பலே வெள்ளையத் தேவா சினிமா விமர்சனம்

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட எம்.சசிக்குமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பி.சோலை பிரகாஷ் இயக்கத்தில் வந்திருக்கும் மற்றுமொரு காதல்
படம் தான் "பலே வெள்ளையத்தேவா''.
படித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் வெட்டி ஆபிஸர் சக்திவேல் எனும் சசிக்குமார். அவரது அம்மா போஸ்ட்மாஸ்டர் ரோஹிணி. அம்மாவுக்கு வேறு ஒரு ஊருக்கு டிரான்ஸபர் ஆனதால், அம்மா, தாத்தாவுடன் அந்த ஊருக்கு வரும் சசி, வந்த உடனேயே கறிக்கடைக்காரர் பாலா சிங்கின் மகள் தனிக்கொடி எனும் தன்யாவை லவ்வுகிறார். முதலில் சசிக்குமாரை காதலிக்க மறுக்கும் தன்யா, ஒரு கட்டத்தில் வயதான ஊர்க்கார பிள்ளை இல்லா ஜோடி, சங்கிலி முருகன் - கோவை சரளாவின் கைங்கர்யத்தால் சசியோடு ஈரூயிர் ஒர் உடல் ஆகிறார். இதற்கிடையில் அந்த ஊர் பிராடு பெரிய மனிதர்களை பகைத்து ஒரு பக்கம் போலீஸ், கேஸ் என அலையும் சசி, அவர்களையும், எந்நேரமும் மெகா சைஸ் அருவாளுடன் திரியும் பாலா சிங் உள்ளிட்ட தடைகள் பலவற்றையும் கடந்து, தனிக்கொடி - தன்யாவை கைப்பற்றி காதலில் வெற்றிக் கொடி நாட்டினாரா.?, இல்லையா...? என்பது தான் "பலே வெள்ளையத்தேவா'' படத்தின் ஒட்டுமொத்த கதையும்..

இதில், வெள்ளையத்தேவன் எங்கே வந்தார்? என விவரமாக யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக அடிக்கடி "பலே வெள்ளையத்தேவா'', என பின்னணியில் மேற்படி, வார்த்தைகளுடன் கூடிய ஒரு டியூனை அடிக்கடிப் போட்டு பில்டப்பும் செய்வதில் ஜெயித்திருக்கிறார் இயக்குனர் பி.சோலை பிரகாஷ்.

மற்றபடி, செல்பி காத்தாயியாக கோவை சரளா, அவரது வூட்டுக்காரராக போற வார பொம்பளைகளை எல்லாம் பார்த்து பெருமூச்சு விடும் பெருசு தனக்கனாக, கணக்கனாக சங்கிலி முருகன், அவர்களது பிள்ளை இல்லா சோகம், வில்லன்- சுந்தரமாக வரும் வளவனின் கேபிள் - டிஷ் ஆன்டனா இடையேயான பிக்கல் பிடுங்கல், பல்லி முட்டை - எச்சில் பெண் சாமியார்,

பிராடு பிரசிடண்ட் தாத்தா இறந்த பிளாஷ்பேக் சம்பவம், நாயகியின் கறிக்கடை அப்பா பாலா சிங்கின் ஏலச்சீட்டு பிராடுத்தனம், வலிப்புக்காக அவர் அருவாவை கூட வைத்திருக்கும் ரகசியம் என சின்னதும் பெரிதுமாய் ஏகப்பட்ட பிரஷ் சீன்களை பட்டர் - ஜாமாக பிடித்து, வழக்கமான காதல் கதை எனும் பிரட்டில் எக்கச்சக்கமாய் தடவி, புதிய தின்பண்டம் எனும் தோற்றத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குனர்.


இயக்குனரின் பட்டர் - ஜாம் சீன் தடவல்களில் மொத்தப் படத்தையும் தூக்கி நிறுத்தி விடலாம்... என சக்திவேலாக நாயகராக சசிக்குமார், நாயகி தனிக்கொடியாக தன்யா, செல்பி - காத்தாயியாக கோவை சரளா, தனக்கன் - கணக்கனாக சங்கிலி முருகன், கறிக்கடை ஏலச்சீட்டுக்காரராக பாலா சிங், புருஷன் இல்லாத லேடி போஸ்ட் மாஸ்டராக, நாயகரின் தாய் தமயந்தியாக ரோஹினி, கேபிள் டி.வி ஒனர் கம் வில்லனாக வளவன் உள்ளிட்ட எல்லோரும் ஏகத்திற்கும் நடித்திருக்கின்றனர்.

அதிலும், "கண்கள் இரண்டால்..." பாட்டு போட்டு.... பின்னணியில் ஒலிக்க, எனக்கு ஒரு ராசி இருக்கு என் பின்னாடி நிண்ணு, யாராவது தலையாட்டிக்கிட்டே லவ்வர் கிட்டே லவ்வ சொன்னா அவங்க லவ் செம்மயா ஒர்க் அவுட் ஆகும்.... எனும் சசிக்குமார், "உனக்கு தனிக்கொடி வேணும்னா தெருக்கோடிக்கு நான் கூப்பிட்டாக் கூட நீ வரணும்..." என அலம்பல் பண்ணும் கோவைசரளா... உள்ளிட்டவர்களின் "பன்ச்" டயலாக்குகள் இயக்குனர் யார்? என கேட்க வைக்கின்றன.

என்றாலும், தான் பெற்ற மகனை அழைத்துப் போய் ஊர் அடாவடிப் பேர்வழியையும் அவரது அடிப்பொடிகளையும் காரணம் சொல்லாது அடிக்க விடும் அம்மா ரோஹினி அடுத்து ஒரு சீனில், "உன்ன புள்ளையா பெத்ததுக்கு.... போஸ்ட் மாஸ்டரான நான், போஸ்ட் ஆபிஸில் இருந்ததை விட அதிகம் போலீஸ் ஸ்டேஷனில் தான் இருக்க வேண்டியிருக்கு...." என அங்காலாயித்துக் கொள்வது உள்ளிட்ட லாஜிக் மிஸ்டேக்குகள் பெரும் பலவீனம்.

ரவிந்திரநாத் குருவின் ஒளிப்பதிவில் காட்சிகள் "பளிச்!" பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு "ப்ச்!" தீலீப் சுப்பராயனின் சண்டை பயிற்சி நச்!" தர்புகா சிவாவின் இசையில் "தாட்டு பூட்டு தாளம்... இது தஞ்சாவூரு மேளம்..", "கண்ணு சீட்டா...." உள்ளிட்ட பாடல்கள் "டச்!"

மேற்படி, ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் பி.சோலை பிரகாஷின் இயக்கத்தில் அடிநாதக் கதை அதரப்பழசாய் இருப்பதால் "பலே வெள்ளையத்தேவா - பல இடங்களில் பரிதாபமாய் பல் இளிக்கிறது பாவம்!"
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget