புதிய கம்ப்யூட்டர் ஒன்று வீட்டிற்கு வந்துவிட்டது. சில டிஜிட்டல் சாதனங்கள் இணைக்கப்பட்டு, ஒன்றுமே எழுதப்படாத புதிய பேப்பராகத்தான் அது உங்களை அடையும். ஆனால், உங்கள் வீட்டு பட்ஜெட்டை நிர்வகிப்பது முதல், கேன்சர் நோயைக் குணப்படுத்துவது வரை, அதனால் அனைத்து செயல்களையும் மேற்கொள்ள முடியும் என்ற தகவல் வியப்பாக உள்ளதல்லவா? எந்த கம்ப்யூட்டருக்கும், என்ன பயன்பாட்டினை நீங்கள் மேற்கொண்டாலும், அதில் சில புரோகிராம்கள் இருப்பது அவசியத் தேவையாகும். அவற்றை இங்கு காணலாம்.
பிரவுசர்: வரிந்து கட்டிக் கொண்டு, சாப்ட்வேர் புரோகிராம்களைக் கம்ப்யூட்டருக்குள் புகுத்துவதற்குள், முதலில் உங்கள் பிரவுசரைத் தீர்மானியுங்கள். விண்டோஸ் சிஸ்டத்துடன், மாறா நிலையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தரப்பட்டிருக்கும். ஆனால், ஏற்கனவே நீங்கள் வேறு ஒரு பிரவுசரைப் பயன்படுத்திப் பழகி இருந்தால், இது விருப்பமில்லாத ஒன்றாக, வேறு ஒருவரின் ஆடையை உடுத்தியது போல இருக்கும். எனவே, உங்களுக்குத் தேவையான பிரவுசரை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும். அனைத்து பிரவுசர்களும் இலவசமாகவே கிடைக்கின்றன என்பதுவும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்று.
நினைட் (Ninite): புதிய கம்ப்யூட்டரில் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்வதனை ”நினைட்” இணைய தளம் மிக மிக எளிதாக்குகிறது. இதன் இணைய தளம் செல்லவும். அங்கு உங்களுக்கு எந்த சாப்ட்வேர் தொகுப்பு வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் முகப்பு பக்கத்தில், நமக்கு வேண்டிய, தேவையான பல புரோகிராம்கள் வகை வாரியாக அடுக்கப்பட்டிருப்பதனைப் பார்க்கலாம். உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து, Get Installer என்பதில் கிளிக் செய்தால், அதற்கான இன்ஸ்டாலர் புரோகிராம், ஒரு சிறிய .exe பைலாகத் தரப்படும். இந்த புரோகிராம் மூலம், நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து புரோகிராம்களும் இன்ஸ்டால் செய்யப்படும். இடையே, நமக்குத் தேவையில்லாத புரோகிராம்கள் குறுக்கிட்டால், அவற்றை நினைட் புறந்தள்ளிவிடும். இன்ஸ்டால் செய்வதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. மிகவும் பயனுள்ள, ஆச்சரியப்பட வைத்திடும் தளம் நினைட்.
ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ்: உங்கள் கம்ப்யூட்டரை நிச்சயம் இணையத்துடன் இணைத்தே பயன்படுத்துவீர்கள். எனவே, வைரஸ் தாக்குதலுக்கு உங்கள் கம்ப்யூட்டர் ஆளாகும் வாய்ப்புகள் அதிகமாகின்றன. இணையத்துடன் இணையவில்லை என்றாலும், நீங்கள் பயன்படுத்தும், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் மூலமும் வைரஸ்கள் வரலாம். எனவே, ஏதேனும் ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை கம்ப்யூட்டரில் நிறுவ வேண்டும். பலரும் பரிந்துரைத்தபடி, ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை நிறுவலாம். இதில் secure shredder, Do Not Track பாதுகாப்பு, தானாக குறிப்பிட்ட நாளில் ஸ்கேன் செய்வதனை அமைக்கும் வசதி ஆகியவை கூடுதல் வசதிகளாகக் கிடைக்கின்றன. இந்த தொகுப்பு இல்லாமல், அவாஸ்ட் (Avast) தொகுப்பினையும் நிறுவலாம். நினைட் தளத்தில் இவை இரண்டுமே கிடைக்கிறது. விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்ட தொகுப்பாக உங்கள் கம்ப்யூட்டர் இருந்தால், அதில் உள்ள Windows Defender ஆண்ட்டி வைரஸ் தொகுப்பே போதுமானது. மாறா நிலையில் இது தரப்படுகிறது.
மால்வேர் பைட்ஸ் (Malwarebytes Anti-Malware Free): ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு சிறப்பாகச் செயல்பட்டாலும், புதியதாக வைரஸ் ஒன்று வருகையில், எந்த ஆண்ட்டி வைரஸ் தொகுப்பும் பயனளிக்காது. இவற்றை “zero day” threats என அழைக்கின்றனர். அண்மைக் காலங்களில், இது போன்ற ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளுக்குச் சவால் விடும் வகையில் பல மால்வேர் புரோகிராம்கள் கம்ப்யூட்டர்களை ஊடுருவுகின்றன. இத்தகைய புரோகிராம்களைத் தடுக்க Malwarebytes Anti-Malware Free நமக்கு உதவுகிறது. இதனை முழுமையான ஓர் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமாகப் பயன்படுத்த இயலாது. வழக்கமான ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் செயல்படாமல் உள்ள நிலைகளில் இது உதவிடும்.
பி.சி.டிகிராபிபையர் (PC Decrapifier): ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து, நம் கம்ப்யூட்டருக்கு அரண் அமைத்த பின்னர், கம்ப்யூட்டர் வாங்கும்போது, அதனுடன் சேர்ந்து வந்த தேவையற்ற இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களை நீக்க வேண்டும். பல பெர்சனல் கம்ப்யூட்டர் நிறுவனங்கள், bloatware என அழைக்கப்படும், இந்த தேவையற்ற புரோகிராம்களை, கம்ப்யூட்டரில் நிறுவி, அது குறித்து எதுவும் கூறாமல், அல்லது பெருமையுடன் கூறி விற்றுவிடுகின்றனர். இவை, நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டினை மிகவும் மந்தப்படுத்தும் அல்லது பாதிக்கும். இந்தச் சிக்கலைத் தீர்க்கும் வகையில் தான் PC Decrapifier சாப்ட்வேர் பயன்படுகிறது. இதனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகையில், நம் கம்ப்யூட்டரை முழுமையாக ஸ்கேன் செய்து, எந்த புரோகிராம்கள் இந்த வகைப் பட்டவை என ஒரு பட்டியலை அழிக்கும். ஒரே தட்டலில், அவை அனைத்தையும், இந்த புரோகிராம் மூலம் நீக்கிவிடலாம். இன்னொரு திரையில், நாமாக அமைத்த புரோகிராம்களையும் பட்டியலிடும். அப்போது நீங்கள் குறிப்பிட்ட புரோகிராம் ஒன்று தேவையில்லை என்று கருதினால், இதன் மூலம் நீக்கிவிடலாம்.
அன்லாக்கர் (Unlocker): ஏதேனும் புரோகிராம் ஒன்றை, அன் இன்ஸ்டால் செய்து நீக்கும் முயற்சியில் ஈடுபடுகையில், அந்த புரோகிராம் பயன்பாட்டில் இருக்கிறது என்றும், அதனை நீக்க முடியாது என்றும் நமக்கு பிழைச் செய்தி தரப்படும். ஆனால், நாம் தேடிப் பார்க்கையில், குறிப்பிட்ட அந்த புரோகிராம், செயல்பாட்டில் இல்லை என்று தெரியவரும். உண்மையில், விண்டோஸ் அதனைப் பின்புலத்தில் இயக்கிக் கொண்டிருக்கும். அன்லாக்கர் புரோகிராம் இதற்கான தீர்வினைத் தருகிறது. இயங்கிக் கொண்டிருப்பதாகக் கூறும், அந்த புரோகிராமின் செயல்பாட்டினை நிலைப்படுத்தி, அன் இன்ஸ்டால் செய்துவிடும். இதற்கு குறிப்பிட்ட சாப்ட்வேர் புரோகிராமின் ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Unlocker என்பதில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். பின் அந்த புரோகிராமினை நீக்கிவிடலாம். இதில் இன்னொரு ஆபத்தும் உள்ளது. Unlocker புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில், தேவையற்ற புரோகிராம்கள் சிலவும் இன்ஸ்டால் ஆகும். அவற்றை பின் நாளில், நாமாகவே நீக்கிவிடலாம்.
ரெகுவா (Recuva): பல வேளைகளில், நாம் நம்மை அறியாமல், சில பைல்களை அழித்துவிடுவோம். ரீ சைக்கிள் பின்னில் இருந்தும் நீக்கிவிடுவோம். பின்னர், அது குறித்து பதட்டம் அடைவோம். கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் அனைவரும் இழைக்கும் தவறு இது. சில வேளைகளில், மொத்தமாக பைல்களைத் தேர்ந்தெடுத்து, நேரடியாக, ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்பாமலேயே, அழிக்கும் வேலையிலும் ஈடுபடுவோம். நம் செயல்பாட்டில் அவ்வளவு நம்பிக்கை நமக்கு. ஆனால், மீட்டெடுக்க முடியாத அளவிற்கு பைல்கள் அழிந்த பின்னரே, ”அடடா! அவசரப்பட்டுவிடோமே!” என வருத்தப்படுவோம். இந்த மாதிரி நிகழ்வுகளில் நமக்குக் கை கொடுக்கும் புரோகிராம்கள், நாம் அழித்த பைல்களை மீட்டெடுக்கும் புரோகிராம்களாகும். அந்த வகையில் சிறந்தது, ரெகுவா (Recuva) புரோகிராம். Piriform நிறுவனம் தரும் இந்த புரோகிராமினை, இன்ஸ்டால் செய்து இயக்கினால், நம் கம்ப்யூட்டரில் அண்மைக் காலத்தில் அழிக்கப்பட்டு, மீண்டும் மீட்டெடுக்கக் கூடிய பைல்கள் அனைத்தையும் பட்டியலிடும். அதிலிருந்து நமக்குத் தேவைப்படும் பைல்களை மீட்டெடுக்கலாம். இது நம் கம்ப்யூட்டரில் தயாராய் இருக்கும் வகையில் அமைத்துக் கொள்வது நல்லது. அடிக்கடி இதனைப் பயன்படுத்த மாட்டோம் என்றாலும், மேலே கூறப்பட்ட சூழ்நிலைகளில், நமக்கு கை கொடுக்கும் புரோகிராம் இது ஆகும்.
சிகிளீனர் (CCleaner): Piriform நிறுவனம் தயாரித்து அளித்துள்ள இன்னொரு அவசியமான புரோகிராம் சிகிளீனர். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடம் இதற்கு தனி பிரியம் உண்டு. ஏனென்றால், நாம் பல நிலைகளில் மேற்கொள்ளும் வேலையை ஒரே இயக்கத்தில் நடத்தித் தரும் செயல்பாடு இதற்கு உண்டு. நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டில், இணைய உலாக்களில் சேர்ந்திடும் தேவையற்ற குக்கி பைல்கள், பிரவுசர் ஹிஸ்டரி பைல்கள், தேவையற்றதாக தேக்கப்படும் தற்காலிக பைல்கள், விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் ஏற்படுத்தப்படும் தற்காலிக குறியீடுகள் என அனைத்து குப்பைகளையும் நீக்கி, கம்ப்யூட்டரைச் சுத்தப்படுத்தும் வேலையினை இந்த புரோகிராம் மேற்கொள்கிறது. இலவசமாக இதனை Piriform நிறுவன தளத்தில் இருந்து பெறலாம். பணம் செலுத்தி, 25 டாலர், பெற்றால், இன்னும் சில கூடுதல் வசதிகள் கிடைக்கும். ஆனால், இலவசமாகக் கிடைக்கும் வசதிகளே நமக்குப் போதுமானதாகும்.
வி.எல்.சி.மீடியா பிளேயர்: விண்டோஸ் 8 கொண்ட கம்ப்யூட்டரை நீங்கள் வாங்கியிருந்தால், அதில் டிவிடிக்களை இயக்குவதில் பிரச்னைகளைச் சந்திக்கலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், டிவிடிக்களை இயக்கும் வசதி போல, இதில் தரப்படவில்லை. ஒருவேளை உங்கள் கம்ப்யூட்டர் டிவிடி பாக்ஸுடன் வடிவமைக்கப்பட்டு வந்திருந்தால், இந்த பிரச்னை இருக்காது. இல்லை எனில், உங்கள் பிரச்னைக்குத் தீர்வு, கம்ப்யூட்டரில் வி.எல்.சி. மீடியா பிளேயரை இன்ஸ்டால் செய்வதுதான். இது இலவசமாகவே கிடைக்கிறது.
பெயிண்ட் டாட் நெட் (Paint dot net): பெரிய அளவிலான புரோகிராம்களைப் பார்த்த பின்னர், நம் கம்ப்யூட்டரில் இருக்க வேண்டிய சின்ன சின்ன புரோகிராம்களில், நமக்கு அதிகம் பயன்படக் கூடியது பெயிண்ட் டாட் நெட். இது அடோப் போட்டோ ஷாப் அளவிற்கு, அதிக இமேஜ் எடிட்டர் வசதிகளைக் கொண்டதாக இல்லாவிட்டாலும், இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராமில், என்ன இருக்கப் போகிறது என்று எண்ண வேண்டாம். இதில் நாம் சாதாரணமாக எதிர்பார்க்கும் இமேஜ் திருத்துவதற்குத் தேவையான அனைத்தும் கிடைக்கின்றன. நீங்கள் கிராபிக்ஸ் வல்லுநராக இருந்து, அடோப் போட்டோ ஷாப் அப்ளிகேஷனுக்குப் பணம் செலவழிக்க இயலாமல் இருந்தால், பெயிண்ட் டாட் நெட் புரோகிராம், உங்களுக்குத் தேவையான வசதிகள் கொண்டதாக இல்லை என உணர்ந்தால், GIMP என்னும் இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்தலாம். இது இலவசமாகக் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்த, சிலவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்வது எளிது. கற்றுக் கொண்டுவிட்டால், இது தரும் வசதிகள் உங்களையும் உங்கள் நண்பர்களையும் மலைக்க வைத்திடும்.
பி.டி.எப். புரோகிராம்கள்: பி.டி.எப். பைல்களைப் படிக்க என்றால், உடனே நாம் நாடுவது அடோப் பி.டி.எப். ரீடர் புரோகிராம் தான். இதுவும் இலவசமாகக் கிடைக்கிறது. ஆனால், இது சற்று எளிதாகப் பயன்படுத்த இயலாதது. அடிக்கடி அப்டேட் செய்யப்படுவது. அனைத்திற்கும் மேலாக, வைரஸ்களை பரப்புபவர்கள், இதனைப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களை எளிதாக வளைத்துப் போட்டு வருகின்றனர். எனவே, இந்த புரோகிராமினைத் தங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எடுத்துவிட்டவர்களே அதிகம். அப்படியானால், இதன் இடத்தில் செயல்படும் புரோகிராம்கள் எவை? உங்களுக்கு அடிப்படையான செயல்பாடுகள் கொண்ட பி.டி.எப். ரீடர் வேண்டும் என்றால், Sumatra PDF ரீடர் அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம். இது அவ்வளவாக வெளியே தெரியாதது என்பதால், ஹேக்கர்கள் இன்னும் இதன் பக்கம் வரவில்லை.
இதனை அடுத்து, PDF Xchange என்னும் அப்ளிகேஷனைக் கூறலாம். இது இலவசமாகக் கிடைக்கிறது. பி.டி.எப். பைல்களைப் படிப்பதற்கும் அதனை எடிட் செய்வதற்கும் மிக எளிதானது. இது சிறிய அளவிலேயே நம் ஹார்ட் டிஸ்க்கில் இடம் எடுத்துக் கொள்வதால், அனைவராலும் இது விரும்பப் படுகிறது.
மேலே சொல்லப்பட்டவற்றில் இருந்து சற்று மாறுபட்ட, பி.டி.எப். பைல்களுடன் செயலாற்றும் அப்ளிகேஷன் CutePDF என்பது. நமக்குப் பல வேளைகளில், நம் டாகுமெண்ட் பைல், இமேஜ் பைல், ஏன் முழு இணையப் பக்கத்தினை, பி.டி.எப். பைலாக மாற்ற விரும்புவோம். இந்த CutePDF இலவசமாகக் கிடைக்கிறது. இது ஒரு பிரிண்டர் ட்ரைவர் பைலாக நம் கம்ப்யூட்டரில் அமர்ந்து கொள்கிறது. File > Print என்ற இடைமுகம் வழியாகச் சென்று, எந்த ஒரு பைலையும், பி.டி.எப். பைலாக மாற்றும் வசதியை இது தருகிறது.
க்ளவ்ட் டூல் மூலம் பைல் தேக்கம்: இன்றைய பொழுதில், கம்ப்யூட்டர் பயன்பாட்டில், நம் பைல்களை சேவ் செய்து வைத்திட ஸ்டோரேஜ் இடமாகப் பல இணைய தளங்கள், க்ளவ்ட் ஸ்டோரேஜ் என்ற வகையில் கிடைக்கின்றன. இவற்றை நம் கம்ப்யூட்டருடன் இணைத்தே செயல்பட வைக்கலாம். நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்தினாலும், ஸ்மார்ட் போன் அல்லது டேப்ளட் பயன்படுத்தினாலும், நீங்கள் உருவாக்கும் பைல்களை, க்ளவ்ட் ஸ்டோரேஜ் முறையில் இயங்கும் இந்த தளங்களில் சேவ் செய்து தேக்கி வைக்கலாம். உங்களின் கம்ப்யூட்டர், விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 சிஸ்டத்துடன் தரப்பட்டிருந்தால், அதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கை ட்ரைவ் இணைக்கப்பட்டுள்ளது. இணையத் தொடர்பில் நீங்கள் செயல்பட்டு, பைல்களை உருவாக்கினால், கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் சேவ் செய்வது போல, பைல்கள் ஸ்கை ட்ரைவில் சேவ் செய்யப்படும். நீங்கள் விண்டோஸ் 7, விஸ்டா அல்லது எக்ஸ்பி பயன்படுத்துபவராக இருந்தால், நீங்கள் விரும்பும் க்ளவ்ட் ஸ்டோரேஜ் வகையைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். ஒன் ட்ரைவ், கூகுள் ட்ரைவ் மற்றும் ட்ராப் பாக்ஸ் இந்த வகையில் இயங்கி வருகின்றன. 2014 ஆம் ஆண்டில், க்ளவ்ட் ஸ்டோரேஜ் பழக்கம் பெருகியதால், இவை அனைத்தும் தங்கள் பயனாளர்களுக்குத் தரும் தேக்க அளவை அதிகரித்துள்ளன. எனவே, இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் அக்கவுண்ட் திறந்து, தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.மேலே சொல்லப்பட்ட புரோகிராம்கள் தவிர, இன்னும் பல அத்தியாவசிய புரோகிராம்கள், உங்கள் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில் கிடைக்கின்றன. இவற்றைத் தேடி அறிந்து, இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
கருத்துரையிடுக