விண்டோஸ் 10 இலவச மியூசிக் சாப்ட்வேர்

சில ஆண்டுகளுக்கு முன்பு, விண்டோஸ் இயக்கத்தில் எந்த இயக்க முறைமையினைப் பயன்படுத்தி வந்தாலும், 'விண் ஆம்ப்' (WinAmp) என்னும் புரோகிராம் பாடல்கள் கேட்க பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் பின் வந்த பல செயலிகள், விடியோ மற்றும் ஆடியோ பைல்களை இயக்கப் பல வசதிகளுடன் இலவசமாகக் கிடைத்ததால், விண் ஆம்ப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இறுதியில், அந்த நிறுவனமே, அதனை இணையத்திலிருந்து நீக்கிவிட்டது. இன்னும் பழைய விண்டோஸ் 98, விண்டோஸ் எக்ஸ்பி இயக்கமுறைமை உள்ள கம்ப்யூட்டர்களில், சிலர் விண் ஆம்ப் செயலியைப் பயன்படுத்துவதனைக் காணலாம்.

தற்போது பயன்பாட்டில் உள்ள விண்டோஸ் 10 இயக்க முறைமையில், அதன் தொழில் நுட்பத்தினை அதிக பட்சம் பயன்படுத்தக் கூடிய பல இசை செயலிகள், இணையத்தில் கிடைக்கின்றன. பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, விண்டோஸ் 10 மொபைல் சாதனங்களுக்கெனவும் சில நல்ல செயலிகள் கிடைக்கின்றன. அவற்றை இங்கு காணலாம். நம் பாடல் கோப்புகளை தேக்கி வைத்து, நிர்வகித்து, விரும்பும் போது கேட்டு மகிழ இவை நமக்கு உதவுகின்றன. இத்தகைய செயலிகள் பல இருந்தாலும், சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட, பயனாளர்கள் பலரால் பயன்படுத்தப்படுகின்ற செயலிகளை இங்கு பார்ப்போம்.

குரூவ் மியூசிக் (Groove Music): 'குரூவ் மியூசிக்' என்னும் இசை செயலி, மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் 10 பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 10 மொபைல்களிலும், இயக்க முறைமையுடன் பதியப்பட்டு தருவதாகும். நம் இசைக் கோப்புகளை நிர்வகிக்க நல்ல இடைமுகத்தினைத் தருவதுடன், இசைக் கோப்புகளைப் பெற, விண்டோஸ் ஸ்டோருக்கான இணைப்பினையும் தருகிறது. விண்டோஸ் ஸ்டோரில் நம் இசைக் கோப்புகளை சேவ் செய்து வைத்து, விரும்புகையில் எடுத்துப் பயன்படுத்தும் வசதியும் கிடைக்கிறது. எனவே, நம் இசை விருப்பத்திற்கு இது நல்லதொரு தேர்வாக அமைகிறது. இருப்பினும், வேறு சில செயலிகளையும் காணலாம்.

பெர்பெக்ட் மியூசிக் (Perfect Music): Perfect Thumb நிறுவனம், விண்டோஸ் 10 இயக்க முறைமைக்கென பல செயலிகளை வழங்குகிறது. இசையை அனுபவிக்க, விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்தில் இயங்க இந்த செயலியை அளிக்கிறது. இதனை இயக்குகையில், போனை அசைத்தே, இதன் இயக்கத்தினைக் கட்டுப்படுத்தலாம். இந்த செயலி, FLAC, M4A, WMC, WAV, மற்றும் MP3 ஆகிய வடிவங்களில் அமைந்த கோப்புகளை இயக்குகிறது. பாடல் எழுதியவர், பாடல் வகை, ஆல்பங்கள் மற்றும் பாடல்கள் என வகை பிரித்து இவற்றை அறியலாம். பாடல்களை அகர வரிசைப்படியும் தேடிப் பெறலாம். இதனை இலவசமாகப் பெறலாம். இயக்கப்படுகையில் விளம்பரங்கள் குறுக்கே வரும். அவை வராமல் இசையை அனுபவிக்க வேண்டும் எனில், கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இதனை உங்கள் விண்டோஸ் போனுக்கு தரவிறக்கம் செய்திட, https://www.microsoft.com/en-in/store/p/perfect-music/9nblgggzm6cv என்ற தளத்திற்குச் செல்லவும். அல்லது விண்டோஸ் ஸ்டோர் சென்று தேடிப் பெறலாம்.

ஸ்பாட்டிபை (Spotify): விண்டோஸ் 10 மொபைல் போனுக்கென வடிவமைக்கப்பட்ட செயலி. இசையின் பல்வேறு படிவங்களை (rock, classical, blues, country, metal மற்றும் பல) இயக்குகிறது. அத்துடன், இசை வானொலி நிலையங்களையும் இணைக்கிறது. ஆடியோபுக் பலவற்றிற்கு இணைப்புகளைத் தருகிறது. இதுவும் இலவசமாகவே கிடைக்கிறது. நம்மைப் பற்றிய தகவல்களைப் பதிந்து இதனை இறக்கிப் பதிந்து கொள்ளலாம். சிறிது கட்டணம் செலுத்தினால், உயர் நிலை பதிப்பு ஒன்றினைப் பெறலாம். இருப்பினும், இலவசமாகப் பெறப்படும் செயலியே நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதால், இதனையே பலரும் பயன்படுத்துகின்றனர். இதனை விண்டோஸ் ஸ்டோரிலிருந்து பெறலாம். http://target.georiot.com/Proxy.ashx?TSID=15093&GR_URL=https%3A%2F%2Fwww.microsoft.com%2Fen-us%2Fstore%2Fp%2Fspotify%2F9wzdncrfj4wk&o என்ற முகவரிக்குச் செல்லவும்.

வி.எல்.சி. மீடியா பிளேயர்: விண்டோஸ் 10 பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் என இரண்டுக்குமாய் மட்டுமின்றி, விடியோ மற்றும் ஆடியோ பைல்களைத் திறம்பட இயக்கும் செயலாற்றல் கொண்டது இந்த செயலி. பாடலைப் பாடியவர், இசை அமைத்தவர், பாடல் அகரவரிசை, பாடல் பட்டியல் எனப் பல வகைகளில், இசைக் கோப்புகளை வகைப்படுத்திப் பெற்று அனுபவிக்கலாம். இதன் தோற்றத்தினையும் பல வகைகளில் அமைக்க கருப்பொருள் உரு தரப்படுகிறது. டைட்டில் பார், வண்ணக் கலவை, விடியோவினை மீண்டும் மீண்டும் இயக்க, ஒலிக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கான அமைப்புச் சாதனம் மற்றும் Last.fm தளத்துடன் இணைத்துக் கொள்ள வசதி எனப் பல்முனைச் செயல்பாடுகளை இந்த செயலி தருகிறது. இது முற்றிலும் இலவசமே. கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் மட்டுமின்றி, எக்ஸ்பாக்ஸ் ஒன் (Xbox One) சாதனத்தில் இயக்குவதற்கான பதிப்பும் கிடைக்கிறது. இதன் பலதரப்பட்ட வசதிகளுக்காகவே, பெரும்பாலான பயனாளர்களால் இது பெரிதும் விரும்பப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தரவிறக்கம் செய்திட http://www.vlc-player-download.com/ என்ற இணைய தளம் செல்லவும். (இது மேக் கம்ப்யூட்டருக்கான பதிப்பையும் கொண்டுள்ளது. விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கான 32 மற்றும் 64 பிட் என இருவகை பதிப்புகளையும் தருகிறது)

பண்டோரா (Pandora): வி.எல்.சி. பிளேயரைப் போலவே, பண்டோரா செயலியும், விண்டோஸ் 10 பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன் மற்றும் எக்ஸ் பாக்ஸ் ஒன் என அனைத்து சாதனங்களுக்குமான பதிப்புகளைக் கொண்டுள்ளது. இணையத்தில் இயங்கும் ரேடியோ நிலையம் இது. உங்களுக்குப் பிடித்தமான ஓர் இசைக் கலைஞரின் பெயரைக் கொடுத்தால், அவர் சார்ந்த பாடல்களுக்கென தனியே ஒரு இசை நிலையத்தை உருவாக்கித் தரும்.

இந்த செயலி பல இசை நிலையங்களைக் கொண்டுள்ளது. இதிலிருந்து நாம் விரும்பும் வகை இசைக் கோப்புகளைப் பெற்று இயக்கலாம். இலவசமாக இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். சிறிது கட்டணம் செலுத்தினால், விளம்பரம் இல்லாத ரேடியோ நிலையங்களைப் பெற்று இயக்கலாம். இது தரும் பலவகையான இசைக்காகவே, விண்டோஸ் 10 இயக்க முறைமை பயனாளர்கள் மத்தியில் மிகப் பிரபலமானதாக விளங்குகிறது. ஆப்பிள் கம்ப்யூட்டர்களில் இயக்குவதற்கான பதிப்பும் கிடைக்கிறது. இதனை இலவசமாகப் பெற https://www.microsoft.com/en-us/store/p/pandora/9wzdncrfj46v என்ற மைக்ரோசாப்ட் ஸ்டோர் தளத்திற்குச் செல்லவும். இந்த செயலி, Android, BlackBerry, iPad, iPhone, iPod touch, Kindle Fire, NOOK, ஆகிய இயக்க முறைகளில் இயங்கும் வகையில் கிடைக்கிறது.

ஐ ஹார்ட் ரேடியோ (iHeart Radio): எண்ணற்ற ரேடியோ நிலையங்களை ஐ ஹார்ட் ரேடியோ செயலி, விண்டோஸ் 10 இயக்க முறைமையில் அளிக்கிறது. அத்துடன் இசைக்கென தனியே இயங்கும் செயலியாகவும் உள்ளது. பலவகையான இசைப் பாடல்களை இதில் காணலாம். இசை, பாடல் மட்டுமின்றி, உலக நடப்புகளை செய்திகளாகத் தரும் ரேடியோ நிலைய ஒலிபரப்புகளையும் இதன் மூலம் பெறலாம். விண்டோஸ் 10 பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் மற்றும் எக்ஸ் பாக்ஸ் ஒன் என அனைத்து சாதனங்களிலும் இதனை இயக்கலாம். அடிப்படை இயக்கத்தினைத் தரும் செயலி இலவசமாகவும், கூடுதல் வசதிகள் தரும் செயலி கட்டணத்தின் பேரிலும் கிடைக்கிறது. இதனைப் பெற, https://www.microsoft.com/en-us/store/p/iheartradio/9wzdncrfj223 என்ற மைக்ரோசாப்ட் ஸ்டோர் இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும்.

மேலே தரப்பட்டுள்ள செயலிகளுடன், இன்னும் பல செயலிகள், மைக்ரோசாப்ட் ஸ்டோரிலேயே கிடைக்கின்றன. அவற்றையும் தரவிறக்கம் செய்து இயக்கிப் பார்த்து, உங்களுக்குப் பிடித்த இசை செயலியைப் பயன்படுத்தலாம்.

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget