மங்கள்யான் சாதனைகள் - ஸ்பெஷல் ரிப்போர்ட்

பட்ஜெட் விண்கலம் ரூ.450 கோடி மட்டுமே 

மங்கள்யான் படைத்த பல சாதனைகளில், அதற்காக செலவிடப்பட்ட தொகை கூட ஒரு
சாதனையாகவே அமைந்துள்ளது. செவ்வாய் ஆராய்ச்சிக்காக உலக நாடுகள்  பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவழித்துக் கொண்டிருக்கும் நிலையில், இஸ்ரோ மங்கள்யானுக்காக செலவழித்தது வெறும் ரூ.450 கோடி மட்டுமே. இதே நாசா அனுப்பிய மேவன் விண்கலத்துக்கு 10 மடங்கு அதிகமாக ஸி4,690 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் அளவிலும் மங்கள்யானின் சாதனை உலக நாடுகளை பிரமிக்க வைத்திருக்கிறது.

டுவிட்டரில் பேசிய மங்கள்யான்

மங்கள்யான் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்ததும் சமூகவலைதளங்களில் லட்சக்கணக்கான வாழ்த்து டிவிட்கள் குவிந்தன. மங்கள்யான் விண்ணில் ஏவப்பட்ட போது, இஸ்ரோ சார்பில் ‘செவ்வாய் ஆய்வு விண்கலம்‘ என்ற பெயரில் டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டது. அன்று முதல் மங்கள்யானின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் இந்த டுவிட்டர் கணக்கில் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. நேற்று செவ்வாய் சுற்றுப்பாதையில் இணைந்ததும், நாசாவின் மேவன் குழுவுடனும், கியூரியாசிட்டியுடனும் மங்கள்யான் பேசிக் கொள்வது போன்ற டிவிட்களை விஞ்ஞானிகள் பகிர்ந்து கொண்டனர். செவ்வாய் கிரகத்தில் 2012ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி செய்து வரும் நாசாவின் கியூரியாஸிடி விண்கலம், மங்கள்யானுக்கு வாழ்த்து செய்தியை டுவிட்டரில் அனுப்பியது. அதற்கு மங்கள்யான் சார்பில் ‘நன்றி, தொடர்பில் இருக்கவும், 

நான் அங்குதான் சுற்றிக் கொண்டிருப்பேன்’ என்று பதில் அளிக்கப்பட்டது. இதே போல, சமீபத்தில் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் இணைந்து மேவன் விண்கல குழுவினரின் டுவிட்டர் கணக்கில் இருந்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மங்கள்யான் சார்பில் நகைச்சுவையான சில டிவிட்களும் வெளியிடப்பட்டன. செவ்வாய் சுற்றுப்பாதையை அடைந்த சில நிமிடத்தில், ‘நான் காலை உணவை முடித்துக் கொண்டு வருகிறேன். என்ன வெயில்! என்ன வெயில்! பேட்டரி உனக்கு நல்ல தீனிதான் இன்று’ என்றும், ‘அது என்ன சிவப்பா தெரியுது. ஓ! அதுதான் செவ்வாய் கிரகமா. அது என்னை நோக்கி பார்க்கிறதோ’ என்ற டிவிட்களும் பாலோயர்களை வெகுவாக கவர்ந்தன.

முதலில் உறுதி செய்தது ஆஸி.

செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையில் மங்கள்யான் நுழைந்தை, இந்தியாவுக்கும் உலகுக்கும் முதலில் உறுதி செய்து அறிவித்தது ஆஸ்திரேலியாவை சேர்ந்த விண்வெளி ஆய்வு நிறுவனம் தான். ஆஸ்திரேலியாவின் கான்பெர்ரா நகரில் உள்ள கான்பெர்ரா ஆழ் விண்வெளி தகவல் தொடர்பு நிறுவனம், பல்வேறு விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு உதவி செய்து வரும் நிறுவனமாகும். இந்நிறுவனம்தான் மங்கள்யான் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்த சிறிது நேரத்திலேயே சிக்னலை உறுதி செய்து இஸ்ரோவுக்கு தெரிவித்துள்ளது. இதை இந்தியாவுக்கான ஆஸ்திரேலியா தூதர் பாட்ரிக் சக்லிங் உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், இந்திய மக்களுக்கும், மங்கள்யான் விண்கலத்தின் வெற்றிக்காக ஆஸ்திரேலியா சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். கான்பெர்ராவில் உள்ள சிடிஎஸ்சிசி நிறுவனம்தான் மங்கள்யான் விண்கலம், செவ்வாயின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது தொடர்பான சிக்னலை உறுதி செய்து இந்தியாவுக்குத் தெரிவித்தது. அந்த வகையில் எங்களது ஆய்வு நிறுவனம் இதில் முக்கியப் பங்காற்றியுள்ளது பெருமை தருகிறது’ என கூறினார்.

* மங்கள்யான் செயற்கைகோளை செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியதன் மூலம், விண்வெளி வரலாற்றில் புதிய சகாப்தத்தை படைத்திருக்கும் இந்தியா, பல்வேறு புதிய சாதனைகளையும் நிகழ்த்தி உள்ளது. முதல் முயற்சியிலேயே செவ்வாய் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைகோளை நிலை நிறுத்திய முதல் நாடு, ஒரே நாடு என்ற பெருமைகளை பெற்றிருக்கிறது. 

* அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி கூட்டமைப்பு நாடுகளை அடுத்து 4வது நாடாக இந்தியாவும் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் புதிய மைல் கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.

* செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக 2008 மற்றும் 2012ம் ஆண்டுகளில் அமெரிக்கா விண்கலங்களை அனுப்பியது. 2008ல் அனுப்பப்பட்ட விண்கலத்தில் உள்ள பீனிக்ஸ் என்ற ஆய்வு வாகனம் செவ்வாய் கிரகத்தின் வட துருவத்தில் தரை இறங்கி ஆய்வு செய்தது. 2012ல் அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி ஆய்வு வாகனம் செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் தரை இறங்கி ஆய்வு மேற்கொண்டு பூமிக்கு தகவல்களை அனுப்பியது. தற்போது சமீபத்தில் மேவன் என்ற விண்கலத்தையும் நாசா அனுப்பி உள்ளது.

* 2011ம் ஆண்டு ரஷ்யா அனுப்பிய விண்கலத்தின் போபாஸ்,கிரன்ட் ஆய்வு வாகனம் செவ்வாய் கிரகத்தில் இறங்கி அங்குள்ள மண்ணை சேகரித்து ஆய்வு மேற்கொண்டது.

குறைந்த செலவில் பெரிய சாதனை

மங்கள்யான் விண்கல பயணம் வெற்றிகரமாக நடக்க வேண்டி திருவனந்தபுரம் பழவங்காடி கணபதிகோயிலில் நேற்று காலை  சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையில் முன்னாள் இஸ்ரோ தலைவர் நம்பிநாராயணன், கேரள தேவசம்போர்டு அமைச்சர் வி.எஸ்.சிவகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். இது குறித்து விஞ்ஞானி நம்பிநாராயணன் கூறுகையில், ‘விண்வெளி ஆராய்ச்சியில் குறைந்த செலவில் இந்தியா மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்திய மக்களின் பிரார்த்தனை பலித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் மேலும் பல சாதனை புரிய வாழ்த்து தெரிவிக்கிறேன்’ என்றார்.

செவ்வாய் ஆய்வு திட்டத்தில் இந்தியா வரலாற்று சாதனை

* உயிரினங்கள் வாழத் தேவையான மீத்தேன் வாயு செவ்வாய் கிரகத்தில் உள்ளதா என்பதை ஆராய்வதற்காக அனுப்பப்பட்டது.

* விண்வெளித் தொடர்பு முறைகளை விருத்தி செய்வது, அண்டவெளித் தேடல் பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றுவது, இயக்க நெறிகளை செயலாக்க முற்படுவது.

* செவ்வாய் கிரக சுற்றுளவியை அமைப்பது, அது நெடுந்தூர பயணத்துக்கு தயார் செய்வது.

* தேவைப்படும் வடிவமைப்புக்கு ஏற்ற வகையில் தொழில்நுட்பங்களை வளர்த்துக் கொள்வது.

ஆய்வு கருவிகள்

* சுற்றுச்சுழலை ஆய்வு செய்யும் கருவி

* மீத்தேன் வாயு இருப்பதை சோதிக்கும் கருவி

* கனிம வளங்களை ஆராய்வதற்கான கருவி

* வெப்பநிலையை ஆராயும் கருவி

* கிரகத்தை வண்ண புகைப்படம் எடுக்கும் கருவி

சுற்றுப்பாதையின் அளவுகள்

செவ்வாய்க்கு அருகில் விண்கலம் செல்லும் போது தொலைவு 377 கி.மீ தூரத்தில் இருக்கும் போது தொலைவு 80,000 கி.மீ. சாய்தளம் 17.864 டிகிரி வாழ்நாள் 300 நாட்கள்
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget