இறைவி சினிமா விமர்சனம்

பீட்ஸா, ஜிகர்தண்டா படங்களின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ஆண்கள், தங்களுக்கு வேலை இல்லை, லட்சியம் நிறைவேற இல்லை என்றால், இறைவி சிலைகளை கடத்தலாம் என்றும், இறைவி ஆக போற்றப்பட
வேண்டிய பெண்கள் புருஷன் பொறுப்பாயில்லை.... என்றால் வேறு ஆணை வீட்டுக்கு வரவைத்து, தங்கள் பசியைதீர்த்துக் கொள்ளலாம் என்றும், அவனும் சரியில்லை... என்றால் தனித்தோ, வேறு துணை தேடிக் கொண்டோ வாழலாம்.... என்றும் தவறான போதனை செய்திருக்கும் தவறான படமே இறைவி!

எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கமலினி முகர்ஜி, அஞ்சலி, பூஜா தேவாரியா, ராதாரவி, கருணாகரன், சீனு மோகன், வடிவுக்கரசி, மணிமேகலை என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்க, ஸ்டுடியோ கிரின் ஞானவேல்ராஜா, திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சி.வி.குமார், அபி & அபி அபினேஷ் இளங்கோவன் என நான்கைந்து தயாரிப்பாளர்களின் கூட்டு தயாரிப்பில் மெகா பட்ஜெட்டில் சில வுமென்களின் கதை தான் இறைவி எனும் பில் - டப்புடன் வெளி வந்திருக்கும் இறைவி படத்தின் கதையை அடித்துக் கேட்டாலும் சொல்லிடாதீங்க... என இப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கேட்டுக் கொண்டிருப்பதால்., நேரடியாக விமர்சனத்திற்கு செல்வோம்...

குட்டிம்மா உன்வயித்துல இருக்கும் போது... அத, ஒரமா வச்சிட்டு வேற பெத்துக்குடு... என்றால் உன்னால முடியுமா... அது மாதிரி தான்... என் இயக்கத்தில் ஒரு படம் வெளிவராது இருக்கும் போது, அடுத்தப் பட வேலையை பார்க்க போவதென்பது.... என எஸ்.ஜே. சூர்யா, தன் நிலை பற்றி மனைவி கமாலினியிடம் அவ்வப்போது விளக்கிவிட்டு சதா சர்வநேரமும், பாட்டிலும், கையுமாக காரண குடிகாரராக செம தள்ளாட்டம் போட்டிருக்கிறார்.

சூர்யாவின் குடும்ப விசுவாசி வேலைக்காரர் மைக்கேலாக வரும் விஜய்சேதுபதி, விசுவாசத்தில, சூர்யாவுக்காக கொலையும் செய்கிறார். பின், தன் மனைவி அஞ்சலியிடம் தவறாக நடந்து கொண்டதற்காக சூர்யாவின் தம்பி பாபியை தீர்த்து கட்டி விட்டு சூர்யாவாலேயே சுட்டுக் கொல்லவும் படுகிறார். சரி, சூர்யா, விஜய் தான் இப்படி என்றால்., படிக்கும் போதே பெண்கள் மீது அளவுக்கு அதிகமான பச்சாதாபமும், இறைவி எனும் பெண் சிலைகள் மீது பாசமும், அதன் மூலம் பணமும் பார்க்கும் ஜெகனாக பாபி சிம்ஹா, ரொம்பவே நடித்துக் க்ளைமாக்ஸ்க்கு முன் சேதுபதியால் பட்டென்று போட்டுத்தள்ளப்படுகிறார். இவர்கள் பத்தாதென்று பிள்ளை எஸ்.ஜே சூர்யா அப்பாவின் மூஞ்சில் சிகரெட்டை ஊதி தள்ள, தள்ள.... பிள்ளைக்கு ஊற்றி, ஊற்றி கொடுக்கும் தகப்பனாக ராதாரவி, ஒரு படைப்பு வெளி வருவதற்காக, தொன்மையான கலை படைப்புகளை களவாடி காசு பார்க்கலாம்.. , என தன் வயதிற்குரிய பொறுப்பில்லாத தந்தையாக கடுப்பேற்றுகிறார்.

இந்த மாதிரி படம் முழுக்க கேவலமான ஆண் பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருப்பது போதாதென்று நட்புக்கு துரோகம் செய்யும் பாபியுடன் பணத்திற்காக சேர்ந்து விஜய், கேரள போலீஸில் சிக்க காரணமாகும் கையாள் கருணாகரன், விஜய் சேதுபதியின் நியாயம் புரியாத சித்தப்பா சீனு மோகன், என படம் முழுக்க ஆண்கள் எல்லாம் முட்டாள்கள், கொலை வெறியர்கள், குடும்ப பொறுப்பில்லாதவர்கள், மொடா குடிகாரர்கள்... என படம் முழுக்க ஆண்களைப் பற்றி தவறான அபிப்பிராயம் பரவ விட்டிருக்கிறார் இயக்குனர்.

படத்தில் வரும் ஆண் பாத்திரங்கள் தான் இப்படி சித்தரிக்கப்பட்டுள்ளன என்றால், பெண் பாத்திரங்கள் இன்னும் சுயநலமாக உலா வருகின்றன. உதாரணத்திற்கு, குடிகார கணவர் சூர்யாவின் மீது உள்ள செம கோபத்தில் சற்றே வளர்ந்த குழந்தையுடன் கெஸ்ட் ரோலில் வரும் வைபவை வேறு ஒரு கல்யாணம் செய்து கொள்ள தயாராகிறார் அவரது மனைவி யாழினியாக வரும் கமலினி முகர்ஜி, சாந்தமாக வந்து இவர் இப்படி சாதித்திருக்கிறார் என்றால்...

முரட்டு முதலாளி வீட்டு விசுவாசி விஜய் சேதுபதியின் மனைவி பொன்னி - அஞ்சலியோ தான் இன்னாரின் பொண்டாட்டி எனத் தெரிந்தும் பாபி சிம்ஹா, தன்னிடம் ஐ லவ் யூ சொன்னதும் நாளைக்கு மீட் பண்ணுவோம் யோசித்து சொல்கிறேன் எனவும் கூறிவிட்டு அவர்களுக்குள் என்ன நடந்தது? எனக் காட்டாமல் திராட்டில் விட்டு கல்லா கட்ட பார்த்திருக்கும் இயக்குனர் க்ளைமாக்ஸில் விஜய் சேதுபதி விட்டு பாபியின் உயிரை எடுக்கும் காட்சியின் வாயிலாக அஞ்சலி ஏற்றிருக்கும் பொன்னி பாத்திரத்தின் பத்தினித் தன்மை மீதும் கேள்வி குறி எழுப்புவது கேவலமாக இருக்கிறது. அது மாதிரியே, விஜய்யின் கல்யாணத்திற்கு முந்தைய காதலி பூஜா தேவாரியா, பாத்திரமும் பக்குவமில்லாமல் படுக்கையறை காட்சிகளாகவே படைக்கப்பட்டிருப்பது கொடுமை!

இந்த இளம் பெண்கள் பாத்திரம் தான் இப்படி பொறுப்பில்லாத மொத்த பெண் சமுதாயத்தையும் கெடுக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தென்றால்... ராதாரவியின் படுத்த படுக்கை மனைவி வடிவுக்கரசியிடம் அவரது இளைய மகன் பாபி சிம்ஹா, அஞ்சலி மீதான தன் அர்த்தமற்ற காதலையும், பெண்களை ஆண்கள் காலம் காலமாக கொடுமை படுத்துவதாக சொல்லி புலம்பும் காட்சிகள் கொடுமையின் உச்சம். இதன்மூலம் இறைவி படத்தில் ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் கொச்சைபடுத்தியுள்ளனர் என்பது நிச்சயம்.

சந்தோஷ் நராயணன் இசையில் ஒண்ணு, இரண்டு மூணு......, மனிதனுக்குள் அடங்கிடாதே மனிதி.... உள்ளிட்ட பாடல்கள் வித்தியாசம். சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளும், படக்காட்சிகளும் படமாக்கப்பட்டிருக்கும் விதமும் பிரமாதம். விவேக் ஹர்சனின் கத்தரி எதை வெட்டுவது, எதை விட்டு வைப்பது என காட்சிக்கு காட்சி தவித்திருக்கிறது என்பதும் புரிகிறது, தெரிகிறது. ஆர்.கே.விஜய் முருகனின் கலை இயக்கம் பக்காவாக இருந்தும், எல்லாம் இருந்தும் இறைவி படத்தில் ஏதோ ஒன்று இல்லாத குறை!

இரண்டு படம் வெற்றி பெற்றால் எதை வேண்டுமானாலும் படமாக்கலாம்.... அதை எப்படி வேண்டுமானாலும் இயக்கலாம்... என இப்படத்தை எழுதி, இயக்கி இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், ஒரு கலைப்படைப்பு அது மதிப்பு தெரியாத இடத்தில் இருத்தல் கூடாது... எனும் பாபி சிம்ஹா பாத்திரத்திரத்தின் வாயிலாக இறைவியாக போற்றப்படும் வகையில், ஆணின் காம, கோப, தாப இச்சைகளைத் தாங்கி, காலங்காலமாக கணவனுடன் குடும்பம் நடத்தும் பெண்களையும், ஏன்? சகித்துக் கொண்டு குடும்பம், குழந்தை குட்டி .... என்ற கூட்டிற்குள் வாழ்கிறீர்கள்...? உடைத்துக் கொண்டு வெளியேறுங்கள்.... என்பது மாதிரி மனிதனுக்குள் அடங்கிடாதே மனிதி... எ‍ன்று பாடல் போட்டு படத்தை முடித்திருப்பதும் புரட்சி அல்ல... என்பதை இயக்குனர். கார்த்திக் சுப்புராஜுக்கு இப்படத்தின் வெற்றி, தோல்வி நிச்சயம் புரிய வைக்கும் பெரிதாய் பதிவும் செய்யும்.... என நம்புவோம்.

தன் முடங்கிக் கிடக்கும் படைப்பு வெளிவரத் தயாரிப்பாளர் காலில் விழ தன் மானம் இடம் கொடுக்காத எஸ்.ஜே. சூர்யாவும், அவரது குடும்பமும் சிலை கடத்தலில் இறங்குவதும், படுபயங்கர அபத்தம். (கார்த்திக் சுப்புராஜ் சார் உங்களுக்கும் உங்கள் முந்தைய படத்தயாரிப்பாளருக்கும் பிரச்சனை என்றால், அதை அடுத்தப்படத்தில் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்துவதெல்லாம் பத்தாம் பசலித்தனம் என்பதை கவனத்தில் கொள்ளவும்).

ஆக மொத்தத்தில், டெக்னிக்கலாக சரியான, சாவாலான படமாகத் தெரியும், இறைவி - முன் பாதி முழுக்க இரத்த தெறியாகவும் பின்பாதி முழுக்க பெண் இனவெறியாகவும் தெரிகிறது. மேலும் இறைவி - இதெல்லாம் ஒரு கதையாக திரைப்படமாக எடுத்திருக்கிறது பிறவி" ... என்பது வேதனை!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget