முதல் மாணவன் விமர்சனம்

நடிகர் : கோபிகாந்தி
நடிகை : ஐஸ்வர்யா
இயக்குனர் : கோபிகாந்தி
இசை : சரவணன்
ஓளிப்பதிவு : குமரன்ஜி


கிராமத்து ஏழை மாணவன் கோபி. 12-ம் வகுப்பு படிக்கும் இவர் தந்தையை இழந்து, உடல்நிலை சரியில்லாத தாயுடன் வாழ்ந்து வருகிறார். படித்துக் கொண்டே சிறு சிறு வேலைகளையும் செய்துகொண்டு தன் தாய்க்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். வகுப்பில் முதல் மாணவனாக திகழும் இவர், மாநிலத்திலேயே முதல் மாணவனாக வரவேண்டுமென்று கடினமாக உழைத்து வருகிறார். 

இந்நிலையில், இவருடைய படிக்கும் சகமாணவரான பண்ணையாரின் மகன் இந்த பள்ளியின் மாணவ தலைவராக வேண்டுமென்று ஆசைப்படுகிறான். தனது ஆசையை அப்பாவிடம் கூறும் அவனுக்காக, அந்த பண்ணையார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் துணையோடு தன் மகனை மாணவர்கள் தலைவராக்க பார்க்கிறார். 

ஆனால் பள்ளியின் தலைமையாசிரியரோ நன்றாக படிக்கும் கோபியைத்தான் மாணவர்கள் தலைவராக்க வேண்டும் என்று சொல்கிறார். இதனால் பண்ணையார் கோபிக்கு நிறைய தொந்தரவுகளை கொடுக்கிறார். கோபி வேலை செய்யும் இடங்களில் எல்லாம் தலையிட்டு கோபிக்கு வேலை தரவேண்டாம் என்று சொல்கிறார். கோபியின் படிப்பையும் கெடுக்க பார்க்கிறார். ஒருகட்டத்தில் கோபியை கொல்லவும் முயற்சி செய்கிறார்.

இதையும் மீறி மாநிலத்தின் முதல் மாணவராக கோபி வந்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

கோபிகாந்தி படத்தை தயாரித்து, இயக்கி நடித்திருக்கவும் செய்திருக்கிறார். முதல் படத்திலேயே தனக்கு 3 கதாநாயகிகளுடன் நடித்திருக்கிறார். இவர் படத்தில் காலில் செருப்புகூட போடாமல் நடித்திருக்கும் இவர் படம் முழுக்க முகத்தில் மேக்கப்புக்கு மட்டும் ஒரு குறையும் வைக்கவில்லை. குறிப்பாக, சூளையில் சேறு மிதிக்கும்போதுகூட புல் மேக்கப்பில் இருப்பது இவருக்கே உரிய சிறப்பு. படம் முழுக்க சீரியசாக எடுத்திருந்தாலும் திரையில் பார்ப்பவர்கள் அனைவரையும் சிரிக்க வைக்க மறக்கவில்லை. பாடல் காட்சிகளில்கூட நடனம் ஆடி அனைவரையும் சிரிக்க வைத்தது சிறப்பு.

கதாநாயகிகளாக ஐஸ்வர்யா, தனு, ரம்யா என மூன்று நாயகிகள் இருந்தாலும் ஐஸ்வர்யாதான் நாயகனுடன் இணைந்து டூயட்டெல்லாம் பாடியிருக்கிறார். பண்ணையார் மகளாக வரும் இவருக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற நாயகிகளான தனு, ரம்யா ஆகியோருக்கு கதையில் முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் வெறுமனே வந்து போகிறார்கள்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சுகி, படம் முழுக்க இறுமிக்கொண்டே இருந்தாலும் லிப்ஸ்டிக் போட மறவாமல் இருந்தது கதாபாத்திரத்திற்கு மேலும் வலுவூட்டியிருக்கிறது. கல்வியில் சாதிப்பதற்கு வறுமையும்-பகையும் தடை கற்களாக இருக்கவே முடியாது என்கிற சமுதாய சிந்தனையை இதில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் கோபிகாந்தி. அந்த கருத்துக்கு நடுவே காதல், மோதல், தாய்ப்பாசம், நகைச்சுவை என கமர்ஷியல் படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் குமரன்ஜியின் ஒளிப்பதிவு சுமார் ரகம். ஜெஸ்ஸியின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இல்லை.

மொத்தத்தில் ‘முதல் மாணவன்’ மந்தமானவன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget