பேஸ்வாஷ் கவனிக்கப்பட வேண்டியவை

குளிப்பதற்கு ஒரு சோப்  உபயோகிக்கிறோம். துணிகளைத் துவைக்க வேறொரு சோப் உபயோகிக்கிறோம். பாத்திரம் துலக்க  இன்னொன்று.  ஏன் எல்லாமே சோப்தானே... எல்லாமே அழுக்கை நீக்கும் வேலையைத்தானே செய்யப் போகின்றன... அப்புறம்  ஏன்
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்று? ஒரே சோப்பை குளியலுக்கும், துணிகளுக்கும், பாத்திரங்களுக்கும் பயன்படுத்துவதுதானே?  இப்படிக் கேட்டால் சிரிப்பீர்கள் அல்லது கோபப்படுவீர்கள்தானே?

அதெப்படி? குளியலும் பாத்திரம் தேய்க்கிறதும் துணி துவைக்கிறதும் ஒண்ணா எனக் கேட்கத் தோன்றும் இல்லையா? அதே  நியாயம்தான் உங்கள் உடம்பையும் முகத்தையும் சுத்தப்படுத்துவதிலும் பொருந்தும். ஆமாம்... உடம்பு தேய்த்துக் குளிக்க  உபயோகிக்கிற சோப், முகத்துக்கு உபயோகப்படுத்தப் பொருத்தமானதல்ல. முகத்தை சுத்தப்படுத்த ஃபேஸ் வாஷ் சிறந்தது. அதென்ன ஃபேஸ் வாஷ்? அதை எப்படித் தேர்ந்தெடுப்பது? எப்படி உபயோகிப்பது? எல்லா தகவல்களையும் விளக்கமாகச்  சொல்கிறார் நேச்சுரல்ஸ் வீணா குமாரவேல்.

முகத்தில் உள்ள சருமத்தின் பி.ஹெச் அளவும், உடலில் உள்ள சருமத்தின் பி.ஹெச் அளவும் வேறு வேறு. எனவே உடம்புக்கு  உபயோகிக்கிற சோப், முகத்துக்கு பொருந்தாது. முகத்தில் உள்ள சருமமானது, உடலின் மற்ற பகுதிகளில் உள்ள சருமத்தைவிட  மென்மையானது. உடம்புக்கு உபயோகிக்கிற அதே சோப்பையே முகத்துக்கும் பயன்படுத்துவதால் முகம் வறண்டு போகும். இந்தப்  பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வாக வந்ததுதான் ஃபேஸ்வாஷ். ஃபேஸ் வாஷ் என்பது அவரவர் சருமத்தின் தன்மைக்கேற்ப  தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது.

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், ஆயில் ஃப்ரீ ஃபேஸ் வாஷ் உபயோகிக்கலாம். எண்ணெய் வழிகிற பிரச்னையுடன்,  பருக்களும் இருப்பவர்கள், ஃபேஸ் வாஷில் salicylic acid  அல்லது  benzoyl peroxide இருக்கும்படி பார்த்து  உபயோகிக்கலாம்.

வறண்ட சருமத்துக்கு ரொம்பவும் மைல்டான ஃபேஸ் வாஷ் தான் சிறந்தது. கொஞ்சம் கடுமையாக இருந்தாலும் ஏற்கனவே  வறண்டு போன சருமத்தை மேலும் வறண்டு போகச் செய்துவிடும். பால், கிரீம் கலந்த ஃபேஸ் வாஷ் வறட்சியைப் போக்கும்.  காம்பினேஷன் சருமம் உள்ளவர்கள், T ஸோன் பகுதியை கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரத்யேக ஃபேஸ் வாஷ்  மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள், பாரபின் ஃப்ரீ, பெர்ஃப்யூம் ஃப்ரீ, ஃபிராக்ரன்ஸ் ஃப்ரீ என்கிற குறிப்புடன் வருகிற ஃபேஸ்  வாஷை உபயோகிக்கலாம்.  இவை பொதுவானவை. இவை தவிர, ஃபேஸ் கிளென்சர் என்றும் கிடைக்கிறது. அதில் சிறிது  எடுத்து முகத்தில் புள்ளிகளாக வைத்து, மேல் நோக்கி லேசாக மசாஜ் செய்து, ஈரமான பஞ்சில் துடைத்து எடுக்க வேண்டும்.  இதில் நுரை இருக்காது என்பதால் வறண்ட சருமத்துக்கும், அடிக்கடி மேக்கப் உபயோகிப்பவர்களுக்கும் மிகவும் ஏற்றது.

எக்ஸ்ஃபோலியேட்டிங் ஃபேஸ்வாஷ் என ஒன்று கிடைக்கிறது. எண்ணெய் பசையான சருமத்துக்கும், கரும்புள்ளிகள்  உள்ளவர்களுக்கும் இது பொருத்தமானது. பருக்கள் உள்ளவர்கள் மெடிக்கேட்டட் ஃபேஸ் வாஷ் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.  அதுவும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். இவை போக, முதுமையை தள்ளிப் போடவும்,  சுருக்கங்களை தவிர்க்கவும் ஆன்ட்டி ஏஜிங் ஃபேஸ் வாஷ், சரும நிறத்தை மேம்படுத்த ஸ்கின் லைட்டனிங் ஃபேஸ் வாஷ்  கிடைக்கின்றன. அழகுக்கலை நிபுணரிடமோ, சரும மருத்துவரிடமோ கலந்தாலோசித்து உபயோகிக்கலாம்.

ஃபேஷியல் வைப்ஸ் (facial wipes) என்பவை பயணம் செய்கிற போதும், அடிக்கடி முகம் கழுவ  முடியாதவர்களுக்குமானது. இதை அப்படியே முகத்தைத் துடைத்து சுத்தப்படுத்த உபயோகிக்கலாம். சருமம் உடனடியாக  பளிச்சென மாறும்.ஆண்கள் ஃபேஸ் வாஷ் உபயோகிக்கலாமா எனக் கேட்பவர்களும் உண்டு. உபயோகிக்கலாம். ஆனால்,  அவர்களது சருமத்துக்கேற்ற பிரத்யேக ஃபேஸ் வாஷ் கிடைக்கிறது. அவற்றை மட்டுமே உபயோகிக்கலாம்.

எப்படி உபயோகிப்பது?

ஃபேஸ் வாஷ் என்பது டியூபிலோ, பம்ப் செய்கிற மாதிரியான பாட்டிலிலோ வரும். முதலில் முகத்தை ஈரப்படுத்திவிட்டு, ஃபேஸ்  வாஷில் ஒரு சிறு துளியை எடுத்து முகத்தில் தடவி, மேல் நோக்கி மிதமான மசாஜ் செய்து, கழுவலாம். சோப் உபயோகித்ததும்  முகத்துக்குக் கிடைக்கிற உணர்வு போல இல்லாமல் ஃபேஸ் வாஷ் உபயோகிக்கும் போது ஒருவித பிசுபிசுப்புத்தன்மை இருக்கும்.  அது பற்றிக் கவலை வேண்டாம்.

வெளியில் சென்று விட்டு வந்த உடனேயும், இரவு படுக்கச் செல்வதற்கு முன்பும் ஃபேஸ் வாஷ் உபயோகித்து முகத்தை  சுத்தப்படுத்த வேண்டியது மிக அவசியம். இதன் மூலம் உங்கள் சருமத் துவாரங்களில் படிந்துள்ள அழுக்குகள் நீங்கும். சருமத்  துவாரங்கள் அடைபட்டால் பருக்கள், கரும்புள்ளிகள் வரும். இரவு ஃபேஸ் வாஷ் உபயோகித்து சருமத்தை சுத்தப்படுத்துவதன்  மூலம் சருமம் சுவாசிக்க ஏதுவாக மாறும். ஆரோக்கியமாக இருக்கும். சுருக்கங்களும் முதுமைத் தோற்றமும்
தள்ளிப் போகும்.

ஃபேஸ் வாஷ் உபயோகிக்கும் போது...

ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறைகளுக்கு மேல் ஃபேஸ் வாஷ் உபயோகிக்க வேண்டாம்.அதிக சூடான மற்றும் அதிக குளிர்ந்த
தண்ணீரைத் தவிர்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் முகம் கழுவவும். ஃபேஸ் வாஷ் உபயோகிக்கும் போது முதலில் ஒருமுறை  தண்ணீர் விட்டு நன்கு முகம் கழுவி, பிறகு இன்னொரு முறையும் வெறும் தண்ணீரில் கழுவ வேண்டும். ஃபேஸ் வாஷின்  மிச்சம் சருமத்தில் தங்கக்கூடாது. அலர்ஜி இருப்பவர்கள் வாசனையோ, அதிக நுரையோ, சோடியம் லாரைல் சல்ஃபேட் போன்ற  கெமிக்கலோ கலந்த ஃபேஸ் வாஷ்களை தவிர்க்கவும். ஃபேஸ் வாஷ் உபயோகித்து முகம் கழுவியதும், மென்மையான டவலால்  முகத்தை ஒற்றி எடுக்கவும். அழுத்தித் தேய்க்கக்கூடாது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget