2014ல் ரசிகர்களை ஏமாற்றிய படங்கள்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் படங்கள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அதிகபட்சமாக, அரை டஜன் படங்கள் கூட
வெளியாவது உண்டுதான். அதற்காக வெளியாகும் அத்தனை படங்களையும் மக்கள் எதிர்பார்ப்பதும் இல்லை. அவற்றை தியேட்டர்களுக்கு தேடிச் சென்று பார்ப்பதும் இல்லை. தியேட்டரில் மட்டுமல்ல, திருட்டு வி.சி.டி.யில் கூட மக்கள் பார்க்க விரும்பாத எத்தனையோ படங்கள் இருக்கின்றன.
முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள். பட நிறுவனங்களின் படங்களை மட்டுமே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். முந்தைய படத்தில் வெற்றியைக் கொடுத்த நட்சத்திரங்களின், இயக்குநர்களின் படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வளையத்துக்குள் வருவது உண்டு.

இந்த அளவுகோலின்படி, 2014 ஆம் ஆண்டு வெளியான படங்களில், மக்களால் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் எவை?

அவற்றில் எத்தனை படங்கள் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தன?

எத்தனை படங்கள் எதிர்பார்ப்பை காலி பண்ணின?

வாங்க பார்க்கலாம்...!

தமிழ்சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக இருப்பவர் ரஜினி. அவரது நடிப்பில் மோஷன் கேப்ஷரிங் தொழில்நுட்பத்தில் உருவான கோச்சடையான் படம், மற்றும் லிங்கா என இரண்டு படங்கள் வெளியாகின. இவற்றில் கோச்சடையான் படத்துக்கு ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்கிற ரீதியில் மிகப்பெரிய பில்ட் அப் கொடுக்கப்பட்டது. அதனால் ரசிகர்கள் மத்தியில் கோச்சடையான் படத்துக்கு மாபெரும் எதிர்பார்ப்பு உருவானது. அதை ஈடுகட்டும் அளவுக்கு கோச்சடையான படம் இல்லை. எனவே பொம்மை படம் என்று கிண்டலடிக்கப்பட்டு ரஜினி ரசிகர்களினாலேயே நிராகரிக்கப்பட்டது.

ரஜினியின் நடிப்பில் அவரது பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி வெளி வந்த லிங்கா படத்துக்கும் வழக்கம்போலவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. பல தியேட்டர்களில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அதிகாலை 1 மணிக்கு முதல்காட்சி திரையிடப்பட்டது. ஏறக்குறைய 3 நாட்களில் 100 கோடி வசூல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானநிலையில், சில நாட்களிலேயே லிங்கா படத்தை வெளியிட்டவர்கள் நஷ்டம் என்று கூக்குரல் எழுப்பினார்கள்.

ரஜினிக்கு அடுத்த இடத்தில் உள்ள இருபெரும் நடிகர்களான அஜித் மற்றும் விஜய் நடித்த படங்கள் என்றாலே எதிர்பார்ப்பு எகிறும். பொங்கல் அன்று வெளியான ஜில்லா, வீரம் படங்களும் இதற்கு விதிவிலக்கில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித், விஜய் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியானது இரண்டு பேருடைய ரசிகர்களுக்கும் கொண்டாட்டத்தைக் கொடுத்தது. ஜில்லா படத்தை 100 நாட்கள் கூட ஓட்டினார்கள். ஆனால் வீரம், ஜில்லா படங்களை வாங்கியவர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதிலும் வீரம் படத்தை தயாரித்தவர்களுக்கே நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் இருக்கிறது.

விஜய் நடித்த ஜில்லா படம் உண்மையான வெற்றிப்படம் இல்லை என்றாலும், பலத்த சர்ச்சைகளுக்குப் பிறகு வெளியான கத்தி படம் உண்மையான வெற்றியைப் பெற்றது. 100 கோடி வசூல் என்பெல்லாம் மிகையாய் பரப்பப்பட்ட தகவல்கள். என்றாலும் கத்தி படத்தை வாங்கிய பலருக்கும் கணிசமான லாபம் கிடைத்தது உண்மை. ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருந்தது - கத்தி.

அஜித், விஜய்க்கு சமமான இடத்தில் இருக்கும் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு அஞ்சான் படம் மட்டுமே வெளியானது. லிங்குசாமி தயாரித்து இயக்கிய அஞ்சான் படத்துக்கு மிகப்பெரிய பில்ட் அப் கொடுத்தார்கள். அஞ்சான் படத்தின் டீசரை வெளியிட்டுவிட்டு அடுத்தநாளே அதற்கு ஒரு சக்சஸ் மீட் வைத்து காமெடி பண்ணினார்கள். நான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இந்தபடத்தில இறக்கியிருக்கேன் என்று லிங்குசாமி சொன்னது, படம் வெளியான பிறகு பரிகாசத்துக்குரியதாக மாறிப்போனது. அஞ்சான்.... நோஞ்சான் ஆனது.

அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் விஜய்சேதுபதி. இவரது நடிப்பில் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம் ஆகிய மூன்று படங்கள் வெளிவந்தன. துரதிஷ்டவசமாக இந்த மூன்று படங்களுமே வெற்றியடையவில்லை. இவற்றில் ரம்மி படத்தில் விஜய்சேதுபதி ஹீரோ இல்லை. இனிகோ பிரபாகர்தான் ஹீரோ. நட்புக்காக கெஸ்ட்ரோலில்தான் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. ஆனால் விளம்பரங்களில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்த படம் என்பதுபோல் மிகைப்படுத்தியதால் டம்மியானது ரம்மி.

பண்ணையாரும் பத்மினியும் அற்புதமான படம். ஆனாலும் வணிக வெற்றியை அடையவில்லை. அதே நேரம் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்றது. வன்மம் படத்தின் மூலம் விஜய்சேதுபதியை மசாலா ஹீரோவாக சித்தரித்ததை மக்கள் ஏற்கவில்லை.

விஜய்சேதுபதிக்கு நிகரான நட்சத்திர அந்தஸ்தைப் பெறற சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் மான்கராத்தே. எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற முந்தைய படங்களின் வெற்றி ஏற்படுத்திய எதிர்பார்ப்பு காரணமாக மான் கராத்தே படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருந்தாலும், ரசிகர்களை முழுமையாய் மான்கராத்தே பூர்த்தி செய்யவில்லை. அதே நேரம் படத்தை வாங்கியவர்களுக்கு செம லாபம்.

சிவகார்த்திகேயனை கதாநாயகனாக்கிய தனுஷ் நடிப்பில் வெளியான படம் வேலையில்லா பட்டதாரி. இந்த ஆண்டின் உண்மையான கமர்ஷியல் ஹிட் என்று வியோகஸ்தர்கள் சொல்வது வேலையில்லா பட்டதாரி படத்தை மட்டுமே. அந்தளவுக்கு வெற்றியைக் குவித்தது.

விஷால் நடிப்பில் இந்த ஆண்டு இரண்டு படங்கள் வெளியாகின. தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நான் சிகப்பு மனிதன் படம் வெளியானது. திரு இயக்கிய இந்தப்படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஏமாற்றம் தந்த படமாகிவிட்டது. தீபாவளிக்கு கத்தி படத்துக்கு போட்டியாக வெளியான படம் - பூஜை. ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த பூஜை படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஹரி பாணியிலான பரபரப்பான மசாலா படம். ஏ பி சி என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படமாக இருந்தது - பூஜை.

கடந்த வருடங்களில் தோல்விப்படங்களைக் கொடுத்து துவண்டிருந்த கார்த்திக்கு மெட்ராஸ் படத்தின் வெற்றி தெம்பைக் கொடுத்தது. பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படம் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி வெற்றியை ரசித்தது.

மெட்ராஸ் படத்தைப்போலவே எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியாகி வெற்றியை ருசித்த மற்றொருபடம் - நாய்கள் ஜாக்கிரதை. பல வருடங்களாக பட வாய்ப்பில்லாமல் இருந்த சிபிராஜ் ஒரு நாயை நம்பி நடித்த படம் இது. என்ன ஆச்சர்யம்! இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடியை வசூலிக்கும் அளவுக்க வெற்றியடைந்தது.

மிஷ்கின் இயக்கத்தில் பாலா தயாரித்த பிசாசு படமும் சுமார் 2.5 கோடியில் எடுக்கப்பட்ட படம்தான். 4 நாட்களில் 5 கோடியை வசூல் செய்தது.

பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜின் அடுத்த படம் - ஜிகர்தண்டா. சித்தார்த் ஹீரோ என்றாலும், வில்லன் வேடத்தில் நடித்த பாபி சிம்ஹாதான் இப்படத்தைப் பொருத்தவரை ரியல் ஹீரோ. ரசிகர்களுக்கு படம் பிடித்தது. வசூலையும் அள்ளியது.

கார்த்திக் சுப்பாராஜைப்போலவே முதல் படத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த காதலில் சொதப்புவது எப்படி இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கிய இரண்டாவது படம் வாயை மூடி பேசவும். வாயைத்திறந்து பேசுகிற அளவுக்கு படம் இல்லாமல் போனதால் ஏமாற்றமே மிஞ்சியது.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் வெற்றி கொடுத்த உதயநிதி ஸ்டாலின் நடித்த இரண்டாவது படம் - இது கதிர்வேலன் காதல். நயன்தாரா கதாநாயகியாக நடித்தும் படம் தேறவில்லை. ஜெய் நடிப்பில் தயாரான திருமணம் எனும் நிக்காஹ் படத்துக்கு சின்னதாக எதிர்பார்ப்பு இருந்தது. அரதப்பழசான திரைக்கதையினால் படம் தோல்வியடைந்தது.

சாக்ரடீஸ் என்ற புதுமுக இயக்குநரின் பிரம்மன் படத்தில் சசிகுமார் நடித்தார். லாவண்யா கதாநாயகி. திரைக்கு வருவதற்கு முன் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தியேட்டருக்கு வந்த பிறகு ஏமாற்றம்.

அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ராஜுமுருகன் இயக்கிய குக்கூ படம் பார்வையற்றவர்களின் உலகத்துக்குள் நம்மை கூட்டிச்சென்ற படம். வித்தியாசமான கதைக்களத்துடன் மாறுபட்ட திரைக்கதையுடன் வெளியான இந்தப்படத்துக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கம் இருந்தது. எதிர்பார்ப்பை முழுமையாய் குக்கூ பூர்த்தி செய்யவில்லை.

காமெடியனாக கொடி கட்டிப்பறந்த வடிவ«லு பல வருட வனவாசத்துக்குப் பிறகு கதாநாயகனாக நடித்த படம் தெனாலிராமன். ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு கடைசியில் தெனாலிராமன் என்ற பெயரில் திரைக்கு வந்தது. என்ன பிரயோஜனம்? வடிவேலு ஏற்கனவே கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் மற்றும் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படங்களின் கலவையாக இருந்ததால் மக்கள் இந்தப்படத்தை கண்டு கொள்ளவில்லை.

மற்றொரு காமெடி நடிகரான சந்தானம் கதாநாயகனாக நடித்த படம் - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். வெற்றியடைந்த ஒரு தெலுங்குப்படத்தின் ரீமேக்காக இருந்தாலும் நம்பமுடியாத கதை, சந்தானத்துக்கு பொருத்தமில்லாத வேடம் போனிற காரணங்களினால் இப்படமும் ஏமாற்றத்தைக் கொடுத்த படங்களில் பட்டியலில் சேர்ந்துவிட்டது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget