தீபிகா படுகோனே கலக்கல் பேட்டி

மாடலிங்காக இருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகை தீபிகா படுகோனே. முதல்படமே ஷாரூக்கான் உடன் ஓம் சாந்தி ஓம் என்ற படத்தில்
நடித்தார். இப்படம் சூப்பர் ஹிட்டாக அமைய தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். இவர் இப்போது மீண்டும் பராக்கான் இயக்கத்தில், ஷாரூக்கான் உடன், ‛‛ஹேப்பி நியூ இயர்'' படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகியுள்ள நிலையில், இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். இதோ...

கதை கேட்காமல் ஓகே சொன்னேன்

ஹேப்பி நியூ இயர் படத்தில் முதலில் புதுமுகம் நடிகை ஒருவரை நடிக்க வைக்க எண்ணினர் பராகானும், ஷாரூக்கானும். ஆனால் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்த பிறகு பரா கானிடமிருந்து அழைப்பு வந்தது, உடனே அவரை வீட்டுக்கு சென்று பார்த்தேன், இந்தப்படத்தில் நடிக்கிறாயா என்று கேட்டார், மறுப்பு ஏதும் சொல்லாமல், கதைகூட கேட்காமல் ஓகே சொன்னேன். ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் பராகானும், ஷாரூக்கானும், அதனால் அவர்கள் மீது முழு நம்பிக்கை வைத்து இப்படத்தில் நடித்தேன். 

பாரில் ஆடும் பெண்ணாக நடித்துள்ளேன்

ஹேப்பி நியூ இயர் படத்தில் நான், பாரில் ஆடும் மகாராஷ்டிரா பெண்ணாக மோகினி ஜோசி என்ற ரோலில் நடித்துள்ளேன். மோகினிக்கு டான்ஸ் என்றால் உயிர், நடனத்தை கடவுளாக வழிபடுகிறவள், அந்த நடனத்தின் மூலமாகத்தான் அவள் தனது குடும்பத்தை காப்பாற்றுகிறாள். இந்தப்படத்தில் நான் மராத்திய மொழி பேசும் பெண்ணாக நடித்தேன், ஆனால் எனக்கு கஷ்டமாக தெரியவில்லை. 

பராகான் மீது தனி பாசம்

பாலிவுட் சினிமாவில் எனக்கு ஒரு சிறப்பான துவக்கத்தை தந்தவர் பராகான். ஓம் சாந்தி ஓம் படத்தில் என்னை சிறப்பாக நடிக்க வைத்தார். என் வாழ்க்கை அவர் கையில் தான் இருந்தது. அவர் என்னை சிறப்பாக வழிநடத்தி சென்றுள்ளார். அதனால் எங்கள் இருவருக்குள்ளும் ஸ்பெஷலான இணக்கம் உண்டு. நாங்கள் சந்திக்கும்போது எங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வோம். அவர் என்னை பேபி என்று அழைப்பார், நான் அவரை அம்மா என்று அழைப்பேன். 

பாராட்டு முக்கியமானது

பாலிவுட் சினிமாவில் என் வாழ்க்கை சிறப்பானதாக அமைந்துள்ளது. நான் அறிமுகமானதில் தொடங்கி இப்போது வரை எனக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு வேறு எந்தவொரு பெண்ணுக்கும் கிடைக்கவில்லை என்பதை நான் உறுதியாக சொல்லமுடியும். நான் நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளேன். அதனால் அதற்கான பாராட்டு எனக்கு முக்கியமானதாகும். நான் கடுமையாக உழைத்து அதற்கான பாராட்டு கிடைக்கவில்லை என்றால், நான் உழைத்ததற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும். ரசிகர்களின் அன்பும், அவர்கள் தரும் பாராட்டும் எனக்கு எப்போதும் தேவை. 

என் உள்ளத்தில் இருந்து படங்களை தேர்வு செய்கிறேன்

ஒரு படம் ரூ.100 கோடி வசூலில் சேருமா அல்லது ரூ.200 கோடி வசூலில் சேருமா என்று பார்த்து நான் படங்களை தேர்வு செய்வது கிடையாது, அப்படி பணத்தை பார்த்து தேர்வு செய்தால் அது நிச்சயம் தப்பாகத்தான் இருக்கும். ஒரு படம் பாக்ஸ் ஆபிஸில் சேருகிறதா என்பது முக்கியமல்ல, அந்த படம் எடுக்கப்பட்ட விதம் தான் முக்கியமானது. கடுமையான உழைப்பே ஒர்க்-அவுட்டாகும். கதைக்காகத்தான் ஒரு படம் உருவாகிறது. என் சினிமா கேரியரில் நான் கடுமையாக உழைக்கிறேன், அதனால் தான் ஓம் சாந்தி ஓம் படம் முதல் ஹேப்பி நியூ இயர் படம் வரை எனக்கு வெற்றியாக அமைந்துள்ளது. ஒவ்வொரு படத்தின் கதையையும் என் உள்ளத்தில் இருந்து தேர்வு செய்து நடிக்கிறேன். 

சல்மான் கான் படத்தில் நடிக்க ஆசை

எல்லோரும் என்னிடம் ஏன் சல்மான் கான் படத்தில் நடிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்கின்றனர். எனக்கு சல்மான் கான் படத்தில் நடிக்க விருப்பம் இல்லாமல் இல்லை, அதேப்போல் அவருக்கும் என்னுடன் நடிக்க விருப்பம் இல்லாமல் இல்லை, இருவருக்கும் ஆசை இருக்கிறது, ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம், வாய்ப்பு கிடைக்கும், நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்போம்.

இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget