இணையத்தில் முத்திரை பதிக்கும் இந்தியா

இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 24.3 கோடி என அண்மையில், Internet and Mobile Association of India (IAMAI) and IMRB என்ற
இரண்டு அமைப்புகளினால் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது. இதில் அதிக எண்ணிக்கையைக் கொண்ட முதல் நகரமாக மும்பை இடம் பெற்றுள்ளது. 1.64 கோடி மக்கள், மும்பையில் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். சென்ற அக்டோபரில் இதுவே 1.2 கோடியாக இருந்தது. 
மும்பையை அடுத்து, தலைநகர் டில்லி 1.21 கோடி மக்களுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இங்குதான் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 50% மக்கள் இந்த வகையில் அதிகமாகியுள்ளனர். 

மூன்றாவதாக, இந்தியாவில் சந்தோஷ நகரம் என்று அழைக்கப்படும் கொல்கத்தா உள்ளது. இங்கு இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 62.7 லட்சமாகும். இந்த ஆண்டு தான், இரண்டு நகரங்களைத் தள்ளி, மூன்றாவது இடத்திற்கு கொல்கத்தா வந்துள்ளது. தகவல் தொழில் நுட்ப நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரு 59.9 லட்சம் இணைய மக்களைப் பெற்றுள்ளது. தொழில் நகரமான சென்னை 55.8 லட்சம் இணையப் பயனாளர்களைக் கொண்டுள்ளது. 

கொல்கத்தா இவ்வாறு மூன்றாவது இடத்தைத் திடீர் எனப் பிடித்ததற்குக் காரணம், அங்கு அதிக அளவில் ஸ்மார்ட் போன் விற்பனை நடந்ததுதான் என்று அனைத்து மொபைல் சேவை நிறுவனங்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.

முதல் எட்டு இடங்களைப் பிடித்துள்ள மும்பை, டில்லி, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், ஆமதாபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 5.8 கோடி ஆகும். 
முதல் நான்கு நகரங்களின் இணையப் பயனாளர்கள், இந்திய இணையப் பயனாளர்களில் 23% மக்களைக் கொண்டுள்ளனர். மற்ற நான்கும் 11% பேரைக் கொண்டுள்ளனர். அடுத்த நிலையில், பத்து லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட நகரங்களில், சூரத், ஜெய்பூர், லக்னோ, வடோதரா, நாக்பூர் ஆகியவைதான் அதிக எண்ணிக்கையில் இணைய பயனாளர்களைக் கொண்ட நகரங்களாகும். இவற்றில் சூரத் நகரில் 29.7 லட்சம் பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget