ஏர்கண்டிஷன் வாங்கும் முன் யோசிக்க வேண்டியவை

குளு குளு என்று கம்பங்கூழ், பழைய சாதம், கீற்று வீடு என தாத்தா-பாட்டிகள் ஓட்டிய காலம், ‘வெயிலோடு  விளையாடு’ என்று சுடச் சுட விளையாண்ட நம் காலம் போய், ‘உங்க வீட்ல ஏசி இருக்கா... சொல்லுங்க வந்து  தங்கறோம்’ என்று
சொல்லும் அடுத்த காலகட்டத்தில் நிற்கிறோம். அறைக் குளிரூட்டி அதாவது.  - ஏ.சி.  தொழில்நுட்பம் தெரிந்துகொண்டோம். அடுத்து சாளரத்தில் (ஜன்னல்) பொருத்துவது அல்லது  ஸ்ப்ளிட்  தொழில்நுட்பத்தில் அறைக்குள் பொருத்தும் அமைப்பு இரண்டில் ஒன்றை முடிவு செய்ய வேண்டும்.
சாளரத்தில் பொருத்தும் ஏசி (விண்டோ ஏசி)
          ஒரே ஒரு பெட்டி மட்டுமே இருக்கும். இரு இடத்தில் பொறுத்தத் தேவையில்லை.
     எளிதாகப் பொறுத்த முடியும்.
     பராமரிப்பு எளிது.
     சிறிய அறைகளை குளிரூட்டச் சிறந்தது.
    விலை சிறிது குறைவு.
    சாளரம் சரியாக அமைக்கப்பட்ட அறைக்கு சிறந்தது.
     0.75 முதல் 2 டன் வரை கொள்ளளவு உடையது.
     தூசி வடிகட்டும் வசதி (Filter) கொண்டது.
     பெரிய வீடுகளில் பொருத்தும்பொழுது இவை அதிக எண்ணிக்கையில் பொறுத்த வேண்டி இருக்கும். நிறைய  சாளரங்கள் தேவைப்படும்

ஸ்ப்ளிட் ஏ.சி.

இதைச் சுவரில் பொறுத்த முடியும். சில வீடுகளில் சாளரம் வசதியாக அமைந்து இருக்காது. அதுபோன்ற வீடுகளுக்கு  ஸ்ப்ளிட் ஏ.சி. வரப்பிரசாதம்.
     விண்டோ ஏசியை விட விலை அதிகம்.
     சத்தம் அதை விட குறைவு.
     இன்வர்ட்டர் வசதி உண்டு.
     பாக்டீரியா வடிகட்டியுடன் வருகிறது.
     0.8 முதல் 2 டன் வரை வருகிறது.
     இரண்டு பாகங்களை சரியாக இணைத்துப் பொறுத்த வேண்டும்.
     கம்ப்ரசர் பாகத்தை வைப்பதற்கு வெளியேயும், இன்னொரு பாகம் வைக்க உள்ளேயும் இடம் தேவை.
     பெரிய இடங்களுக்கு இந்த வகை உகந்தது.
     சாளரங்கள் தேவையில்லை.
     அழகான வடிவங்களில் வருகிறது.

டக்ட் (duct) குளிரூட்டி

     ஒரு வீடு அல்லது அலுவலகம் முழுவதும் குளிரூட்ட வேண்டும் என்றால்,  வெளியில் கம்ப்ரசர் பகுதிகளை  வைத்துவிட்டு, குழாய்கள் மூலம் பல இடங்களை குளிரூட்ட முடியும்.
     இது மின்சார செலவைக் குறைக்கும்.
     ஒரே இடத்தில் மின்இணைப்பு, பழுது பார்த்தல் போன்ற வசதிகள் இருக்கும். வெறும் குழாய் இணைப்பு  மூலம் குளிர் காற்று அனுப்பினால்
போதுமானது.
     பெரிய அளவில் செய்யும்போது சாதனங்களை சத்தம் வராத தூரத்தில் வைக்க முடியும்.
     பொருத்தும் செலவு உள்பட ஆரம்
பகட்ட செலவுகள் இதில் அதிகம்.

அறை கொள்ளளவு

குளிரூட்டியை தேர்ந்து எடுப்பதில் அறை அளவு மிக முக்கியம். நம் அறைக்கு அவசியமான கொள்ளளவை தேர்ந்து  எடுப்பது செலவை மிச்சப்படுத்தும். பொதுவான அளவுகளாக  நிறுவனங்கள் கூறுவது... பத்தடி அகலமும் பத்தடி நீளமும்  உடைய அறைக்கு ஒரு டன் கொள்ளளவு போதுமானது. பத்துக்கு பதினைந்து அடி உடைய அறைகளுக்கு ஒன்றரை டன்  அளவு சாதனம் தேவை.

200 சதுர அடி அளவு அறைகளுக்கு 2 டன் தேவை. 200 சதுர அடிக்கு மேல் உள்ள அறைகளுக்கு  2 டன்னுக்கு மேல்  அளவுள்ள சாதனம் தேவை.

அவசியம் கவனிக்க வேண்டிய அம்சங்கள்...

சீலிங் உயரமாக இருந்தால் - அதாவது, 9.5 அடிக்கும் மேல் இருந்தால் கொள்ளளவு மாறுபடும்.அறை கிழக்கு நோக்கி  இருந்தால் இந்த அளவை விட அதிகம் தேவை.வெளி வெப்ப அளவு 40 டிகிரிக்கு மேல் இருந்தால் / அதிக சாளரங்கள்  உள்ள அறையாக இருந்தால் / வீடு

அதிக உயரத்தில் இருந்தால்...

கொள்ளளவு கணக்கிடும் போது இவற்றையும் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும்.

மின்சார சிக்கனம்

கடைகளுக்குச் சென்று பார்வையிடும் பொழுது பேட்ச் போல நட்சத்திர வட்டம் ஒட்டப்பட்டு இருக்கும். இது சாதாரண  ஸ்டிக்கர் அல்ல. எங்கும் ஒட்டப்படும் இலவச ஸ்டிக்கரும் அல்ல. இது பணத்தை மிச்சப்படுத்தும் ஸ்டிக்கர்.

அதுதான் ஸ்டார் ரேட்டிங் எனப்படும் பவர் ஸ்டிக்கர். இந்தத்  தர மதிப்பை BEE எனும் Bureau of Energy   Efficiency  வீட்டு உபயோக சாதனங்களுக்கு வழங்கும்.

எடுத்துக்காட்டாக... ஒன்றரை டன் ஸ்ப்ளிட் ஏ.சி. 12 மணி நேரம் இயங்குவதாக எடுத்துக் கொள்வோம் (இது ஒரு  தோராய கணக்கீட்டு அளவே...).

1 ஸ்டார் குறியீடு என்றால் ஒரு மாதத்துக்கு ரூ.1,361 மின் கட்டணம்.
3 ஸ்டார் குறியீடு என்றால் ரூ.1,166.
5 ஸ்டார் குறியீடு என்றால் ரூ.1,020.
ஒரு டன் ஏசி 8 முதல் 10 மணி நேரம் வரை இயங்கும்போது...
1  ஸ்டார் என்றால்  ரூ.907/மாதம்
3 ஸ்டார் என்றால் ரூ.777/மாதம்
5 ஸ்டார் என்றால் ரூ.680/மாதம்

ஸ்டார் தர மதிப்பில் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.300 சேமிக்க வாய்ப்பு இருக்கிறது,  மின்சார சேமிப்புக்கு  இன்போரு முக்கியமான விஷயம் இப்பொழுது அறிமுகம் ஆகியிருக்கும் இன்வர்ட்டர்  தொழில்நுட்பம். இன்வர்ட்டர்  என்றால் மின்சாரம் இல்லாமல் ஓடும் வசதி இல்லை. இது AC - DC இன்வர்ட்டர். சாதாரண தொழில்நுட்பத்தில்  கம்ப்ரசர் சீராக ஓடிக்கொண்டு இருக்கும்.

இன்வர்ட்டர் தொழில்நுட்பம் என்பது AC  மின்சார வகையை மாற்றி DC மின்சாரமாக மாற்றும். அங்கு கம்ப்ரசர் ஒரே  மாதிரியாக ஓடாமல் எத்தனை குளிரூட்டல் தேவையோ அதற்கு ஏற்றவாறு  இயங்கும். தேவையான வெப்பநிலையை  உடனே அனுப்பும் திறனும் அதிகம். அதனால் மின்சாரம் மிச்சமாகும். 150 சதுர அடி அறைக்கு ஒன்றரை டன் தேவை  என்றால், இன்வர்ட்டர் டெக்னாலஜியில் சிறிது குறைந்த அளவில் வாங்கிக் கொள்ளலாம். இவை புதிய வகை ஆதலால்  கவனமாக தேர்ந்து எடுக்க வேண்டும். சாதாரண வகையை விட விலை அதிகம்.

EER

எனர்ஜி எபிசியன்சி ரேஷியோ... அதாவது, குளிரூட்டும் சக்தியை எவ்வளவு மின்சக்தி தேவை என்பதோடு வகுத்தால்  வரும் விடையே இது. 10,000 BTU(british thermal unit) இருந்தால் 1200 வாட்ஸ் எடுத்துகொள்ளும்.  10,000/1200 =8.3.  இந்த ரேட்டிங் எந்த அளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு மின்சார உபயோகத்தில்  சிறப்பாக இருக்கும்.

ஆன்ட்டி பாக்டீரியா ஃபில்டர் கண்ணுக்குத் தெரியாத தூசிகள்,கிருமிகள், முடி, பூச்சிகள் போன்றவற்றை தடுக்கும்  வடிகட்டி. இதனால் சாதனத்துக்குள் தூசி நுழையாமல் தடுக்கப்படுவதால் இன்னும் அதிக நாட்களுக்கு உழைக்கும்.

வெப்பமூட்டும் வசதி - ஹீட்டிங் தொழில் நுட்பம்சில சாதனங்கள் அறையை சூடு ஏற்றும் வசதியுடன் வருகின்றன.  குளிர் காலங்களில் காற்றைச் சூடுப்படுத்தவும், வெயில் காலங்களில் குளிரூட்டவும் செய்யும். இவை அதிகபட்ச குளிர்  நகரங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.ஈரப்பதத்தை உறிஞ்சும் வசதிசில நாட்கள் காற்றில் ஈரப்பதம் மட்டும் இருக்கும்.  கசகசவென வேலையே ஓடாது. அப்போது dehumidification  வசதி உதவும்.

தூசி வடிகட்டி

dust filter வசதி பல இடங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும். தூசி உள்ள காற்றை சுத்தப்படுத்தி தூய  காற்றை அனுப்பும். சாதனமும் நீண்ட நாள் உழைக்கும்.

பொருத்தும் வசதிகள்

இன்ஸ்டாலேஷன் எனப்படும் பொருத்தும் வசதியை கவனிக்க வேண்டியது மிக அவசியம். கடைகளில் வாங்கினாலும்  சரி, ஆன்லைனில் வாங்கினாலும் சரி... அது பற்றி தெளிவாக கேட்டுக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் இவற்றில் தச்சு  வேலை,  கட்டிட வேலை, குழாய் வேலை போன்றவை அடங்கி இருக்கும். அதைத் தவிர உயரமான  - ஏற முடியாத  இடங்களில் ஏணி அல்லது சாரம் அமைக்கவும் வேண்டி இருக்கும்.

டிரில்லிங் செய்ய கூடுதல் கட்டணம் கேட்பதும் உண்டு. அடுத்து மின்சார கம்பிகள்,  குளிர்காற்றை சுமந்து செல்லும்  தாமிர குழாய்கள், நீர் வெளியேற்றும் பி.வி.சி. குழாய்கள் கம்ப்ரசர் வெளியே வைக்க ப்ராக்கெட்டுகள். 3 பின் மின் வசதி  என்று பொருத்துதலில் பல விஷயங்கள் அடங்கி இருக்கின்றன. எனவே மிகக் கவனமாக இன்ஸ்டாலேஷன் சார்ஜ் பற்றி  பேசிக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் சுமையை விட சுமை கூலிக்கு அதிகம் கொடுத்த கதையாகிவிடும். முக்கியமாக  பழைய வீடுகளில் சரியாகத் திட்டமிட்டுக்கொள்வது மிகுந்த அவசியம்.

கூடுதல் கவனம்

அறைக்குத் தேவையானதை விட பெரிய ஏ.சி. வாங்கினால் பிரச்னை இல்லை என்பதை விட, சரியான அளவில் தேர்ந்து  எடுப்பதே நல்லது. அறையை அதிகபட்சமாக குளிரூட்ட தேவை இல்லை. அதற்கு அதிக மின்சாரமும் செலவாகும்.

சரியான அளவில் வாங்காவிடில் அறை சரியாக குளிரூட்டப்படாது. அது ஏசியின் அவசியத்தை போக்கிவிடும்.சர்வீஸ்  மிக அவசியமாதலால் உள்ளூரில் யார் சிறந்த சேவை அளிக்கிறார்கள் என்று கவனிப்பது நல்லது, ஒவ்வொரு ஊரிலும்  ஒவ்வொரு பிராண்ட் நல்ல சேவை வழங்கும். எல்லா ஊருக்கும் பொதுப்படுத்தி இவர்கள் நல்ல சர்வீஸ் என்று சொல்ல  முடியவில்லை.

ஸ்டார் ரேட்டிங் பார்க்கும்போது மூன்றுக்கு குறையாமல் வாங்குவது நல்லது. சில இன்வர்ட்டர் ஏசிகளில் ஸ்டார்  ரேட்டிங் இருக்காது. காப்பர் கண்டன்சர், அலுமினியம் கண்டன்சர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். காப்பர் கண்டன்சர்  தொழில்நுட்பத்தில் சிறந்தது. கடற்கரையோர நகரங்களில் அரிப்பு ஏற்பட்டு விரைவில் பழுதாகும்.  அலுமினியம் என்றால்  வாழ்நாள் குறைவு. காப்பர் காயில் என்றால் சாதனத்தைத் திறந்து பார்த்தால் நீலநிறம் கோட்டிங் இருப்பதாக  தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் நலம். எதுவாக இருந்தாலும் anti corrosion coating இருக்கிறதா என்று  பார்த்துக் கொள்வது அவசியமாகும்.

பட்ஜெட்டுக்காக விண்டோ ஏசி பொருத்துவது சரி என்றாலும், அவை ஸ்ப்ளிட் ஏசி அளவுக்கு வசதிகள் இருக்காது. சிறிது  செயல்திறனும் குறைவு. முக்கியமாக ஸ்டார் ரேட்டிங், இன்வர்ட்டர் வசதி, பாக்டீரியா ஃபில்டர் போன்றவை ஸ்ப்ளிட்  வகைகளில் மட்டும் இருக்கும்.

ஆன்லைனில் வாங்கும்போது ரிவியூ படிப்பது முக்கியம். அதுவும் நம் ஊரில் அந்த பிராண்டு சர்வீஸ் சேவை பற்றி  விசாரிப்பது, வாரண்டி காலத்துக்குள் பழுது ஏற்பட்டால் திருப்பி கொடுக்கும் அல்லது பழுது நீக்கித்தரும் வசதிகளை  கவனிக்க வேண்டும். நம்பிக்கையான / ஒரிஜினல் வகையை அனுப்புவார்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஏர் கூலர்கள் வெளியே இருக்கும் காற்றை குளிர்படுத்தி அனுப்பும். ஏ.சி. உள்ளே இருக்கும் காற்றை குளிர் படுத்தும்.  அப்போது அந்தக் காற்றே அங்கு இருப்பதால் பாக்டீரியாக்கள் உருவாக நேரிடலாம். தொடர்ந்து
8 மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்தாமல் வெளிக்காற்றை அனுமதிப்பது நல்லது. உள்ளேயே காற்று சுழற்சி  ஏற்படும்போது ஃபில்டர் வசதி இருப்பது நல்லது.

ஏர் ஃப்ளோ - அதாவது , ஏசியில் இருந்து வரும் காற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கும்போது அறை வேகமாக  குளிரூட்டப்படும். இது உள்ளே அமைந்திருக்கும் காற்றாடியின் வேகத்தை பொருத்தது. காற்றாடி வேகத்தை குறைத்தோ,  ஏற்றியோ அறையின் காற்று சுழற்சியை கட்டுப்பாடு செய்யலாம்.

ரிபிர்ஜன்ட் எனப்படும் குளிரூட்டப் பயன்படும் வேதி திரவம் சூழலியலில் குறைந்தபட்ச பாதிப்பு இருப்பதாக தேர்ந்து  எடுப்பது சுற்றுச் சூழலுக்கு நல்லது.

வோல்டேஜ் ஸ்டெபிலைசர்

0.8 டன்னுக்கு குறைவு என்றால் 2KVA
1.2 டன்னுக்கு குறைவு என்றால் 3 KVA
1.6 டன்னுக்கு குறைவு என்றால் 4KVA
2.5 டன்னுக்கு குறைவு என்றால் 5KVA
3 டன்னுக்கு குறைவு என்றால் 6KVA இந்த விதத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

வோல்டாஸ்

மிக பிரபலமான இந்திய நிறுவனம். மும்பையில் 1954ல் ஆரம்பிக்கப்பட்டு, பலரின் நம்பிக்கையை பெற்று இருக்கிறது.

2, 3, 5 ஸ்டார் ரேட்டிங் உள்ள ஏ.சி. வகைகள் உள்ளன. ஸ்ப்ளிட், சாளரம் இரு வகைகளும் உள்ளன.
கம்ப்ரசர் 5 வருட வாரன்டியுடன் வரும்.டஸ்ட் ஃபில்டர், பாக்டீரியா, ஆன்ட்டிபங்கஸ், 3d ஃப்ளோ, ஆட்டோ ரீஸ்டார்ட்,  ஸ்லீப் மோடு, EER ரோட்டரி கம்ப்ரசர் என்று பல வசதிகளை உள்ளடக்கிய மாடல்கள் உண்டு.

Voltas Luxury 183 LYE Split AC (1.5 Ton, 3 Star Rating, White & Gold)
இந்த ஒன்றரை டன் மாடல் கிட்டத்தட்ட ரூ. 34 ஆயிரம் வரை ஆகலாம். 3 ஸ்டார், 1559 வாட்ஸ், ரிமோட், எல்.இ.டி.  திரை, டைமர், ஸ்விங், ஸ்லீப் மோடு மற்றும் பல வசதிகள் உண்டு. டர்போ ஏர் ஃப்ளோ வசதி உள்ளது. விரைவில்  அறையை குளிரூட்டும்.

ப்ளு ஸ்டார்

1943ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் இன்றும் குளிர்சாதன தொழில் நுட்பத்தில் புகழ் பெற்று விளங்குகிறது. இந்தியா  மட்டுமல்ல... இன்னும் பல நாடுகளில் இவர்கள் கால் பதித்து உள்ளனர்.1, 2, 3, 4, 5 ஸ்டார் ரேட்டிங், விண்டோ, ஸ்ப்ளிட்  வகைகளில் கிடைக்கும்.ஆட்டோ ரீஸ்டார்ட், ஆன்ட்டி கரோசிவ் கண்டன்சர், ஸ்லிப் மோடு... எளிதில் சுத்தம் செய்ய  முடியும். ஃபேனில், ஆன்ட்டி ஃப்ரீஸ் தெர்மோ ஸ்டாட், டைமர் என்று பல்வேறு வசதிகளோடு கிடைக்கிறது.

Blue Star CNHW18CAF/U Inverter Split AC (1.5 Ton, White)கிட்டத்தட்ட 45 ஆயிரம் ரூபாய்  விலை. ஒன்றரை டன், காப்பர் கண்டன்சர், இன்வர்ட்டர் வசதி,  தெர்மோ ஸ்டாட், ஆன்ட்டி பாக்டீரியல் ஃபில்டர், ஆக்டிவ்  கார்பன் ஃபில்டர், டஸ்ட் ஃபில்டர்,  5 வருட வாரன்டி இன்னும் பல வசதிகளோடு உள்ளது.

எல்.ஜி. (LG LIFE’S GOOD)

தென் கொரியாவில் ஆரம்பித்து ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு சாதனமாக அமர்ந்து இருக்கும் அளவுக்கு இவர்கள்  புகாத வீட்டு உபயோக சாதனங்களே இல்லை. வழக்கம் போல கடைகளோடு உறவு நன்றாக இருப்பதால், இவர்களை  நன்றாக புரொமோட் செய்கிறார்கள். கஸ்டமர் சர்வீஸ் எல்லா ஊர்களிலும் இருப்பது இவர்களின் பலம்.

L-BLISS PLUS , 5 STARLWA3BP5Aஎடுத்துக்காட்டுக்கு ஒரு சாளர வகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு டன்,  5 ஸ்டார் குறியீடு உள்ளது. விலை தோரயமாக 29 ஆயிரம் ரூபாய். டைமர், ஸ்லீப் மோடு, டி-ஹுமிடிஃபிகேஷன் போன்றவை உள்ளன.

சாம்சங்

இந்நிறுவனத்தை பற்றி அறிமுகமே தேவையில்லை. மூலை முடுக்கெல்லாம் இவர்கள் கிளை பரப்பி உள்ளார்கள்.  தரத்திலும் குறையாமல் இருக்கிறார்கள். இவர்களின் சிறப்பம்சம் வோல்டேஜ் ஏற்றத் தாழ்வுகளை சமாளிக்கும் வகையில்  உருவாக்கி இருப்பதுதான். வழக்கம் போல டி-ஹுமிடிஃபிகேஷன், ஆட்டோ கிளீனிங் சுத்தம் செய்யும் வசதி, டர்போ  கிளீனிங் என்று விதவிதமாகக் கொடுக்க தவறவில்லை.

1, 2, 3, 4, 5 ஸ்டார் ரேட்டிங்களில்      வருகின்றன. 54 டிகிரியில் கூட குளிரச் செய்யும் தொழில்நுட்ப  வசதி இருக்கிறது. ஒரு வருட வாரன்டி, 4 வருட கம்ப்ரசர் வாரன்டி கொடுக்கிறார்கள். உதாரண மாடல் அதிகபட்ச  விலையில் ரூ. 46,900 ஆகிறது. இதற்கு வெளியே தனி ஸ்டெபிளைசர் தேவை இல்லை. டிஜிட்டல் இன்வர்ட்டர்  கம்ப்ரசர்க்கு 10 வருட வாரன்டி என்பது நல்ல அம்சம். வைரஸ் ஃபில்டர், எளிதில் சுத்தம் செய்யும் வசதி, ஆன்ட்டி  கரோஷன் உள்ளது. ஆன்ட்டி கரோஷனுக்கு உதாரணமாக இந்த மாடலில் உள்ள அமைப்பை கவனிக்கலாம்.

ஹிடாச்சி

புதிய தொழில்நுட்பத்தில் சாதனங்களை உடனடியாக அறிமுகப்படுத்தும் பிராண்டு. மின் உபயோகத்தில் சிறப்பாக  இருப்பதே இவர்களின் சிறப்பு. புதிய வகை ஆன்ட்டி  பாக்டீரியா ஃபில்டர் உள்ளதால் காற்று நன்றாக  சுத்தப்படுத்தப்படுகிறது. இவர்களின் விண்டோ வகையில் ட்வின் மோட்டோர் தொழில்நுட்பம் சிறப்பாக உள்ளது. ஒரு  வருட வாரன்டி, 5 வருட கம்ப்ரசர் வாரன்டி UV கிளீனர், டி.சி. பவர் சிஸ்டம், ஆன்ட்டி அலர்ஜன் என்று இவர்களும் பல  வசதிகளோடு இறக்குகிறார்கள்.

ஸ்ப்ளிட், விண்டோ தவிர டக்ட் ஏ.சி. அதாவது, கேசட் ஏ.சி. எனப்படும் சீலிங்கில் பொருத்துவதும் வந்துள்ளது.  இங்கு  கொடுத்து இருப்பது அதுபோன்ற ஒன்று. வீட்டில் பெரிய ஹால் போன்ற அமைப்பு கட்டியவர்களுக்கு இது உபயோகமாக  இருக்கும். வீடு முழுக்க குளிரூட்டும் அமைப்பு செய்ய வேண்டியவர்களுக்கும் இது நல்லது. ஒரு வருட வாரன்டி, 4 டன்   கொள்ளளவு, ஃபில்டர், புதுக்காற்றை உள்ளிழுக்கும் வசதி,  டைமரில் செட் செய்யும் வசதி போன்றவை உள்ளது.

இவை தவிர ஹையர், கோத்ரேஜ் , வீடியோகான், டைகின், வேர்ல்பூல், ஜெனரல் என்று  பல முன்னணி நிறுவனங்கள்  உள்ளன. இதுதான் சிறந்த குளிரூட்டி சாதனம் என்று சுட்டிக்காட்டுவதை விட, நம் உபயோகம், அறை அளவு, மின்சார  சிக்கனம், காற்று சுத்தப்படுத்தும் வசதி, கம்ப்ரசர் கோட்டிங், கொள்ளளவு, ஸ்டார் ரேட்டிங், இன்ஸ்டாலேஷன் என்று பல  விஷயங்களை கவனித்தே வாங்க வேண்டி இருக்கிறது.

எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது பட்ஜெட். நமக்குத் தேவையான வசதிகள் என்ன விலையில் கிடைக்கிறது  என்று பார்த்துக் கொள்ளலாம். அடிப்படை தொழில்நுட்பங்கள் சரியானதாக இருப்பதை சமரசம் செய்யாமல் தேர்ந்தெடுக்க  வேண்டும். அது இது என்று விளம்பரப்படுத்தும் வசதிகளுக்கு நுகர்வோர் பலியாகாமல் இருப்பது மட்டுமே பெரிய சவால்!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget