ரோகித் சர்மாவின் விஸ்வரூப சாதனை புள்ளி விவரங்கள்

கோல்கட்டாவில் விஸ்வரூபம் எடுத்த ரோகித் சர்மா, சாதனை மழை பொழிந்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக
இரட்டை சதம் அடித்த முதல் வீரர், ஒரே இன்னிங்சில் அதிகபட்ச ரன் (264) எடுத்தவர் என்ற உலக சாதனையும் படைத்தார். இவரது அசத்தல் பேட்டிங் கைகொடுக்க, இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்திய அணி 3–0 என தொடரை கைப்பற்றியது.

இரு அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் போட்டி, நேற்று கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாதத்துக்குப் பின் வாய்ப்பு பெற்றார் ரோகித் சர்மா.

அசத்தல் ஜோடி: இந்திய அணிக்கு ரகானே, ரோகித் சர்மா ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. ரகானே (28), மாத்யூசிடம் சிக்கினார். அம்பதி ராயுடு (8) நீடிக்கவில்லை. முதலில் மந்தமாக துவக்கிய ரோகித் சர்மா, போகப்போக கோஹ்லியுடன் இணைந்து ஆவேச ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
இவரது பேட்டில் பட்ட பந்துகள், பவுண்டரிக்கும், சிக்சருக்குமாக பறந்தன. 72வது பந்தில் அரைசதம் கடந்த ரோகித், அடுத்த 28 பந்துகளில் 24வது சதத்தை எட்டினார். இவருக்கு ‘கம்பெனி’ கொடுத்த கோஹ்லி, 33வது அரைசதம் அடித்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு 202 ரன்கள் சேர்த்த போது, கோஹ்லி (66) ரன் அவுட்டானார். ரெய்னா (11) அதேவேகத்தில் திரும்பினார்.

ரோகித் சாதனை: தொடர்ந்து மிரட்டிய ரோகித், குலசேகரா பந்தில் பவுண்டரி அடித்து, ஒருநாள் அரங்கில் இரண்டாவது முறையாக, இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்தார். அடுத்து, ஒருநாள் அரங்கில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சேவக்கின் (219) சாதனையையும் முறியடித்தார்.

வாண வேடிக்கையை நிறுத்தாத இவர், ஒருநாள் அரங்கில் முதன் முறையாக 250 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமை பெற்றார். ரோகித் சர்மா, 173 பந்துகளில் 264 ரன்கள் (33 பவுண்டரி, 9 சிக்சர்) எடுத்து அவுட்டானார். இவரது கடைசி 214 ரன்கள் 101 பந்துகளில் மட்டும் எடுக்கப்பட்டன.

இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 404 ரன்கள் குவித்தது. உத்தப்பா (16) அவுட்டாகாமல் இருந்தார்.

விக்., மட மட: கடின இலக்கைத் துரத்திய இலங்கை அணிக்கு குசல் (0), சண்டிமால் (9), சீனியர் ஜெயவர்தனா (2), என, வரிசையாக வீழ்ந்தனர். தில்ஷன் (34) ஏமாற்றினார். தனது 24வது அரைசதம் அடித்த கேப்டன் மாத்யூஸ், 75, திரிமான்னே 59 ரன்கள் எடுத்தனர். திசாரா பெரேரா (29), பிரசன்னா (11) கைவிட்டனர். கடைசியில் மெண்டிஸ் (4) அவுட்டாக, இலங்கை அணி 43.1 ஓவரில், 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்திய அணி சார்பில் குல்கர்னி 4, உமேஷ் யாதவ், பின்னி, அக்சர் படேல் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

இதையடுத்து, ஒரு நாள் தொடரில் இந்திய அணி 4–0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி 16ம் தேதி ராஞ்சியில் நடக்கவுள்ளது. 

லட்சுமண் ‘281’

கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார் லட்சுமண் (2001 டெஸ்டில் 281, எதிர்–ஆஸி.,). இவரை ரோகித் முந்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் 264 ரன்கள் மட்டும் எடுத்து இரண்டாவது இடம் பெற்றார்.

94 பந்தில் 200 ரன்கள்

கோல்கட்டா போட்டியில் முதலில் மந்தமாக துவக்கிய ரோகித் சர்மா, 50 ரன்களை கடக்க, 72 பந்துகள் எடுத்துக் கொண்டார். இதன் பின் ஆவேச ஆட்டத்தை வெளிப்படுத்திய அடுத்த 94 பந்துகளில் 200 ரன்கள் எடுத்தார்.

துவக்கத்துக்கு எதிர்ப்பு

நேற்று ரோகித் சர்மா துவக்க வீரராக களமிறங்கிய போது, இவர் பந்துகளை வீணடிப்பார். ரோகித்தை 4 அல்லது 5வது இடத்தில் தான் களமிறக்க வேண்டும் என இணையதளத்தில் பலர் தெரிவித்தனர். கடைசியில் அதிக ரன்கள் எடுத்து, விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மூன்று முறை அதிர்ஷ்டம்

நேற்று ரோகித் சர்மா 4 ரன்கள் எடுத்த போது கொடுத்த கேட்ச்சை, திசரா பெரேரா கோட்டை விட்டார். வாய்ப்பை பயன்படுத்தி இரட்டை சதம் அடித்த பின், 201 ரன்னில் பிரசன்னா, 222 ரன்னில் திரிமான்னே என, வரிசையாக தங்கள் பங்கிற்கு ‘கேட்ச்’ நழுவ விட்டனர். இதைப்பயன்படுத்திய ரோகித் சர்மா, 264 ரன்கள் குவித்தார்.

இதெப்படி இருக்கு

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெங்களூரு ஒருநாள் போட்டியில் கோஹ்லி (0) ரன் அவுட்டானார். அப்போது எதிர் முனையில் இருந்த ரோகித் சர்மா, இரட்டை சதம் அடித்தார். நேற்று கோஹ்லி (66) ரன் அவுட்டாக, மீண்டும் ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசியது, வித்தியாசமாக இருந்தது.

டெஸ்டில் அதிகபட்சம்

இந்திய அளவில் டெஸ்ட், ஒருநாள் அரங்கில் அதிகபட்ச ரன்கள் எடுத்த வீரர் என்ற வரிசையில் முதல் மூன்று இடங்களிலும் சேவக் (டெஸ்டில் 319, 309, 293) உள்ளார். அடுத்த இரு இடங்களில் கோல்கட்டா டெஸ்டில் சாதித்த லட்சுமண் (281), டிராவிட் (270) உள்ளனர். நேற்று இலங்கைக்கு ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா, இந்த வரிசையில் 6 வது இடத்தில் உள்ளார்.

128ல் 16 தான்

நேற்று ஐந்தாவது விக்கெட்டுக்கு இணைந்த ரோகித் சர்மா, உத்தப்பா ஜோடி 58 பந்துகளில் 128 ரன்கள் சேர்த்தது. இதில் உத்தப்பா 16 ரன்கள் மட்டும் தான் எடுத்தார்.

பவுண்டரியிலும் அபாரம்

ரோகித் சர்மா ஒருநாள் அரங்கில் ஒரு போட்டியில் அதிக பவுண்டரி (33) அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன் சேவக், சச்சின் தலா 25 பவுண்டரிகள் அடித்திருந்தனர்.

மீண்டும் நவம்பர்

2011, ஜன., தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக முதன் முறையாக துவக்க வீரராக களமிறங்கினார். பின், 2013, ஜூன் மாதம் முதல் துவக்க வீரராக வந்தார். கடந்த ஆண்டு நவம்பரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா, இந்த ஆண்டும் அதே நவம்பர் மாதம், இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

174 பந்தில் 36 ரன்கள்

கடந்த 1975, லார்ட்ஸ் ஒருநாள் போட்டியில் (இங்கிலாந்து), இந்திய வீரர் கவாஸ்கர் 174 பந்துகளை சந்தித்து 36 ரன்கள் மட்டும் எடுத்து, அவுட்டாகாமல் இருந்தார். இவருக்கு அடுத்து ஒருநாள் போட்டியில் அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய வீரர் என்ற பெருமை ரோகித் சர்மாவுக்கு (173 பந்து, 264 ரன்கள்) கிடைத்தது.

ஒரு ரன்னுக்கு ரூ. 1000

ஈடன் கார்டன் மைதானத்தின் 150வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் எடுத்த ரோகித் சர்மாவை கவுரவிக்கும் வகையில், பெங்கால் கிரிக்கெட் சங்கம், இவர் எடுத்த ஒவ்வொரு ரன்னுக்கும் ரூ. 1000 பரிசு தந்தது. இதன்படி, ரோகித்துக்கு ரூ. 2.64 லட்சம் கிடைத்தது.

இன்னும் விளையாடுவேன்

ரோகித் சர்மா கூறுகையில்,‘‘ ஈடன் கார்டன் மைதானம் எனக்கு மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது. இங்கு தான் எனது அறிமுக டெஸ்டில் சதம் அடித்தேன். காயத்தில் இருந்து மீண்டு வந்து விளையாடியதால், சோர்வு கிடையாது. இன்னும் 50 ஓவர்கள் விளையாடவும் தயாராக இருந்தேன்,’’ என்றார்.
வாழ்த்து

உலக சாதனை படைத்த ரோகித் சர்மாவுக்கு பல்வேறு வீரர்கள் ‘டுவிட்டரில்’ வாழ்த்து தெரிவித்தனர்.

தோனி

‘ரோகித் சிறப்பாக விளையாடினார். இவரின் திறமையான ஆட்டம் நிரூபிக்கப்பட்டது’. 

ஜடேஜா

‘கடவுள் ராமனுக்கு அடுத்து, இலங்கைக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டவர் ரோகித் சர்மா தான்’.

கும்ளே

‘ரோகித்தின் அடுத்த இலக்கு ஐ.பி.எல்., போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பதுதான். இதையும் இவரால் எட்ட முடியும்’. 

ஹர்பஜன் சிங்

‘சகோதரர் ரோகித் வரலாறு படைத்துள்ளார். இதை உற்சாகமாக கண்டுகளித்தேன்,’

லட்சுமண்

‘சிறப்பான வீரரிடமிருந்து அசத்தலான ஆட்டம் வெளிப்பட்டு உள்ளது. 

பிஷன் சிங் பேடி

‘ரோகித் சர்மா அசத்தலாக விளையாடினார். இவரின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. 

அசார் முகமது(பாக்)

‘ரோகித் வியக்கத்தக்க முறையில் செயல்பட்டார். இந்த சாதனையை பாராட்டுகிறேன்.

பிரக்யான் ஓஜா

‘இந்திய அணி அதிரடி வீரர் ரோகித்துக்கு வாழ்த்துகள்’.

ராசியான ஈடன்

இந்திய வீரர் ரோகித் சர்மாவுக்கு கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம் ராசியாக உள்ளது. கடந்த ஆண்டு இங்கு நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான இவர், 177 ரன்கள் எடுத்து, டெஸ்ட் அரங்கில் சிறந்த ஸ்கோரை பதிவு செய்தார். நேற்று பேட்டிங்கில் அசத்திய இவர் ஒருநாள் அரங்கில் இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்து அதிகபட்ச ரன்னை பெற்றார். 2012ல் இங்கு நடந்த கோல்கட்டாவுக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில், மும்பை அணிக்காக விளையாடிய இவர், 60 பந்தில் 109 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget