2014ல் கோலிவுட் வெற்றி படங்கள்

2014ம் ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் அதுவே ஒரு சாதனைதான். 200க்கும் மேற்பட்ட படங்கள்
வெளிவந்து இந்த ஆண்டில் ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளன. அவற்றில் 20 படங்களாவது வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றிருக்குமா என்றால்..இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அதனால், சாதனை புரிந்த படங்கள் என சுமார் பத்து பதினைந்து படங்களைப் பற்றி மட்டும் குறிப்பிடாமல் எந்த விதத்தில் சில நட்சத்திரங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் எந்தப் படங்களின் மூலம் பேசப்பட்டார்கள், அவர்கள் சாதனைபுரிந்த படங்கள் எவையெவை என்பதைப் பற்றிப் பார்ப்போம்...

வசூலில் சாதனை

இந்த ஆண்டில் 100 கோடி ரூபாய் வசூல் என்பது கொஞ்சம் அதிகமாகவே ஒலித்தது. அதற்குக் காரணம் இரண்டு படங்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், சமந்தா மற்றும் பலர் நடித்த 'கத்தி' திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை 12 நாட்களுக்குள் 100 கோடி ரூபாய் வசூலைப் பெற்றது என படத்தின் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அடுத்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்து வெளிவந்த 'லிங்கா' திரைப்படம் 3 நாட்களுக்குள் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது, என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் மீடியாக்களில் வெளிவந்தன. மேற்சொன்ன இரண்டு படங்களுமே 100 கோடி ரூபாய் வசூலை உண்மையிலேயே அள்ளியதா இல்லையா என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம். ஆனாலும், விஜய், ரஜினி ரசிகர்கள் அவரவர் விருப்பமான நடிகரின் படங்கள் 100 கோடியைத் தாண்டியது என ஆணித் தரமாக நம்புகிறார்கள்.

வாய்ப் பேச்சால் சாதனை...

சினிமாவில் ஒரு படத்தின் வெற்றி என்பது 'மவுத் டாக்' என்று சொல்லப்படும் வாய்ப் பேச்சால் மட்டுமே அதிகம் நிகழும் என்பதுதான் உண்மை. ஒரு படத்தை என்னதான் விளம்பரப்படுத்தினாலும், அது கடைகோடி ரசிகனுக்கும் வாய்ப் பேச்சால் மட்டுமே சென்றடையும். அப்படி அனைத்து ரசிகர்களையும், அதாவது 'ஏ,பி,சி என மூன்று சென்டர்களிலும் ஒரு சில படங்கள் மட்டுமே ஈர்த்து சாதனை புரிந்தன. அவற்றில் விமல் நடித்த 'மஞ்சப் பை', டீகே இயக்கிய 'யாமிருக்க பயமே', நட்ராஜ் நடித்த 'சதுரங்க வேட்டை', தனுஷ் நடித்த 'வேலை இல்லா பட்டதாரி', சுந்தர் .சி இயக்கிய 'அரண்மனை', சிபிராஜ் நடித்த 'நாய்கள் ஜாக்கிரதை' ஆகியவை குறிப்பிட வேண்டியவை. இந்தப் படங்களின் பட்ஜெட்டும், இவை வெற்றி பெறுமா என்ற எந்த எதிர்பார்ப்புமே இல்லாமல் ரசிகர்களின் வாய்ப் பேச்சால் மட்டுமே சின்னச் சின்ன ஊர்களில் உள்ள திரையரங்குகளில் கூட வெளியாகி வெற்றி பெற்று நல்ல வசூலைக் கொடுத்தன.

தரத்தில் சாதனை...

அட...தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்கு இந்தப் படங்கள் கொண்டு சென்றிருக்கிறதே என கதையைத் தேர்ந்தெடுத்த விதத்திலும், அதைத் திரைக்கதையாக்கி, எதிர்பார்க்க முடியாத காட்சிகள், திருப்பங்கள் ஆகியவற்றுடன் சில படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. அவற்றில் எந்த நட்சத்திர அந்தஸ்தும் இல்லாமல், சிறுவர், சிறுமியர்களை மட்டும் நடிக்க வைத்து விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த 'கோலி சோடா' படம் முக்கியமான ஒரு படம். 50 லட்சத்திற்கும் குறைவான செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 5 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளியது, படத்தின் தொலைக்காட்சி உரிமை மட்டுமே 3 கோடி ரூபாய்க்கும் மேல் விற்கப்பட்டது.

அதற்கடுத்து, ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன், ஜனனி நடித்த 'தெகிடி', பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்', கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா நடித்த 'ஜிகர்தண்டா', நிர்மல் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த 'சலீம்', பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த 'மெட்ராஜ், மிஷ்கின் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்து வெளிவந்த 'பிசாசு', பிரபு சாலமன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'கயல்' ஆகிய படங்களைக் குறிப்பிடலாம். வழக்கமான சினிமா போல் இல்லாமல் இந்தப் படங்கள் தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றன என்பது உண்மை.

எதிர்பார்ப்பில் சாதனை...

சில படங்கள் வெளிவரும் வரை அவை எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியாமல் இருக்கும். ஆனாலும், அந்தப் படங்களைப் பற்றிய ஒரு எதிர்பார்ப்பு நமக்கு இருக்கும். அந்த எதிர்பார்ப்பு சில சமயங்களில் ஏமாற்றமாக இருந்தாலும், ஒரு சில படங்கள் அந்த எதிர்பார்ப்பையும் மீறி நம்மை ஓரளவுக்குத் திருப்திப்படுத்தியிருந்தாலும், வியாபார ரீதியாக பெரிய அளவில் போகவில்லை என்றாலும், அந்தப் படத்தில் இருந்த சில விஷயங்கள் நம்மை அந்தப் படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்க வேண்டிய படங்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பைத் தூண்ட வைத்திருக்கும். அப்படிப்பட்ட படங்களாக, அருண்குமார் இயக்கிய 'பண்ணையாரும் பத்மினியும்', அறிவழகன் இயக்கிய 'வல்லினம், சமுத்திரக்கனி இயக்கிய 'நிமிர்ந்து நில்', ராஜு முருகன் இயக்கிய 'குக்கூ', ராம்குமார் இயக்கிய 'முண்டாசுப்பட்டி', விஜய் இயக்கிய 'சைவம்', ஞான ராஜசேகரன் இயக்கிய 'ராமானுஜன்', வசந்த பாலன் இயக்கிய 'காவியத் தலைவன்', மகிழ் திருமேனி இயக்கிய 'மீகாமன்' ஆகிய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ஒரு சாதனையை எற்படுத்திய படங்கள்.

விமர்சனத்தில் சாதனை...

ஒரு படத்தை அந்தப் படங்கள் பற்றிய விமர்சனங்கள் காப்பாற்றுகிறதோ இல்லையோ, அந்தப் படங்கள் கொஞ்சம் தவறாக உருவாக்கப்பட்டிருந்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு விடும். லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்து வெளிவந்த 'அஞ்சான்' படம் அதற்குச் சிறந்த உதாரணமாக அமைந்தது. படம் வெளியான ஒரு நாளிலேயே படத்தைப் பற்றிய நெகட்டிவ்வான விமர்சனங்கள் அந்தப் படத்தின் வெற்றியையும், வசூலையும் ஆட்டிப் படைத்து விட்டது. இதுவரை எந்த ஒரு தமிழ் சினிமாவிற்கும் அப்படி ஒரு விமர்சனம் வந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட அனைத்திலும் அனைவரும் ஒரே மாதிரியான நெகட்டிவ்வான விமர்சனத்தைத்தான் அந்தப் படம் குறித்து வெளியிட்டார்கள்.

'அஞ்சான்' படத்திற்கு அடுத்து விமர்சன ரீதியாக பல விதமான கருத்துக்கள் எழுந்த படமாக 'லிங்கா' படம் அமைந்தது. வழக்கமான ரஜினியைப் பார்க்க முடியவில்லை, ரஜினியின் முந்தைய படங்களைப் போல் இல்லை, கிளைமாக்சில் இப்படியா காதில் பூச்சுற்றுவது, படத்தில் ஒரு பரபரப்பும், விறுவிறுப்பும் இல்லை என்றெல்லாம் எழுந்த விமர்சனங்கள் ஒரு ரஜினி படத்திற்குக் கிடைப்பது இதுவே முதல் முறை. அதனால், படத்தின் எதிர்பார்க்கப்பட்ட வசூலை வேறு பாதிக்க வைத்துவிட்டது.

முதலுக்கு மோசமில்லையில் சாதனை...

தரத்திலும் கொண்டாடப்பட வேண்டிய படங்கள் இல்லை, வசூல் ரீதியாக அப்படி ஒன்றும் பெரிய சாதனையை நிகழ்த்தவில்லை என்ற ரீதியிலான சில படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்துள்ளன. அவை பெரும்பாலும் வழக்கமான கமர்ஷியல் பார்முலாவில் எடுக்கப்பட்ட படங்களாகவே இருக்கம். அப்படிப்பட்ட படங்களில், விஜய் நடித்த 'ஜில்லா', அஜித் நடித்த 'வீரம்', சிவகார்த்திகேயன் நடித்த 'மான் கராத்தே', விஷால் நடித்த 'நான் சிகப்பு மனிதன், பூஜை', விக்ரம் பிரபு நடித்த 'அரிமா நம்பி, வெள்ளக்கார துரை', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'இது கதிர்வேலன் காதல்', விஷ்ணு விஷால் நடித்த 'முண்டாசுப்பட்டி, ஜீவா', ஆகிய படங்களைச் சொல்லலாம். இந்தப் படங்கள் வெற்றிப் படங்களா, தோல்விப் படங்களா என்று சொல்ல முடியாத நிலையில் சில விதத்தில் லாபத்தையும், சில விதத்தில் தோல்வியையும் கொடுத்தன. ஆனால், இந்தப் படங்களின் ரிசல்ட் சம்பந்தப்பட்டவர்களைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.

சிறிய படங்களின் சாதனை...

பெரிய நட்சத்திரங்கள் இல்லை, பெரிய இயக்குனர்கள் இல்லை, ஆனால், ஏதோ ஒரு விதத்தில் திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடமும் ஓரளவிற்கேனும் நம்பிக்கையை விதைத்த படங்கள் என சில படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அப்படிப்பட்ட படங்களில் சோழ தேவன் இயக்கிய 'சண்டியர்', கிருஷ்ணா இயக்கிய 'நெடுஞ்சாலை, ஜீவா சங்கர் இயக்கிய 'அமர காவியம்', வெற்றி மகாலிங்கம் இயக்கிய 'வெண்ணிலா வீடு', கார்த்திக் ராஜு இயக்கிய 'திருடன் போலீஸ்', பிரபு யுவராஜ் இயக்கிய 'ர', ஆகிய படங்களைச் சொல்லலாம். இந்தப் படங்களின் இயக்குநர்கள் அடுத்தடுத்து நல்ல தரமான படங்களைக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையை விதைத்த விதத்தில் சாதனை புரிந்தவர்கள்தான்.

அறிமுக நட்சத்திரங்களில் சாதனை

இந்த ஆண்டு எண்ணற்ற புதுமுகங்கள் அறிமுகமானாலும் ஒரு சிலருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் தொடர்ச்சியான வெற்றிகளைக் குவிக்கவும் முடியும். அப்படி ஓரளவிற்கு அடையாளப்படுத்தப்பட்டவர்களாக விளங்கியவர்களில் சிலர்...'மெட்ராஸ்' படத்தில் அறிமுகமான கேத்தரின் தெரேசா, 'பொறியாளன், கயல்' படங்களில் அறிமுகமான ஆனந்தி, 'கயல்' படத்தில் அறிமுகமான சந்திரன், ஆகியோரை மட்டுமே குறிப்பிடலாம். மற்றவர்களின் அறிமுகங்கள் அந்தப் படங்களின் வெற்றியைப் பொறுத்தே அமைவதால் அவர்களுக்குள் திறமையிருந்தும் வெளிச்சத்திற்கு வராமலே போய்விட்டது.

அறிமுக இயக்குனர்களின் சாதனை...

இந்த ஆண்டில் அறிமுகமான இயக்குனர்களில் வரும் ஆண்டுகளிலும் நல்ல படங்களையும் வெற்றிப் படங்களையும் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கும் இயக்குனர்களில் சிலர்... 'பண்ணையாரும் பத்மினியும்' - அருண்குமார், 'தெகிடி' - ரமேஷ், 'யாமிருக்க பயமே' - டீகே, 'குக்கூ' - ராஜு முருகன், 'என்னமோ நடக்குது' - ராஜ பாண்டி, 'மஞ்சப் பை' - ராகவன், 'முண்டாசுப்பட்டி - ராம்குமார், 'அரிமா நம்பி' - ஆனந்த் சங்கர், 'சதுரங்க வேட்டை' - வினோத், 'சண்டியர்' - சோழ தேவன், 'சலீம்' - நிர்மல் குமார், 'வெண்நிலா வீடு' - வெற்றி மகாலிங்கம், 'திருடன் போலீஸ்' - கார்த்திக் ராஜு, 'ர' - பிரபு யுவராஜ், ஆகியோரைக் குறிப்பிடலாம். தொடர்ந்து தங்களுக்குக் கிடைக்கும் சரியான வாய்ப்பை இவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களது திறமையை வெளிப்படுத்தினால் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடிப்பார்கள். 

சினிமாவில் மட்டுமல்லாது எந்த ஒரு துறையிலுமே கடுமையான உழைப்பும், திறமையும் நமக்குள் இருந்தாலும், நம்மை நம்பி மூலதனம் போட்டவர்களுக்கு என்ன வெற்றி கிடைத்தது, என்ன லாபம் கிடைத்தது என்பதுதான் கணக்கில் கொள்ளப்படும். இங்கு சாதனை என்பது அந்தக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கப்படுகிறது.

ஏறக்குறைய, சினிமாவும் ஒரு சூதாட்டம்தான்...இங்கு வெற்றி பெறும் குதிரைகள் மீது மட்டுமே கோடி கோடியான பணம் கொட்டப்படுகிறது. வெற்றி பெற்றவர்களே சாதனையாளர்களாக கருதப்படுகிறார்கள்.

ஆனால், நாமும் என்றாவது ஒரு சாதனை புரிந்து விடுவோம், என்ற நம்பிக்கை மட்டுமே நம்மை அடுத்தக் கட்டத்திற்கும் அழைத்துச் செல்லும்....
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget