பீரியட்ஸ் குழப்பத்திற்கு தீர்வுகள்

‘பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்’ என்றான் பாரதி.பெண்களின் மிக முக்கியமான ஒரு பிரச்னை, அப்படி பேசத் தயங்கும் ஒரு பொருளாக
மாறிப் போனது முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது. மாதவிலக்கு என்ற மூன்று நாள் நிகழ்வில் ஒரு பெண் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கடுமையான ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கிறாள். அது சுற்றியிருப்பவர்களுக்குப் பெரும்பாலும் தெரிவதில்லை... சமயங்களில் பெண்களுக்கே தெரிவதில்லை.குடும்பத்தின் அச்சாணியாக இருக்கும் பெண்ணின் ஆரோக்கியமும், ஆரோக்கியக் குறைபாடும் வீடு முழுவதும் எதிரொலிக்கும் வல்லமை கொண்டது என்பதால் அதைப் பற்றிக் துணிவோடும், கொஞ்சம் விளக்கமாகவும் பேசுவோம்.பெண்களுக்கும்... பெண்களைச் சார்ந்த ஆண்களுக்கும் இந்தக் கட்டுரை  பயன் தரும் என்ற நம்பிக்கையோடு!மாதவிலக்கு ஏன்? எதற்கு? எப்படி? விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் மல்லிகா சாமுவேல்.

பீரியட்ஸ்...

சினைப்பையில் உருவாகும் கருமுட்டைகள் ஹார்மோன் சுழற்சிக்கு உட்பட்டு, முழு வளர்ச்சியடைகிறது. வளர்ச்சி யடைந்த பிறகு உடைந்து பின்னர் வரக்கூடிய ஹார்மோன் மாற்றத்தின் முடிவால், கர்ப்பப்பையில் உதிரப்போக்கு ஏற்படுவதையே மாதவிலக்கு என்கிறோம். சினைப்பையின் இந்த செயல்பாட்டை மூளையின் உதவியோடு நாளமில்லாச் சுரப்பிகள் கவனித்துக்கொள்ளும்.

பொதுவாக, 9 முதல் 15 வயதுக்குள் முதல்முறை மாத
விலக்கு ஏற்படுகிறது. ‘பூப்பெய்துவது’ என்ற இந்த நிகழ்வு 9 வயதுக்குக் கீழாகவோ அல்லது 15 வயதுக்கும் மேலாகவோ நடந்தால் அது வழக்கத்துக்கு மாறானது. இவர்களை மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனை பெறுவது நல்லது. பெண் குழந்தைகள் பூப்பெய்துவதற்கு 3, 4 வருடங்களுக்கு முன்பிருந்தே எடைகூடுதல், உயரம் அதிகரித்தல், மார்பக வளர்ச்சி என உடல்மாற்றங்கள் இருக்கும். இந்த அறிகுறிகளின் போதே, அக்குழந்தையை மாதவிலக்கு நாட்களுக்குத் தயார்படுத்த வேண்டும். சில குழந்தைகளுக்கு முதல் மூன்று வருடங்களில் சுழற்சிகள் சீரற்று இருக்கலாம். அது இயல்பானதே. பருவமடையும் நேரத்தில் நாளமில்லாச் சுரப்பி கள் முழு வளர்ச்சியடையாமல் மூன்று வருடங்களுக்குப் பின்னர் நன்கு வளர்ந்தபிறகு சுழற்சி தானாகவே சரியாகவிடும். ஆனால், மூன்று வருடங்களுக்குப்பிறகும் சுழற்சி சீராகவில்லை எனில் மருத்துவ ஆலோசனை முக்கியம்.

சரியான சுழற்சி என்பது....

21 முதல் 35 நாட்களுக்குள் ஏற்படுவது இயல்பான சுழற்சி. ஆரம்ப கட்டத்தில் உதிரப்போக்கு ஒவ்வொரு முறையும் 2 முதல் 8 நாட்கள் வரை இருக்கும். வெளியேறும் ரத்தத்தின் அளவு ஒரு சுழற்சிக்கு 15 முதல் 80 மிலி அளவு இருக்கலாம். இது இயல்பு நிலை. இந்த அளவு பெரிதாக மாறுபடும்போது அல்லது இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கிறது என்றால் மருத்துவ ஆலோசனை அவசியம். காரணம் அது உடல்ரீதியான பிரச்னைகளின் அறிகுறியாக இருக்கலாம். ஹார்மோன் மாறுபாடு, சினைப்பையில் நீர்க்கட்டி, அதிக அல்லது குறைந்த எடை, இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்னை, இன்சுலின் குறைபாடு, மன அழுத்தம் என்று இதற்கான காரணங்கள் எதுவாகவும் இருக்கலாம் என்பதால் ஆலோசனை கட்டாயம்.

நாற்பதுக்குப் பிறகு...

30 - 40 வயதில் அதிகமான உதிரப்போக்கு இருந்தால் கர்ப்பப்பை கட்டி, புற்றுநோய் கட்டிகள் உள்ளிட்டவை காரணங்களாக இருக்கலாம். கருத்தடை மாத்திரைகள், வலிநிவாரணிகள் எடுத்து வருபவர்களுக்கும் அதிக உதிரப்போக்கு வரக்கூடும். மாதவிலக்கு அல்லாத நேரங்களிலும் உதிரப்போக்கு, தாம்பத்திய உறவுக்குப் பின் உதிரப்போக்கு என்பதையெல்லாம் எதிர்கொண்டால் அது உள் உறுப்பு பிரச்னையின் அறிகுறி என்பதையும் உணர்ந்து மருத்துவரை அணுக வேண்டும்.

அந்த மூன்று நாட்களில்...

மாதவிலக்கு நாட்களில் வலியும், ரத்தப்போக்கும் இயற்கை. அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். சாப்பிடாமல், வேலை செய்யாமல் ஒரேயடியாக முடங்கிப் போவது தேவையில்லாத ஒன்று. சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் சுகாதாரமாக இருப்பதும் சுறுசுறுப்பாக இருப்பதும் அவசியம்.

மெனோபாஸ்..

ஓவரியின் செயல்பாடு   சுருங்கி, மாதவிலக்கு சுழற்சிக்குத் தேவையான அத்தனை ஹார்மோன்களும் குறைந்து சமயத்தில் தீர்ந்தும் போவதால் மாதவிலக்கு வராத நிலையையே மெனோபாஸ் என்கிறோம். 45 வயதுக்கு மேல் ஓராண்டு காலம் தொடர்ந்து மாதவிலக்கு ஏற்படவில்லை என்றால் அது முழுமையான மெனோபாஸ் ஆகும். இந்நிலையில் உள்ள பெண்களில் 80 சதவீதத்தினருக்கு Hot flush எனப்படும் வெப்ப ஊற்று இரவில் ஏற்படும். சாதாரண வேலைகூட செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்படுவார்கள். ஹாட் ஃப்ளஷ் ஏற்பட்டதும் காற்றோட்டமான இடத்துக்குச் செல்ல வேண்டும். சிகிச்சை மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

மெனோபாஸில் மூன்று நிலை..

மெனோபாஸுக்கு முந்தைய நிலை, மெனோபாஸ், பிந்தைய நிலை என்று மூன்று நிலைகள் இதில் உண்டு. மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே அதற்கான அறிகுறிகள் தோன்றிவிடும். முதலில் 28 நாட்களில் வந்துகொண்டிருந்த மாதவிடாய் 40 நாட்கள், 50 நாட்களில் வர ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக நின்றுவிடும்.மாதவிலக்கு நின்றவுடன் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைந்துவிடுவதால் பிறப்புறுப்பில் ஈரப்பதம் மாறி வறண்டு போய்விடும். அடிக்கடி தொற்றுகள் ஏற்படலாம். சிலருக்கு வெள்ளை பட ஆரம்பிக்கும். மருத்துவரின் ஆலோசனை இங்கும் அவசியம்.  முற்றிலுமாக நின்றபிறகு திடீரென எப்போதாவது உதிரப்போக்கு ஏற்பட்டால் அப்போதும் மருத்துவ ஆலோசனை அவசியம்.

குடும்பத்தினரின் ஆதரவு..

இந்தியப் பெண்கள் மெனோபாஸைப் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. ஏதேனும் பெரிய அளவில் பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே மருத்துவரை அணுகுகிறார்கள். ஆனால், வெளிநாட்டுப் பெண்கள் விழிப்புணர்வோடு ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி(HRT) எடுத்துக் கொள்கிறார்கள். மொனோபாஸால் அவதிப்படும் பெண்களுக்கு HRT வரப்பிரசாதம் என்பதால் இந்தியப் பெண்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக, மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்களுக்கு குடும்பத்தாரின் அன்பும், அரவணைப்பும் கட்டாயம் தேவை.’’

பெண்களுக்கு கவுன்சிலிங் தேவை

- மனநல மருத்துவர் கவிதா
‘‘மாதவிலக்கு மனரீதியாக
எத்தனை கடுமையான மன
அழுத்தத்தை உண்டாக்கக் கூடியது என்பதற்கான உதாரணம் இது.

 தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகிற பெண்களில் பலர் மாதவிலக்கு நேரத்தில் இருப்பவர்கள் என்பதையும், சிறையில் இருக்கும் பெண் குற்றவாளிகளில் பலர் மாதவிலக்கு காலத்திலேயே குற்றங்களைச் செய்திருக்கிறார்கள் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அமெரிக்காவின் Pubmed மருத்துவ இதழ் பதிவு செய்திருக்கிறது. அந்த அளவுக்கு மன ரீதியாக பெண்களைப் பாதிக்கக் கூடியது மாதவிலக்கு.இதை நேரடியாக வெளிக்காட்ட முடியாத பெண்கள் உணர்ச்சி வசப்படுவது, குறிப்பிட்ட உணவுகளுக்காக ஏங்குவது அல்லது அதிகமாக உண்பது, பதற்றம், அடிக்கடி மனநிலை மாறுவது, தூக்கமின்மை போன்றவற்றைச் சந்திக்கிறார்கள். இன்னும் சற்று தீவிரமாகிவிடும் நிலையிலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது, ஆபத்தான சூழ்நிலைகளில் ஈடுபடுத்திக்கொள்வது, அடுத்தவருடன் சண்டை போடுவது போன்றவற்றில் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த நாட்களில் சிந்திக்கும் திறனும் பாதிக்கப்படுவதால் உணர்ச்சிவசப்பட்டு முடிவுகள் எடுப்பது அதிகமாகிவிடுகிறது. மாதாமாதம் நடைபெறும் இந்த மாற்றங்கள் பெண்களை மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தாரையும் பாதிக்கிறது. ‘இது இயற்கைதானே... இதற்கு ஏன் டாக்டரிடம் செல்ல வேண்டும்?‘ என்று பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால், அதன் தீவிரத்தை புரிந்து கொண்டு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம் என்பதைப் பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.’’
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget