ஒரு வடக்கன் செல்பி சினிமா விமர்சனம்

நடிகர் : நிவின் பாலி
நடிகை : மஞ்சிமா மோகன்
ஒளிப்பதிவு : ஜோமோன் டி.ஜான்
இசை : ஷான் ரஹ்மான
கதை : வினீத் சீனிவாசன
இயக்கம் : பிரஜித்


செல்பி எடுத்து சிக்கலில் மாட்டும் இளைஞனின் கதை தான் 'ஒரு வடக்கன் செல்பி'.

கேரள கிராமம் ஒன்றில் மளிகைக்கடை வைத்திருக்கும் விஜயராகவனின் மகன் நிவின் பாலி பொறியியல் படிப்பு படித்தாலும் அதிலும் ஏகப்பட்ட அரியர்ஸ் வைத்திருப்பவர்.. வீட்டில் அவரை தண்ணி தெளித்துவிட, சினிமா மேல் அவரது கவனம் திரும்புகிறது. அதிலும் குறிப்பாக டைரக்சன் மீது. எப்படியாவது சென்னைக்கு வந்து கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து விட வேண்டும்.. அவர் மூலமாக அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என்பது தான் அவரது லட்சியம்.

இதற்கிடையே தனது பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடிவந்த இளம்பெண் மஞ்சிமாவை அவ்வப்போது லுக் விடுகிறார் நிவின் பாலி. இதைப்பார்த்த அவரது தந்தை, மறுநாள் முதல் நிவின் பாலியை மளிகை கடையில் வந்து உட்கார சொல்கிறார். இதில் விருப்பமில்லாத நிவின் பாலி இரவில் யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு ரயில் ஏறுகிறார். அந்த ரயிலில் எதிர்பாராத விதமாக மஞ்சிமாவும் பயணம் செய்ய, அவருக்கு தெரியாமலேயே அவருடன் இருப்பது போல செல்பி ஒன்றை எடுத்து, பந்தா காட்டும் விதமாக தனது நண்பன் அஜு வர்கீஸுக்கு அனுப்புகிறார்.

அதன்பின் சென்னையில் இறங்கும் நிவின் பாலி, சினிமாவில் தனக்கு அவ்வளவு எளிதில் வாய்ப்பு கிடைக்காது என்பதை தெரிந்துகொண்டு, ஒருவாரம் கழித்து மீண்டும் ஊருக்கே திரும்புகிறார். ஊருக்குள் இறங்கியதுமே அவர், மஞ்சிமாவை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டதாக ஏற்கனவே செய்தி பரவியதால் மஞ்சிமாவின் தந்தையும் ஊர்க்காரர்களும் அவரை அடித்து துவைக்கின்றனர். அதற்கு ஆதாரமாக அவர் அஜு வர்கீஸுக்கு அனுப்பிய செல்பி போட்டோவையும் காட்டுகின்றனர். வேறு வழியில்லாமல் மஞ்சிமாவை தான் லவ் பண்ணியதாக அப்போதைக்கு, ஒப்புக்கொள்ளும் நிவின் பாலி, மீண்டும் தனது நண்பன் அஜு வர்கீஸையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு தப்பிக்கிறார்.

இருவரும் சேர்ந்து சென்னையில் மஞ்சிமாவை தேடுகிறார்கள்.. இவர்களுக்கு உதவி செய்ய பிரைவேட் டிடெக்டிவான வினீத் சீனிவாசனும் கூட்டு சேர்கிறார். முடிவில் மஞ்சிமாவை கண்டுபிடித்து, ஊருக்கு வந்து உண்மையை சொல்லும்படி அழைக்கின்றனர். ஆனால் அவரோ வர மறுக்கிறார். அவர் வர மறுப்பதன் பின்னணி என்ன..? அவரை அழைத்து வந்து தான் நிரபராதி என நிவின் பாலி நிரூபித்தாரா என்பது மீதிக்கதை..

படம் பார்க்கும்போது இரண்டு விஷயங்கள் தெளிவாக தெரிகின்றன. ஒன்று முழுக்க முழுக்க இளைஞர்களை குறிவைத்து, இன்றைய ட்ரெண்டிற்கு ஏற்றமாதிரி படத்தை எடுத்திருக்கின்றனர். மற்றொன்று தமிழ்நாட்டை மையப்படுத்தி கதை பின்னி, கேரளாவில் உள்ள தமிழ் ரசிகர்களை டார்கெட் பண்ணி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாகவும் திரைக்கதையை அமைத்திருக்கின்றனர்.

நிவின் பாலி, அஜு வர்கீஸ், நீரஜ் மாதவ் கூட்டணி வரும் காட்சிகள் எல்லாமே காமெடி தோரணங்கள் தான். அதிலும் குறும்படம் எடுக்கிறேன் என அவர்கள் கிளம்புவதும் கடைசியில் கேமராவில் பதிவான மொத்த படம் முழுவதும் கேமராவோடு ஆற்றில் போவதும் அதிரிபுதிரி காமெடி.. இடைவேளைக்குப்பின் வினீத் சீனிவாசனும் சேர்ந்துகொள்ள, இவர்கள் சென்னையில் தேடுதல் வேட்டை நடத்தும் காட்சிகள் எல்லாமே தொடர் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகின்றன.

மஞ்சிமாவை கண்டுபிடித்த பின்னர் தான், கடைசி அரைமணி நேரம் சீரியஸ் மோடுக்குள் வருகிறது படம். மஞ்சிமாவின் முகம் தெரியா இன்டர்நெட் காதலனை தேடி பயணப்படுவதும், அதில் அவர் ஏமாற்றப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பதும் ரொம்பவே நீள்வதால், அலுப்பூட்டும் விஷயங்களாக அமைந்துவிட்டன.

மஞ்சிமாவுக்கு இது முதல் படம். ஆனால் படம் முழுவதும் அவரை உம்மணா மூஞ்சியாகவே காட்டியது தான் பாவம். ஆனால் மஞ்சிமா ஒரு ரவுண்டு வருவார் என்பது மட்டும் நிச்சயம். க்ளைமாக்ஸ் காட்சியில் இருபது செகண்ட்ஸ் மட்டும் சர்ப்ரைஸ் என்ட்ரி தந்து ரசிகர்களை அசத்துகிறார் பாபி சிம்ஹா. ஆனால் முன்னணி இளம் நடிகராக விளங்கும் நடிகர் உன்னி முகுந்தனை, வெறும் போட்டோவாக மட்டும் உலாவவிட்டிருப்பது ஏனோ தெரியவில்லை.

படத்தின் பாதிக்கு மேற்பட்ட காட்சிகள் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டிருப்பதால் தமிழ்ப்படம் பார்ப்பது போன்ற உணர்வும் ஏற்படத்தான் செய்கிறது. ஜோமோன் டி.ஜானின் ஒளிப்பதிவில் கேரளா கிராமம் மட்டுமல்ல, நம் சென்னையே நமக்கு வேறொரு கோணத்தில் தெரிகிறது. ஷான் ரஹ்மான் பாடல்களில் மட்டுமல்ல பின்னணி இசையிலும் அதிர வைக்கிறார். 'என்னே தள்ளேண்டா அம்மாவா (என்ன அடிக்காதீங்க மாமா)' பாடல் தியேட்டர்களில் இளசுகளை ரவுசு விட வைக்கிறது.

படத்தில் இரண்டு கதாநாயகன்கள் இருந்தும் இருவருக்குமே காதல் காட்சிகளோ, காதலிகளோ இல்லாமல் படம் எடுத்திருப்பது இயக்குனரின் அசாத்திய துணிச்சலை காட்டுகிறது. வினீத் சீனிவாசன் எழுதிய கதைக்கு, கலகலப்பான திரைக்கதை அமைத்து ஜாலியான ஒரு பொழுதுபோக்கு படமாக இதை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரஜித். மஞ்சிமாவை இன்டர்நெட் மூலம் ஏமாற்றியவனை கண்டுபிடிக்க, அவர் ஏற்கனவே பணம் அனுப்பிய வங்கி கணக்கு எண்ணிற்கான முகவரியை கண்டுபிடித்திருந்தாலே போதுமே.. எதற்காக தலையை சுற்றி மூக்கை தொடுகிறார்கள் என்பது தான் புரியவில்லை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget