டிராகன் பிலேட் சினிமா விமர்சனம்

நடிகர் : ஜாக்கி சான்
நடிகை : ஷர்னி வின்சன்
இயக்குனர் : டேனியல் லீ
இசை : ஹென்றி லாய்
ஓளிப்பதிவு : டோனி சேங்


டிராகன் பிலேட் ஒரு சரித்திர ஆக்ஷன் படமாகும். ஜாக்கிசான் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் ஒருமைப்பாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. டானியல் லீ என்பவரால் எழுதப்பட்டு, இயக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஜாக்கிசான், சான் குசாக், அட்ரென் ப்ரூடி ஆகியோர் நடித்துள்ளனர்.   

ஜாக்கிசான், ஹான் சாம்ராஜ்ஜியத்தில் தளபதியாக இருந்து வருகிறார். மேற்கு பகுதியில் உள்ள மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுவரும் ஜாக்கிசான் மற்றும் அவரது கூட்டாளிகளை தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி  'வைல்ட்  கீஸ் கேட்' என்னும் கோட்டை நகரத்திற்கு வேலை செய்ய அனுப்பி வைக்கிறார்கள். 

வைல்ட் கீஸ் கேட்டில் குற்றச் செயல்கள் புரிந்த பல்வேறு நாட்டினர் அடிமைகளாக வேலை செய்து வருகின்றனர். மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவர்கள் சரியாக வேலை செய்யாமல் இருப்பதால், கோட்டையை கட்டி முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. 

இந்நிலையில் ரோம் ராஜ்ஜியத்தின் வாரிசான பப்லியஸை அவரது சகோதரர் டிபேரியஸ் கொலை செய்ய திட்டமிடுகிறார். இந்த சதியில் இருந்து பப்லியஸை காப்பாற்ற லூசியஸ் என்னும் அதிகாரி பப்லியஸ் மற்றும் மக்களுடன் வைல்ட்  கீஸ் கேட் நோக்கி வருகிறார். 

தனது மக்களுக்கு தங்க இடம் தேடும் லூசியஸ், வைல்ட் கீஸ் கேட் பகுதியை தாக்கி அந்த இடத்தை கைப்பற்ற முயலுகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஜாக்கிசானுக்கும் லூசியசிற்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. 

இந்த சண்டைக்கு முடிவு தெரிவதற்கு முன்பே அந்த இடத்தில் மணல் புயல் ஏற்படுகிறது. மணல் புயலின் போது பாதுகாப்பில்லாமல் லூசியஸ் மற்றும் அவரது மக்கள் இறந்துவிடுவார்கள் என்பதால் ஜாக்கிசான் அவர்களுக்கு வைல்ட் கீஸ் கேட்டில் அடைக்கலம் தருகிறார். 

இந்நிலையில், வைல்ட் கீஸ் கேட் கோட்டையை விரைவாக கட்டி முடிக்கும்படி அதன் நிர்வாக அதிகாரிக்கு உத்தரவு வருகிறது. ஜாக்கிசானை அழைக்கும் நிர்வாக அதிகாரி கூடுதலாக சீனாவில் இருந்து ஆட்களை அழைத்து வரும்படி கூறுகிறார். 

ஜாக்கிசான் நிர்வாக அதிகாரியிடம் வேலையை விரைவாக முடிக்க ரோம் பகுதியில் இருந்து வந்திருக்கும் மக்களின் உதவியை பெற்றுகொள்ளலாம் எனவும், அவர்களை தங்களுடன் தங்க வைத்து கொள்வதாகவும் கூறி சம்மதம் வாங்குகிறார். 

ஜாக்கிசானின் முயற்சியால் பல்வேறு நாட்டை சேர்ந்த மக்கள் ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக கோட்டையை கட்டுகின்றனர். இந்நிலையில் ரோம் ராஜ்ஜியத்தின் வாரிசை கொலை செய்ய முயன்ற டிபேரியஸ் வைல்ட் கீஸ் கேட் பகுதியை தாக்க தனது படையோடு வருகிறார். 

கீஸ் கேட் பகுதியில் நடக்கும் போராட்டத்தில் ரோம் அதிகாரி லூசியஸ் இறந்துவிட, இறுதியில் ஜாக்கிசான் ரோமின் வாரிசை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதை இயக்குனர் அழுத்தமான திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார். 

சரித்திர படமென்பதால் டிராகன் பிலேட்டின் தயாரிப்பு செலவு மிக அதிகமாக உள்ளது. சீனாவில் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படங்களுள் இதும் ஒன்றாக அமைந்துள்ளது. வழக்கமான ஜாக்கிசான் படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளுடன் ஒற்றுமையின் மகத்துவத்தையும் மையப்படுத்த இயக்குனர் முயன்றிருக்கிறார். 

படத்தில் திரைக்கதை, ஒளிப்பதிவு, தொழில்நுட்ப திறன்கள் நன்றாக இருந்தாலும் நீளமான வசனங்கள் பார்வையாளர்களுக்கு அலுப்பை ஏற்படுத்துகிறது. ஜாக்கிசான் மற்றும் திரையில் தோன்றும் பிற கதாபாத்திரங்களும் தங்களின் வேலையை சரியாக செய்துள்ளனர். டிராகன் பிலேட் படத்தை ஜாக்கிசானின் திறமையான நடிப்பிற்காக பார்க்கலாம். 

மொத்தத்தில் ‘டிராகன் பிலேட்’ அதிரடி ஆக்ஷன்  
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget