செய்ய மறுப்பது சட்டத்தின் முன் ஏற்புடைய செயல் அல்ல. பதிவு செய்ய மறுக்கும் பட்சத்தில் தலைமை காவல் அலுவலருக்கு பதிவு தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ புகாரை அனுப்பி பதிவு செய்யலாம். அப்படியும் பதிவு செய்யப்படவில்லை எனில் நீதிமன்ற ஆணை பெற்று பதிவு செய்ய சட்டத்தில் வழிஉண்டு. காவல் துறையினர் புகாரை பதிவு செய்வதுடன் முதல் தகவல் அறிக்கையின் ஒரு நகலை புகார் கொடுப்பவருக்கு இலவசமாக அளிப்பது சட்டப்படி அவசியம்.  

முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்படும்போது கவனிக்க வேண்டியவை...

முதல் தகவல் அறிக்கையை குற்றம் நடைபெற்றவுடன் காலதாமதம் இல்லாமல் உடனடியாக தாக்கல் செய்வது அவசியம். சில நேரங்களில் பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை அல்லது மனநிலை காரணமாகவோ, குற்றம் நடைபெற்றதையே காலம் தாழ்த்தி அறிந்துகொண்ட காரணத்தினாலோ, சில நேரங்களில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற சட்ட புரிதல் இல்லாத காரணத்தினாலோ, குற்றம் நடைபெற்ற எல்லை எந்தக் காவல் நிலையத்துக்கு உட்பட்டது என்ற குழப்பத்தின் காரணமாகவோ, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும் அந்த தாமதத்தை தவிர்ப்பது அவசியமே.

புகார் கொடுப்பவரின் வார்த்தைகளிலே, அவர் கொடுப்பது போலவே புகார் பதிவு செய்யப்படுகிறதா என்பதை அறிந்து கொள்வது அவசியம். முதல் தகவல் அறிக்கையில் எளிமையான வார்த்தைகளில் குற்றம் நடைபெற்ற இடம், தேதி, நேரம், ஏதாவது பொருட்சேதம் இருப்பின் அதனைப் பற்றியும், உயிர் இழப்பு இருப்பின் அதனைப் பற்றியும் குற்றத்துக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள், சந்தேகப்படக்கூடிய நபர் என்று அனைத்தையும் தெளிவுபட குறிப்பிட வேண்டும். உதாரணமாக ஒருவேளை சாலைவிபத்து எனில் அதைப்பற்றிய புகாரினை தாக்கல் செய்யும் போது விபத்துக்குள்ளான மற்றும் விபத்தை ஏற்படுத்திய வாகன எண், அதன் நிறம், அதைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர் என்று புகார் கொடுப்பவருக்குத் தெரிந்த அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

FIR  தயாரிக்கப்பட்ட பின், புகார் கொடுப்பவரின் கைரேகையோ, கையொப்பமோ பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம். புகார் கொடுப்பவர் தெளிவான மனநிலையில் எந்தவித விருப்பு வெறுப்பும் காட்டாமல், புகாருக்குத் தேவையான செய்திகளை மட்டுமே, குற்றத்தின் வீரியத்தை அதிகப்படுத்தவோ, குறைக்கவோ முயற்சி செய்யாமல் பதிவு செய்வது அவசியம். பொதுவாக புகாராக ஒரு நபரிடமிருந்து நேரடியாகவோ, வாய்மொழியாகவோ கூறப்பட்டதே பதிவு செய்யப்படுகிறது. பெரும்பாலும் தொலைபேசி மூலமாகவோ, கையொப்பமிடாமல்  புகார் கூறுவது யாரென்று தெரியாமல் அனுப்பப்படும் புகாரினையோ, காவல் நிலையத்தில் பொறுப்பிலிருக்கும் ஆய்வாளர் அல்லது காவலர்களைத் தவிர்த்து வேறு யாரிடமோ கொடுக்கப்படும் புகாரினையோ பதிவு செய்ய இயலாது. எனினும், ஒருசில சூழல்களில் தொலைபேசி மூலம் வரும் புகாரினையும் முதல் தகவல் அறிக்கைக்கு இணையாகக் கருதும் நிலை இருந்திருக்கிறது.

Sukharam Vs State of Maharastra (1969) 

3 SCC 730 என்ற வழக்கில், அடிபட்ட நபரினை பற்றி தொலைபேசி மூலம் காவல்துறையினருக்கு தெரிவித்ததே ‘முதல் தகவல் அறிக்கை’ ஆகும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புகார் கொடுப்பவர் பொய்யான புகார் அளித்தலும், அதனை பதிவு செய்யும் காவல் அதிகாரி குற்றவாளியை காப்பாற்றும் எண்ணத்தில் தவறான முறையில் பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கையும் சட்டத்தின் முன் குற்றச்செயலாக கருதப்படும். அதற்கு இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டனையும் உண்டு. 

சமீபத்தில் சென்னை நகரின் தலைமை ஆணையர் குற்றங்களை பதிவு செய்து FIR அல்லது CSR பெற ஒரு தொலைபேசி எண்ணை அளித்திருக்கிறார்கள் (04425615086). எந்த காவல் நிலையங்களில் எல்லாம் காவல் துறையினர் குற்றத்தை பதிவு செய்ய மெத்தனப்போக்கு காட்டுகிறார்களோ, அப்போதெல்லாம் தலைமை காவல் நிலையத்துக்கான இந்த எண்ணைச் சுழற்றி புகாரை பதிவு செய்யலாம். 

இந்த புதிய முயற்சி பாராட்டத்தக்கது. இதுபோன்ற மக்கள் நல செயல்களில் ஈடுபட்டு, சிறப்புத் திட்டங்களை வகுக்கும்போது, மக்களுக்கு காவல் துறையினர் மீது நம்பிக்கை பிறக்கும். குற்றமற்றச் சமுதாயத்தில் வாழ வேண்டுமென்ற பேராவல் இருந்தாலும் அந்த ஆவல் நிறைவேறுவது என்பது இன்றைய நிலையில் எட்டாக் கனியாகவே உள்ளது. எனினும், சமுதாயத்தில் குற்றங்களின் எண்ணிக்கையையும், குற்றவாளிகளின் பெருக்கத்தையும் குறைக்க வேண்டுமென்றால் மக்களின் பங்கும் அவசியம். 

காவல் துறையும் நீதித்துறையும் மட்டுமே இணைந்து குற்றங்களைக் களைந்துவிடுவார்கள் என்று பொதுமக்கள் மத்தனப்போக்கு காட்டுவதை விடுத்து, அவர்களுடன் இணைந்து செயல்படுவது முக்கியம். சட்ட உரிமைகளை கேட்க குரல் கொடுக்கும் நாம், நம்முடைய கடமையை நிறைவேற்றுவதும் அவசியம்தானே? பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகிக்கொண்டு வரும் இன்றைய நிலையில், அவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட விழிப்புணர்வும் அவசியம் தேவை.  கடமையை செய்வோம்... உரிமையை காப்போம்!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget