காதலுக்கு கண்ணில்லை சினிமா விமர்சனம்

நடிகர் : ஜெய் ஆகாஷ்
நடிகை : அலிஷா தாஸ்
இயக்குனர் : ஜெய் ஆகாஷ்
இசை : யு.கே.முரளி
ஓளிப்பதிவு : தேவராஜ்


நாயகன் முரளி (ஜெய் ஆகாஷ்) காதலுக்கு கண்ணில்லை என்னும் படத்திற்காக சிறந்த நடிகர் விருதையும், இப்படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனர் விருதையும் பெறுகிறார். அப்போது அந்த விழாவிற்கு வந்திருக்கும் ஷிவானி (நிஷா) முரளியை பார்த்ததும் காதல் வயப்படுகிறார். பின்னர் முரளியிடம், தான் அவரது ரசிகை என்றும் அவரை நேசிப்பதாகவும் கூறுகிறார். இதை முரளியுடன் இருந்து கவனித்த முரளியின் அம்மா இந்து, ஷிவானியை ஒரு நாள் வீட்டிற்கு வரும்படி அழைத்துவிட்டு சென்று விடுகிறார்.

அதன்பின்னர் ஷிவானி, முரளி குடும்பத்துடன் பழக ஆரம்பிக்கிறார். முரளியின் அம்மாவிற்கு ஷிவானியை பிடித்து விடுகிறது. ஆதலால் முரளியிடம் ஷிவானியை திருமணம் செய்து கொள்ளும்படி கூறுகிறார். முரளியும் தன் அம்மாவின் முடிவிற்கு சம்மதம் தெரிவித்து, ஷிவானியை காதலிக்க ஆரம்பிக்கிறார். 

பின்னர் முரளி-ஷிவானி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள். அப்போது முரளியின் அப்பா திருமணத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று ஷிவானி வீட்டில் நிபந்தனை விதிக்கிறார்கள். இதற்கு முரளி எதிர்ப்பு தெரிவித்து, என் அப்பா கலந்துக் கொண்டால்தான் இந்த திருமணம் நடக்கும் என்றால் எனக்கு இந்த திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டு கோபத்துடன் செல்கிறார்.

முரளியின் அப்பா யார்? எதற்காக அவரை வெறுக்கிறார்? ஷிவானியை முரளி திருமணம் செய்துகொண்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

இப்படத்தில் முரளி மற்றும் ஆனந்த் என்னும் இரண்டு கதாபாத்திரங்களில் ஜெய் ஆகாஷ் நடித்திருக்கிறார். முரளி கதாபாத்திரத்தில் அமைதியாகவும், ஆனந்த் கதாபாத்திரத்தில் ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கிறார். ஆனால் ஆனந்த் கதாபாத்திரத்தில் அளவோடு இல்லாமல் அளவிற்கு மீறிய நடிப்பாக எண்ணத் தோன்றுகிறது. இரண்டு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசம் காண்பிக்க முயற்சி செய்திருக்கிறார். 

நாயகி அலிஷா தாஸ் திறமையாக நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட திறமையாக அழுதிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். படம் முழுக்க அழுது கொண்டே இருக்கிறார். நிறைய சிரமப்பட்டு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். ஆனால், பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக வந்து ரசிகர்களை கவர்கிறார். மற்றொரு நாயகியான நிஷாவிற்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. ஜெய் ஆகாஷின் அம்மாவாக நடித்திருக்கும் இந்து சிறப்பாக நடித்திருக்கிறார். 

யு.கே.முரளியின் இசையில் 2 பாடல்கள் மட்டும் கேட்கும் ரகம். தேவராஜ் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம். ஒரு பெண், சைக்கோவாக இருக்கும் ஒருவனை நல்லவன் என்று நம்பி காதலித்து திருமணம் செய்துகொண்டு, அவனால் அந்த பெண்ணின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை கதைக்கருவாக வைத்துள்ளனர். ஆனால், திரைக்கதையில் கோட்டை விட்டிருப்பது படத்திற்கு பின்னடைவு. மேலும் தேவையற்ற காட்சிகளையும் லாஜிக் இல்லாத காட்சிகளையும் இயக்குனர் ஜெய் ஆகாஷ் தவிர்த்திருக்கலாம். 

மொத்தத்தில் ‘காதலுக்கு கண்ணில்லை’ வலுவில்லை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget