யாவும் வசப்படும் சினிமா விமர்சனம்

நடிகர் : விஜித்
நடிகை : தில்பிகா
இயக்குனர் : புதியவன்ராசய்யா
இசை : ஆர் கே சுந்தர்
ஓளிப்பதிவு : என் டி நந்தா

லண்டனில் மிகப்பெரிய செல்வந்தர் நாயகி தில்பிகாவின் தந்தை ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருக்கிறார். அந்த பெண் இவரிடமிருந்து பணத்தை பறிக்க முயற்சிக்கிறார். ஆனால், அதற்கு தில்பிகாவின் தந்தை பிடிகொடுக்க மறுக்கிறார். இதனால், அந்த பெண் தனது காதலனுடன் இணைந்து தில்பிகாவை கடத்தி பணம் பறிக்க திட்டமிடுகிறாள்.
அதற்காக சிறு சிறு கடத்தல் வேலைகளை செய்யும் பாலா என்பவனை நாடுகிறார்கள். அவனிடம் இந்த வேலையை செய்துகொடுத்தால் மிகப்பெரிய தொகை கொடுப்பதாக ஆசை காட்டுகின்றனர். அவனும் பணத்திற்கு ஆசைப்பட்டு இதற்கு ஒப்புக் கொள்கிறான். இந்த கடத்தல் வேலைகளை செய்வதற்கு பாலா தனது நண்பனான நாயகன் விஜித்தையும் சேர்த்துக் கொள்கிறார்.
பாலா, விஜித்திடம் தான் கடத்தப்போகும் பெண்ணைப் பற்றிக்கூறியதும், விஜித் அதிர்ச்சியடைகிறான். அதே நேரத்தில் சந்தோஷமும் அடைகிறான். காரணம், பாலா கடத்துவதாக கூறும் தில்பிகாவும், இவனும் காதலர்களாக இருந்தவர்கள். அவளை முறைப்படி பெண் கேட்க சென்ற விஜித்தை, சொத்தை காரணம் காட்டி அவமானப்படுத்தி விடுகிறார் அவளது தந்தை. 

இதனால், விரக்தியடைந்த விஜித் என்ன செய்வதென்று விழித்துக் கொண்டிருந்த நிலையில், பாலா சொன்னது போல் அவளை கடத்தி, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து செட்டிலாகி விட்டு அதன் பிறகு அவரை சந்தித்து பெண் கேட்கலாம் என நினைக்கிறான். பிறகு இருவரும் சென்று நாயகியை கடத்தி விடுகின்றனர். கடத்தி வைத்துக்கொண்டு அவளது தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். ஆனால், நாயகியின் தந்தையோ போலீஸ் உதவியை நாடுகிறார்.

இறுதியில், விஜித்தும், பாலாவும் நினைத்துபோல் நடந்ததா? அல்லது போலீசில் மாட்டிக்கொண்டார்களா? என்பதே மீதிக்கதை. 

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழரான புதியவன் ராசையா என்பவர்தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க லண்டனிலேயே படமாக்கியிருக்கிறார். அங்குள்ள தமிழர்களை வைத்தே படத்தையும் எடுத்திருக்கிறார். நாயகன் விஜித், பாலா, தில்பிகா மூன்று பேர் மட்டும் தான் படம் முழுக்க வருகிறார்கள். மற்றவர்கள் ஒருசில காட்சிகள் மட்டும் தான் வருகிறார்கள். 

படம் முழுக்க காட்சிகள் எதையுமே ஒருங்கே அமைக்காமல் சொதப்பல் செய்திருக்கிறார் இயக்குனர் புதியவன் ராசையா. காட்சிக்களுக்கு இடையே எவ்வித தொடர்பும் இல்லாதது போல் காட்சிப்படுத்தியிருப்பது போரடிக்க வைத்திருக்கிறது. படத்தில் டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வைத்து அனைவரையும் கடுப்பேத்தியிருக்கிறார்.

படத்திற்கு பெரிய மைனஸ் ஆர்.கே.சுந்தரின் இசை தான். இவருடைய பின்னணி இசை ஒரே இரைச்சலாக இருக்கிறது. பாடல்களிலும் தெளிவில்லை. என்.டி.நந்தாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் கூட்டவில்லை. 

மொத்தத்தில் ‘யாவும் வசப்படும்’ வசப்படவில்லை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget