திருடன் போலீஸ் சினிமா விமர்சனம்

நடிகர் : தினேஷ்
நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்
இயக்குனர் : கார்த்திக் ராஜு
இசை : யுவன் சங்கர் ராஜா
ஓளிப்பதிவு : சித்தார்த்


நாயகன் தினேஷின் அப்பா ராஜேஷ், ஹெட் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவருக்கு தனது மகனை எப்படியாவது காவல்துறையில் தன்னைவிட பெரிய பதவியில் அமர்த்த வேண்டும் என்ற ஆசை. ஆனால், தினேஷோ, படிப்பை முடிக்காமல், எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வருகிறார். அப்பாவின் பேச்சுக்கும் மதிப்பு கொடுப்பதில்லை. 

தினேஷுக்கும் அதே காலனியில் வசிக்கும் அசிஸ்டென்ட் கமிஷனரின் மகனான நிதின் சத்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இவர்களுடைய தகராறு இருவருடைய பெற்றோருக்குள்ளும் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. ஒருநாள் இந்த பிரச்சினை பெரிய அளவில் சென்றுவிட, ராஜேஷை தீர்த்துக்கட்ட நினைக்கிறார் அசிஸ்டென்ட் கமிஷனர். 

இந்த நிலையில், அந்த ஏரியாவில் பெரிய ரவுடியாக வலம்வரும் ராஜேந்திரன் மற்றும் அவனது கூட்டாளிகளின் அட்டகாசத்தை ஒடுக்க நினைக்கிறார் கமிஷனரான நரேன். அதற்கு என்கவுண்டர் ஒன்றுதான் தீர்வு என்று நரேனிடம் விளக்கிக்கூறி, அவரை ஒத்துக்கொள்ள வைக்கிறார் அசிஸ்டென்ட் கமிஷனர். நரேனும் என்கவுன்டருக்கு ஒப்புதல் தருகிறார். 

இந்த என்கவுன்டரை காரணமாக வைத்து ராஜேஷை கொல்ல முடிவு செய்கிறார் அசிஸ்டென்ட் கமிஷனர். அந்த என்கவுன்டர் டீமில் ராஜேஷையும் சேர்த்துவிடுகிறார். அதன்பிறகுதான் தெரிகிறது ரவுடி ராஜேந்திரன், அசிஸ்டென்ட் கமிஷனரின் போர்வையில்தான் அட்டூழியங்களை செய்து வருகிறான் என்று. ரவுடி ராஜேந்திரனிடம் சொல்லி, ராஜேஷை கொல்ல சொல்கிறார் அசிஸ்டென்ட் கமிஷனர். 

அவனும் ராஜேஷை குத்தி கொன்றுவிட்டு என்கவுன்டரில் இருந்து தப்பிக்கிறான். தந்தையை பறிகொடுத்தும் தினேஷுக்கு கண்ணில் ஒருதுளிகூட கண்ணீர் வரவில்லை. இந்நிலையில், ராஜேஷின் நேர்மையை பாராட்டி நரேன், தினேஷுக்கு அவரது அப்பா வகித்த போலீஸ் வேலையை கொடுக்கிறார். 

போலீஸ் வேலையில் சேரும் நாயகன் தினேஷுக்கு அதன்பிறகுதான் அந்த வேலையில் உள்ள வேதனை தெரிய வருகிறது. தனது அப்பாவின் மீதும் மரியாதை வருகிறது. தினேஷுக்கு அந்த பதவியை கொடுத்தது அசிஸ்டென்ட் கமிஷனருக்கு வெறுப்பை வரவழைக்கிறது. 

தினேஷை எப்படியாவது அந்த வேலையில் இருந்து விரட்ட வேண்டும் என்று அவனுக்கு டார்ச்சர் கொடுக்கிறார் அசிஸ்டென்ட் கமிஷனர். அந்த டார்ச்சர் தாங்க முடியாமல் நரேனை சந்தித்து வேலையை ராஜினாமா செய்யப் போவதாக கூறுகிறார் தினேஷ். 

ஆனால், நரேனோ இதே வேலையில் இருந்துகொண்டு உனது தந்தையின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடி என்று அவரை தூண்டுகிறார். இறுதியில், தினேஷ் தனது தந்தை சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை. 

தனது மூன்றாவது படத்திலேயே போலீஸ் வேடம் ஏற்ற தினேஷ் மீது ரொம்பவே எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்திருக்கிறார் தினேஷ். கான்ஸ்டபிள் கதாபாத்திரம் அவருக்காக உருவாக்கப்பட்டது போன்றே இருந்தது. 

காமெடி, ஆக்சன் என இரண்டையும் சரியாக செய்திருக்கிறார். அப்பா மீதான பாசத்தில் நண்பனை மட்டுமல்லாமல் வில்லன்களையும் டார்ச்சர் செய்யும் காட்சிகளில் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. 

நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ், அவ்வப்போது நாயகனை பார்வையாலே மயக்குவதும், போவதுமாக இருக்கிறார். படத்தில் இவருக்கான வசனங்கள் குறைவுதான். இருந்தாலும் பார்வையாலேயே நிறைய வசனங்களை பேசிவிடுகிறார். 

நிதின் சத்யாவுக்கு படத்தில் சரியான கதாபாத்திரம். நாயகனை கடுப்பேற்றும் காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார். நாயகனின் நண்பனாக வரும் பாலாவும் கான்ஸ்டபிளாக இருந்தாலும், தங்களை எந்த இடத்தில் பெரிய ஆளாக காட்டிக் கொள்ளவேண்டும் என்று நண்பனுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சிகளில் கைதட்டலை அள்ளிச் செல்கிறார். 

படத்தில் நாயகனுக்கு இணையாக பேசப்படுபவர் நான் கடவுள் ராஜேந்திரன்தான். வில்லத்தனமாகட்டும், காமெடியாகட்டும் இரண்டிலும் கலந்து தூள் கிளப்பியிருக்கிறார். தினேஷிடம் 'உங்க அப்பா செத்ததுக்கு நீ அழுகிறயோ இல்லையோ, அவரை ஏன்டா கொன்னோம்னு நான் அழுறேன்பா'ன்னு இவர் பேசுற வசனத்துல தியேட்டர் முழுக்க சிரிப்பலையும் கைதட்டலும் விசில் சத்தமும் அள்ளுகிறது. 

நேர்மையான கான்ஸ்டபிளாக வரும் ராஜேஷ், கமிஷனராக வரும் நரேன், கூட இருந்தே குழி பறிக்கும் அசிஸ்டென்ட் கமிஷனராக வரும் முத்துராமன் என போலீஸ் ஸ்டேஷனில் வரும் அத்தனை கதாபாத்திரங்களையும் அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜூ. 

கதையில் சிறிதும் தொய்வு ஏற்படாமல் அழகாக படமாக்கியிருக்கிறார். போலீஸ் கதை என்றாலும், கதையில் மாஸ் ஹீரோவுக்குண்டான மசாலாவை தெளிக்காமல், புதிய பாதையில் பயணித்திருக்கிறார். 

யுவன் இசையில் விஜய் சேதுபதி ஆடிப்பாடும் குத்துப்பாடல் ஆட்டம் போட வைக்கிறது. மெலோடி பாடலிலும் தனக்கே உரித்தான ஸ்டைலில் கலக்கியிருக்கிறார். பின்னணி இசை வழக்கம்போல் யுவனை பாராட்டவைக்கிறது. 

மொத்தத்தில் ‘திருடன் போலீஸ்’ காமெடி கொண்டாட்டம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget