2016ம் ஆண்டில் கோலிவுட்டில் முத்திரை பதித்தவர்கள்

ஒவ்வொரு ஆண்டு முடிவிலும் கடந்து போன அந்த ஆண்டின் நாட்களையும், நினைவுகளையும் ஞாபகப்படுத்துதிலும் தனி சுகம் உண்டு. அதிலும்
சினிமா ரசிகர்களுக்கு கடந்த சில வருடங்களாகவே கொண்டாட்டமான வருடங்களாக இருந்து வருகிறது.

கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை சராசரியாக 200-ஐத் தாண்டிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து திரைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு அது பெரிய விஷயமேயில்லை. ஆனால், தேர்ந்தெடுத்து, தேடித் தேடிப் படங்களைப் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான்.

தரமான, நல்ல திரைப்படங்களின் வருகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. மற்ற மொழிப் படங்களைப் பார்க்கும் போது நமக்குக் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது. மலையாளப் படங்களுக்கென எப்போதுமே தனி அடையாளம் உண்டு. கலர் கலராக படம் காட்டிக் கொண்டிருந்த ஹிந்தித் திரையுலகம் கூட அவ்வப்போது 'தங்கல்' மாதிரி படங்களை எடுத்து தங்களது தடத்தை மாற்றிக் கொள்கிறார்கள்.

ஆனால், தமிழ்த் திரையுலகத்தில் 'ஜோக்கர்' மாதிரியாக எந்த நட்சத்திர சிறப்பம்சங்களும் இல்லாமல் மக்களுக்கும் கொஞ்சம் சொல்ல வேண்டும் என்று வரும் படங்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. மசாலாப் படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை 'முத்திரை' பதிக்க விரும்பும் கலைஞர்களுக்கும், படங்களுக்கும் கொடுத்தால் தமிழ் சினிமா இன்னும் வளரும். இருந்தும் இந்த ஆண்டில் தங்களது தனித்துவத்தால் தனி முத்திரை பதித்துள்ள சிலரைப் பற்றிப் பார்ப்போம்.

இயக்குனர் ராஜு முருகன்

'ஜோக்கர்' என்ற பெயரில் படத்தின் விளம்பரம் வெளியான போதே கவனத்தை ஈர்த்த படத்தின் முன்னோட்டமாக வந்த 'என்னங்க சார் உங்க சட்டம்...' என்ற பாடல் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. கமர்ஷியல் சினிமாவாக, மசாலாத்தனமாக இல்லாமல் ஒரு 'கழிப்பறை' பற்றிய விஷயத்தை மையக் கருவாக வைத்துக் கொண்டு பல விஷயங்களைக் கொண்ட படமாக வெளிவந்த 'ஜோக்கர்' படத்தை இயக்கிய ராஜு முருகன் பாராட்டப்பட வேண்டிய இயக்குனர்களில் முதன்மையானவர்.

மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் போன்றவர்களை மட்டுமே தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்களின் அடையாளமாகக் காட்டிக் கொண்டிருக்கும் சிலர் ராஜு முருகன் போன்ற இயக்குனர்களையும் அழுத்தமாக அடையாளம் காட்டினால் இன்னும் பல நல்ல தமிழ்த் திரைப்படங்கள் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை.

இயக்குனர் சுதா கொங்கரா

திரைப்படத் துறையில் சில துறைகளில் ஆண்கள் மட்டுமே சிறப்பாக செயலாற்ற முடியும் என்று சொல்வார்கள். அந்தக் காலத்தில் இருந்தே திரைப்பட இயக்குனர்களாக சில பெண்கள் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே அதில் பேரும், புகழும் பெற்றார்கள். நடிகைகளாக இருந்து சிலர் இயக்குனர்களாக மாறினார்கள். இருந்தாலும் குறிப்பிடத்தக்க வெற்றிகளை அவர்கள் கொடுக்கவில்லை. இந்த 2016ம் ஆண்டில் ஒரு பெண் இயக்குனர் தரமான, சிறந்த படத்தைக் கொடுத்து அனைவரையும் பேச வைத்தார். அவர்தான் சுதா கொங்கரா.

2010ம் ஆண்டில் வெளிவந்த 'துரோகி' படத்தை இயக்கியதற்குப் பிறகு சுமார் ஆறு ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு சுதா இயக்கத்தில் வெளிவந்த படம் 'இறுதிச் சுற்று'. ஒரே சமயத்தில் ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் வெளிவந்த இந்தப் படம் தமிழில் பெரிய வெற்றியைப் பெற்றது. விமர்சகர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் படத்தைப் பாராட்டினார்கள். இப்போது 'குரு' என்ற பெயரில் இந்தப் படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் சுதா. திறமையை வெளிப்படுத்துவதற்கு ஆண், பெண் பேதம் தேவையில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்

'ஒரு படம், ஓகோன்னு வாழ்க்கை' என திரையுலகில் அடிக்கடி சொல்வார்கள். 'கபாலி' படத்திற்கு முன் தான் இசையமைத்த படங்களின் மூலமும் ஒரு அடையாளத்தைப் பெற்றிருந்தவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஆனாலும், ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் அவருக்கு பட்டி, தொட்டி எங்கும் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. 'நெருப்புடா...' என படத்தின் முன்னோட்டத்திலேயே பற்ற வைத்தவர் அந்த ஒரு பாடலை வைத்தே யு டியூபில் 'கபாலி' படம் பெரிய சாதனைகளைப் புரிய காரணமாக அமைந்தார்.

'கபாலி'க்குப் பிறகு விஜய் நடிக்கும் 'பைரவா' என அடுத்த கட்டத்திற்குள் நுழைந்துள்ளார். எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்குப் பிறகு அவர்களைப் போல திரையுலகத்தில் தனி இடத்தை தங்களுக்கென உருவாக்க இன்றைய இசையமைப்பாளர்கள் யாரும் முயற்சிப்பது போலத் தெரியவில்லை. இருந்தாலும் இன்றைக்கு இருக்கும் கடும் போட்டியில் யார் அப்படி ஒரு இடத்தைப் பிடிக்கப் போகிறார்கள் என்பது பற்றி பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் போட்டியாளர்கள் பட்டியலில் சந்தோஷ் நாராயணனும் ஒருவராகவே இருக்கிறார்.

விஜய் சேதுபதி

இந்த ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த நாயகர்களில் பட்டியலில் விஜய் சேதுபதிதான் முதலிடத்தில் உள்ளார். இவர் நடித்து 'சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க' ஆகிய ஆறு படங்கள் வெளிவந்தன. ஆறு படங்களிலும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த ஆறு படங்களில் 'இறைவி' படத்தைத் தவிர மற்ற படங்கள் முதலுக்கு மோசமில்லாத படங்கள்தான்.

கடந்த வருடத்தில் இவர் நடித்து வெளிவந்த 'நானும் ரௌடிதான்' படத்தின் வெற்றி மூலம் தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டார். அந்தப் படத்திற்கு முன் இவர் நடித்து வெளிவந்த ஐந்தாறு படங்கள் மோசமான தோல்வியைத் தழுவியிருந்தன. இருந்தாலும் 2016ம் ஆண்டில் தன்னை மேலும் மெருகேற்றிக் கொண்டு விதவிதமான கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இன்னும் சில படிகள் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளார்.

தமன்னா

தமன்னா நடித்து இந்த ஆண்டில் 'தோழா, தர்மதுரை, தேவி, கத்திச் சண்டை' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இந்த ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ்தான் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கடுத்து நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் தலா நான்கு படங்களுடன் தமன்னாவுடன் இணைந்துள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோரைக் காட்டிலும் தமன்னா நடித்துள்ள 4 படங்களில் 3 படங்கள் வெற்றிப் படங்களின் பட்டியலில் உள்ளன.

அது மட்டுமல்லாமல் நான்கு படங்களிலும் தமன்னா நான்கு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 'தோழா' படத்தில் பெரும் கோடீஸ்வரரின் தனி உதவியாளராக அல்ட்ரா மாடர்ன் கதாபாத்திரத்தில் நடித்தார். 'தர்மதுரை' படத்தில் கிராமத்தில் பணிபுரியும் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார். 'தேவி' படத்தில் கிராமத்துப் பெண்ணாக, பேயாக, நடிகையாக என மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த மூன்று படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது. மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு 2014ல் 'வீரம்' படத்திலும், 2015ல் 'பாகுபலி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' ஆகிய படங்களில் நடித்தவர் 2016ல் தனி முத்திரை பதித்துள்ளார்.

ரித்திகா சிங்

2016ல் முந்தைய ஆண்டுகளைப் போலவே பல புதுமுகங்கள் அறிமுகமானார்கள். அத்தனை பேரிலும் தனித்துத் தெரிந்தவர் ரித்திகா சிங் மட்டுமே. பாக்ஸிங் வீரராக இருந்தவரை 'இறுதிச் சுற்று' படம் மூலம் நாயகியாக அறிமுகப்படுத்தினார்கள். படத்தில் இவர் எந்தக் காட்சியிலும் நடிக்கவேயில்லை. அந்த அளவிற்கு அந்தக் கதாபாத்திரமாகவே யதார்த்தமாக இருந்தார். அந்தத் துறுதுறுப்பும், சுறுசுறுப்பும் இயல்புத் தன்மையும் அவருடைய கதாபாத்திரத்தை மேலும் மெருகேற்றியது. அதுதான் இவருக்கு சிறந்த நடிகைகக்கான சிறப்பு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

விஜய் சேதுபதியுடன் இணைந்து 'ஆண்டவன் கட்டளை' படத்திலும் தன்னுடைய யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தொடர்ந்து நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ்த் திரையுலகில் இவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

நகைச்சுவை நடிகர், நடிகைகளில் யார் தனி கவனத்தை ஈர்த்தவர்கள் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

சந்தானம், வடிவேலு ஆகியோர் நாயகர்களாக தங்களை முன்னேற்றிக் கொண்டதில் இருந்து அவர்கள் இருவரது இடங்களும் இன்னும் நிரப்பப்படாமலேயே இருக்கின்றன. சூரி ஒரு படத்தில் சிரிக்க வைத்தால் அடுத்த படத்தில் அமைதியாக இருக்க வைத்து விடுகிறார். சதீஷ் பெயரையெல்லாம் நகைச்சுவை நடிகர் என்ற பட்டியலில் கூட சேர்க்க முடியாது. ஆர்.ஜே. பாலாஜி, நான் கடவுள் ராஜேந்திரன், பாலசரவணன், யோகி பாபு உள்ளிட்ட சிலர் இப்போதுதான் சிரிக்க வைக்க முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நகைச்சுவை நடிகைகளில் கோவை சரளாவைச் சொல்லலாம் என்றால் சில படங்களில் கூச்சல் போட்டே நோகடித்துவிடுகிறார். தேவதர்ஷினி, மதுமிதா, ஆர்த்தி ஆகியோருக்கு சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் கிடைக்கவில்லை.

2016ல் தனி கவனம் ஈர்த்தவர்கள் பட்டியல், 2017ம் ஆண்டில் இன்னும் அதிகமாக வேண்டும் என்பதே தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் ஆவல்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget