யாண்டெக்ஸ் தேடியந்திரம்

சீனாவில் பெய்டு, தென்கொரியாவில் நேவர், செக் குடியரசில் செஸ்னம் இவை எல்லாமே தேடியந்திரங்கள். சாதாரணமான தேடியந்திரங்கள் அல்ல, அந்தந்த நாடுகளின் கூகுள்கள் இவை. அதாவது, இந்த நாடுகளில் எல்லாம் இவைதான்
அதிகம் பயன்படுத்தப்படும் முன்னணி தேடியந்திரங்களாக இருக்கின்றன. இதன் பொருள், இந்த நாடுகளில் கூகுள் நம்பர் ஒன் தேடியந்திரம் அல்ல என்பதுதான்.

தேடியந்திரம் என்றால் கூகுள் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இது ஆச்சர்யத்தை அளிக்கலாம். ஆனால், உலகமே கூகுளில் தேடிக்கொண்டிருந்தாலும், சீனாவிலும் கொரியாவிலும் பெய்டுவையும், நேவரையும் தான் கூகுளாக பயன்படுத்துகின்றனர். தேடியந்திரமாக கூகுளின் ஆதிக்கம் இந்த நாடுகளில் எல்லாம் எடுபடவில்லை என்பது மட்டும் விஷயம் அல்ல, தங்களுக்கான தனித்தன்மை மிக்க தேடியந்திரங்கள் கொண்டுள்ள நாடுகளாக இவை இருக்கின்றன என்பதுதான் விஷயம்.

இந்தப் பட்டியலில் ரஷ்யாவின் யாண்டெக்ஸ் தேடியந்திரத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் யாண்டெக்ஸ் பெய்டு போல, நேவர் போல உள்ளூர் தேடியந்திரம் அல்ல; அதன் சர்வதேச பதிப்பும் இருக்கிறது. கூகுளுக்கு மாற்றாகவும் அதை பயன்படுத்தலாம்.

யாண்டெக்சை கூகுளுக்கு மாற்று என சொல்வது பலருக்கு வியப்பை அளிக்கலாம். இன்னும் சிலர் யாண்டெக்ஸ் பெயரைகூட கேள்விபட்டதில்லையே என அதிருப்தி கொள்ளலாம்.

கூகுளுக்கு முன்னால்!

ஆனால், யாண்டெக்ஸ் உலகின் முன்னணி தேடியந்திரங்களில் ஒன்று. ஒரு தகவலின்படி அது உலகின் நான்காவது பெரிய தேடியந்திரம். தேடியந்திர பட்டியலில் அதன் இடத்தைவிட, தேடல் உலகில் அதன் இடம் முக்கியமானது.

யாண்டெக்ஸ் ரஷ்யாவில் அதிகம் பயன்படுத்தப்படும் தேடியந்திரமாக இருக்கிறது. அதேபோல உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் போன்ற பழைய சோவியத் நாடுகள் மற்றும் துருக்கியிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதற்காக யாண்டெக்சை ரஷ்ய தேடியந்திரம் என்று சுருக்கி பொருள் கொள்வதற்கில்லை. எல்லா விதங்களிலும் அது ஒரு முன்னோடி தேடியந்திரம். காலவரிசையில் மட்டும் அல்ல தேடல் நுட்பத்திலும் தான்!

ஆம், யாண்டெக்ஸ் கூகுளுக்கு முந்தைய தேடியந்திரம். கூகுள் நிறுவனர்கள் செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் இருவரும் இன்னமும் சந்தித்திராத காலத்திலேயே யாண்டெக்ஸ் தேடல் நுட்பத்தை அதன் நிறுவனர்கள் உருவாக்கியதாக யாண்டெக்ஸ் பற்றிய கட்டுரை ஒன்று வர்ணிக்கிறது.

யாண்டெக்ஸ் நிறுவனர்களான அர்காடி வோலோஜ் (Arkady Volozh) மற்றும் இல்யா செகாலோவிச் (Ilja Segalovich) பள்ளிப் பருவத்து நண்பர்கள். இருவருமே கணிதப்புலிகள். பள்ளிப்படிப்பை முடித்ததும் இருவரும் மாஸ்கோ பல்கலையில் வேறு வேறு துறைகளில் படித்து பட்டம் பெற்றனர். வேறு வேறு நிறுவனங்களில் பணியாற்றிய நண்பர்கள் 1990களின் துவக்கத்தில் இணைந்து பணியாற்றத் துவங்கினர். தேடல் ஆர்வம்தான் அவர்களை இணைத்தது. 1993-ல், ரஷ்ய மொழியில் தேடலுக்கான மென்பொருளை உருவாக்கினர். தாங்கள் உருவாக்கிய தேடல் நுட்பத்திற்கு யாண்டெக்ஸ் என பெயரிட்டனர். இன்னொரு அட்டவணை என பொருள் தரும் ஆங்கில சொற்றொடரான 'யெட் அனதர் இண்டெக்சின்' வார்த்தை விளையாட்டாக இந்த பெயர் அமைந்தது.

பைபிள் தேடல்

இந்தத் தேடல் நுட்பத்தின் ஆற்றலை உணர்த்துவதற்காக பைபிளின் டிஜிட்டல் வடிவத்தை உண்டாக்கி, அதில் முழுவதும் தேடக்கூடிய வசதியை ஏற்படுத்தி தந்தனர். இது உலக இலக்கியத்திற்கான ரஷ்ய அமைப்பின் கவனத்தை ஈர்க்கவே, ரஷ்ய மொழி இலக்கியங்களுக்கான தேடல் வடிவத்தை உருவாக்கி தருமாறு கேட்டது. இதற்காக கணிசமான தொகையையும் அளித்தது. இந்த பணத்தை கொண்டு பெரிய அலுவலகம் அமைத்து, அப்போது பிரபலமாக துவங்கியிருந்த இணையத்தின் மீது கவனத்தை திருப்பினர். இணையதளங்களை டவுண்லோடு செய்து அவற்றில் உள்ள தகவல்களை தேட உதவும் மென்பொருள் வடிவத்தை உருவாக்கி சந்தைப்படுத்தினர். ரஷ்ய மொழியின் இலக்கணம் மற்றும் வார்த்தை அமைபுகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும் இந்த மென்பொருள் அதிக வரவேற்பை பெறவில்லை.

இதனால் அர்காடி, எல்லோரும் பயன்படுத்தக்கூடிய தேடியந்திரத்தை அறிமுகம் செய்ய தீர்மானித்தார். 1997-ல் யாண்டெக்ஸ் தேடியந்திரம் அறிமுகமானது. அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே அது ரஷ்யாவில் அதிகம் பார்க்கப்படும் தளங்களில் ஒன்றாக உருவாகிவிட்டது. அதன் பிறகு முன்னணி ரஷ்ய தேடியந்திரமாக வளர்ச்சி அடைந்தது. யாண்டெக்ஸ் வெற்றியில் கவனைக்க வேண்டிய விஷயம் அதஹ் தேடல் நுட்பம்தான். ரஷ்ய மொழியைப் பொருத்தவரை, யாண்டெக்சின் தேடல் நுட்பம் நிச்சயம் கூகுளின் தேடல் நுட்பத்திற்கு நிகரானது அல்லது ஒரு படி மேலானது என்று சொல்லாம்!

சர்ச் இண்டெக்ஸ்

தேடப்படும் குறிச்சொற்களின் அடிப்படையில், இணைய அட்டவணையை பரிசீலித்து அதற்கேற்ற முடிவுகளை முன்வைக்க யாண்டெக்ஸ் பயன்படுத்தும் நுட்பம் மிகச் சிறந்ததாக இருப்பதாக பாராட்டப்படுகிறது. ஏனெனில், ரஷ்ய மொழியின் நுணுக்கம் மற்றும் சிக்கலான தன்மையையை சரியாக கையாண்டு இணையவாசிகள் எந்த விதமான பொருளை தேடுகின்றனர் என்பதை சரியாக கிரகித்து அது தேடல் முடிவுகளை பட்டியலிடுகிறது.

ரஷ்ய மொழியில் ஒரு வார்த்தைக்கு பல விதமான பொருள் வரும் வாய்ப்பு இருக்கிறது. எழுத்துக்களின் வேறுபாடுகளுக்கு ஏற்ப பொருள் மாறுபடலாம். இந்த நுணுக்கங்களை சரியாக புரிந்துகொள்ளும் வகையிலான தேடல் நுட்பத்தை யாண்டெக்ஸ் கொண்டிருக்கிறது. வார்த்தைகளின் தன்மை, அவை இடம்பெறும் விதம் ஆகியவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு அது செயல்படுகிறது ரஷ்ய மொழியில் தேடல் என்று வரும்போது இந்த விஷயத்தில் கூகுள் திணறி விடுவதாக கருதப்படுகிறது. ஆனால் யாண்டெக்ஸ் கோட்டைவிடுவதில்லை. அதனால் தான் ரஷ்யாவில் அது முன்னணியிலேயே இருக்கிறது.

ஒரு தேடியந்திரம் அது செயல்படும் மொழியின் நுட்பங்களை சரியாக புரிந்துகொண்டு அதன் தனித்தன்மைக்கேற்ற நுட்பத்தை கொண்டிருப்பது எத்தனை முக்கியம் என்பதற்கு யாண்டெக்ஸ் சிறந்த உதாரணமாக இருக்கிறது.

ரஷ்யாவில் நிலைப்பெற்ற பிறகு 2000-க்கு பிறகு யாண்டெக்ஸ் மற்ற சந்தைகளிலும் விரிவாக்கம் செய்து வருகிறது. 2005-ல் துருக்கி நாட்டிற்கான பிரத்யேக தேடியந்திர பதிப்பை அறிமுகம் செய்தது. 2010-ல் ஆங்கில மொழியில் தேட உதவும் சர்வதேச தேடியந்திரமான யாண்டெக்ஸ்.காம் அறிமுகமானது. 2011-ல் அமெரிக்க பங்குச்சந்தையிலும் அறிமுகமானது.

தேடல் எப்படி?

கூகுளுடன் ஒப்பிடும்போது யாண்டெக்ஸ் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது விவாதத்துக்கு உரியது என்றாலும், அது ஒரு மாற்று தேடியந்திரம் என்பதை மறுப்பதற்கில்லை. தவிர, கூகுள் மற்றும் பிங் போலவே அது தனக்கான தேடல் அட்டவணையை பெற்றிருக்கிறது. அதாவது இணையத்தை தேடித் துழாவி அதில் உள்ள கோடிக்கணக்கான இணைய பக்கங்களை திரட்டி தொகுத்து அட்டவணையாக பராமரித்து வருகிறது. சர்ச் இண்டெக்ஸ் எனப்படும் இத்தகையை சொந்த தேடல் அட்டவணை கொண்ட மூல தேடியந்திரங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். எனினும் ஆங்கில மொழி பக்கங்களை பொருத்தவரை கூகுளின் தேடல் அட்டவனை படு பிரம்மாண்டமானது.

எல்லாம் சரி, யாண்டெக்ஸின் தேடல் அனுபவம் எப்படி?

கூகுளைவிட சிறந்தது என்று சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம், கூகுளின் நகலாக இல்லாமல் தனக்கான தனித்தன்மையை கொண்டதாகவே யாண்டெக்ஸ் இருப்பதை பார்க்கலாம். முகப்பு பக்கத்தில் நடுநாயகமாக இருக்கும் தேடல் கட்டத்தில் குறிச்சொல்லை டைப் செய்ததும் பொருத்தமான தேடல் முடிவுகளை பட்டியலிடுகிறது. தேடல் முடிவுகள் ஒவ்வொன்றிலும் அந்த இணையதளத்தின் அடையாள சின்னம் இடது பக்கத்தில் சிறியதாக தோன்றுகின்றன. செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்ட வகைகளில் தேடுவதற்கான வசதியும் இடப்பக்கத்தில் இருக்கிறது. வலப்பக்கத்தில் தேடப்படும் பொருளுக்கான விக்கிபீடியா அறிமுகத்தை பார்க்கலாம்.

தேடல் பட்டியல் கீழே, இதே தேடலை கூகுள் மற்றும் பிங் ஆகிய தேடியந்திரங்களில் தேடி ஒப்பிட்டு பார்க்கும் வசதி இருக்கிறது. ஒரு சின்ன வேறுபாடாக, தேடல் கட்டத்திலேயே தேடி எடுக்கப்பட்ட மொத்த இணைய பக்கங்களின் எண்ணிக்கை இடம்பெறுகிறது. ஒவ்வொரு இணைய பக்கத்தின் சேமிக்கப்பட்ட வடிவத்தை பெறும் வசதியும் இருக்கிறது. தேடல் முடிவுகள் பற்றி புகார் தெரிவிக்கலாம். மேம்பட்ட தேடல் வசதியும் இருக்கிறது. தேடல் கட்டத்தின் வலப்பக்கத்தில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்தால் வரும் இந்த வசதி மிகவும் விரிவாகவே இருக்கிறது. இணையவாசியின் நகரம் சார்ந்த தேடல், கோப்பு வகை, இணையதளத்தில் தேடல், தேடப்படும் காலம் என பலவித வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.

அதுபோல தேடல் பதத்தை தவறாக டைப் செய்யும் பட்சத்தில் அது தானாக திருத்தப்படுகிறது. அந்த விவரம் மட்டும் தெரிவிக்கப்படுகிறது. கூகுள் தேடலுக்கு பழக்கப்பட்டவர்களுக்கு இதன் தேடல் பட்டியல் எந்த அளவு திருப்தி தரும் என்பது தெரியவில்லை, ஆனால் இந்த பட்டியலில் சில அபூர்வமான தளங்களை பார்க்கலாம். பல பதங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கும் இணைய முடிவுகள் தோன்றி சபாஷ் போட வைப்பதையும் உணரலாம்.

யாண்டெக்ஸ் பற்றி மேலும் சில முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. கூகுள் போலவே இதுவும் தேடலை மையமாக கொண்ட மேலும் பல சேவைகளை பெற்றிருக்கிறது. யாண்டெக்ஸ் மெயில், யாண்டெக்ஸ் பிரவுசர், யாண்டெக்ஸ் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கிறது. இவைத் தவிர யாண்டெக்ஸ் வரைபட சேவை, யாண்டெக்ஸ் ஸ்மார்ட்போன் வடிவம் உள்ளிட்டவற்றையும் பெற்றிருக்கிறது. மெஷின் லேர்னிங் என்று சொல்லப்படும் இயந்திர மூளை கொண்டு தரவுகளை தேடல் யாண்டெக்ஸ் உருவாக்கியுள்ள மேட்ரிக்ஸ்நெட் நுட்பமும் மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது.

யாண்டெக்ஸ் தேடியந்திரம் > https://www.yandex.com
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget