சூப்பர் ஸ்டார் கடந்து வந்த பாதை

“சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படும் ரஜினிகாந்த், இந்திய திரைப்படத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,
மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முள்ளும் மலரும்', 'ஆறிலிருந்து அறுபது வரை' 'பில்லா', 'போக்கிரிராஜா', 'முரட்டுக்காளை', 'தில்லு முல்லு' 'வேலைக்காரன்', 'பணக்காரன்', 'மிஸ்டர் பாரத்', 'தர்மத்தின் தலைவன்', 'எங்கேயோ கேட்டக் குரல்', 'மூன்று முகம்', 'நல்லவனுக்கு நல்லவன்' 'நான் சிவப்பு மனிதன்', 'ஸ்ரீராகவேந்திரா' படிக்காதவன்', 'மாவீரன்', 'ஊர்காவலன்', 'மனிதன்', 'குரு சிஷ்யன்', 'மாப்பிள்ளை' 'தளபதி', 'மன்னன்', 'அண்ணாமலை', 'பாண்டியன்', 'எஜமான்', 'உழைப்பாளி', 'வீரா', 'பாட்ஷா', 'முத்து', 'அருணாசலம்', 'படையப்பா', 'சந்திரமுகி', 'சிவாஜி', 'எந்திரன்' போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த மறக்கமுடியாத திரைபடங்கள்.

இந்தியாவில் மட்டுமல்லாமல், ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும், தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்ற ஒரே நடிகர் ரஜினிதான். ஒரு கண்டக்டராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு திரைப்படத்துறையில் மாபெரும் கதாநாயகனாக சாதனைப் படைத்த ரஜினிகாந்தின் வாழ்க்கையை சற்றே பின்னோக்கிப் பார்த்தால்.......

'சிவாஜி ராவ் கெய்க்வாட்' என்ற இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த், 1950 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் நாள் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் ராமோஜிராவ் கெய்க்வாடுக்கும், ரமாபாயிக்கும் நான்காவது மகனாக ஒரு “மராத்தி” குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும் மற்றும் ஒரு சகோதரியும் உள்ளனர். தன்னுடைய ஐந்தாவது வயதில், தாயை இழந்த ரஜினிகாந்த் , பெங்களூரில் உள்ள “ஆச்சாரியா பாடசாலை” மற்றும் “விவேகானந்த பாலக சங்கத்தில்” பள்ளிப்படிப்பை முடித்தார். சிறு வயதிலேயே பயம் இல்லாதவாராகவும், துணிச்சல் மிக்கவராகவும் இருந்தார். பள்ளிப்படிப்பை முடித்தப் பிறகு, ஒரு பஸ் கண்டக்டராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய அவர், பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். காலப்போக்கில், நடிப்பின் மீது ஏற்பட்ட ஆவலால், நடிகராகும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

ஆரம்பத்தில் பல இன்னல்களை சந்தித்த ரஜினிகாந்த் ஒரு நண்பனின் உதவியால் “சென்னை திரைப்படக் கல்லூரியில்” சேர்ந்தார். அந்த திரைப்படக்கல்லூரி தற்போதைய பிலிம் சேம்பர் வளாகத்தில் இயங்கியது. 1975 ஆம் ஆண்டு, கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தில், ஒரு சிறிய வேடத்தில் திரையுலக வாழ்க்கையை தொடங்கிய அவர், 1976ல் “கதா சங்கமா” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார். பிறகு, அதே ஆண்டில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “மூன்று முடிச்சு” திரைப்படம் அவரை ஒரு சிறந்த நடிகனாக அடையாளம் காட்டியது. இந்த திரைப்படத்தில் ஒரு பெண்ணாசை பிடித்த நடிகராக சிறப்பாக தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். சிகரெட்டை மேலே தூக்கிப் போட்டு வாய்க்கு கொண்டுவரும் ஸ்டைலினை, இந்த படத்தில் அற்புதமாக செய்திருப்பார். அதனை தொடர்ந்து 'அவர்கள்' (1977), '16 வயதினிலே' (1977), 'காயத்ரி' போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றார்.

1977 ஆம் ஆண்டு நடித்த 'புவனா ஒரு கேள்விக்குறி' திரைப்படம் ரஜினிகாந்த் அவர்களுக்கு பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படம். இந்த வெற்றியைத் தொடர்ந்து, 'முள்ளும் மலரும்', 'ஆறிலிருந்து அறுபது வரை' போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றியை அவர் பெற்றார்.
'பில்லா', 'போக்கிரிராஜா', 'தனிக்காட்டு ராஜா', 'முரட்டுக்காளை', போன்ற திரைப்படங்களில் ஒரு அதிரடி நாயகனாக நடித்து புகழ் பெற்றார். 1981 ஆம் ஆண்டு, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “தில்லு முல்லு” திரைப்படத்தின் மூலம், தன்னை ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக வெளிப்படுத்தியிருப்பார்.

'வேலைக்காரன்', 'பணக்காரன்', 'மிஸ்டர் பாரத்', 'தர்மத்தின் தலைவன்', 'எங்கேயோ கேட்டக் குரல்', 'மூன்று முகம்', 'நல்லவனுக்கு நல்லவன்' மற்றும் 'நான் சிவப்பு மனிதன்' போன்ற திரைப்படங்கள் இவருக்கு மேலும் பல வெற்றிகளை பெற்றுத்தந்தது.

ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில், 1985 ஆம் ஆண்டு எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த அவருடைய 100 வது படமான “ஸ்ரீராகவேந்திரா” திரைப்படம் அவருக்கு வித்தியாசமான நடிப்பு அனுபவத்தைப் பெற்றுத்தந்தது. இப்படத்தில், இந்து சமயப் புனிதரான “ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்” வாழ்க்கையை, ஒரு நடிகராக வாழ்ந்து காட்டியிருப்பார். இதனைத் தொடர்ந்து, 'படிக்காதவன்', 'மாவீரன்', 'ஊர்காவலன்', 'மனிதன்', 'குரு சிஷ்யன்', 'தர்மத்தின் தலைவன்', 'ராஜாதி ராஜா', 'ராஜா சின்ன ரோஜா', மற்றும் 'மாப்பிள்ளை' போன்ற திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்களாக இருந்தது.

1990 ஆம் ஆண்டுகளில் நடித்த 'பணக்காரன்', 'அதிசயப்பிறவி', 'தர்மதுரை', 'தளபதி', 'மன்னன்', 'அண்ணாமலை', 'பாண்டியன்', 'எஜமான்', 'உழைப்பாளி', 'வீரா', 'பாட்ஷா', 'முத்து', 'அருணாசலம்', 'படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல், இவருக்கு இந்தியாவில் 'சூப்பர்ஸ்டார்' என்ற அந்தஸ்த்தையும் பெற்றுத்தந்தது எனலாம்.

1995 ஆம் ஆண்டு வெளிவந்த “முத்து” திரைப்படம், இந்தியாவை தாண்டி வெளிநாட்டிலும் முத்திரை பதித்தது. குறிப்பாக ஜப்பானிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, வெளியிடப்பட்ட இத்திரைப்படம் ஜப்பானிலும் பெரும் வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் அம்மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற தகுதியையும் பெற்றது.

மாபெரும் எதிர்பார்ப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 2002 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்திலும், ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் வெளிவந்த “பாபா” திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியைத் தரவில்லை என்றாலும், 2005 ஆம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளிவந்த “சந்திரமுகி” திரைப்படம் மற்றும் 2007 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த “சிவாஜி” திரைப்படம் நல்ல வசூலை பெற்றுத்தந்தது.

மீண்டும் ஷங்கருடன் இணைந்து, அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட “எந்திரன்' திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, பல சாதனைகளை படைத்ததோடு மட்டுமல்லாமல், தமிழ் சினிமா வரலாற்றில் புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியது.

தமிழ்மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் ரஜினி.

'கதா சங்கமா' (1976), 'பாலு ஜேனு' (1976), 'ஒண்டு பிரேமதா கதா' (1977), 'சகோதர சவல்' (1977), 'குங்கும ரக்சே' (1977), 'கலாட்டா சம்சாரா' (1977), 'கில்லாட் கிட்டு' (1978), 'மாது தப்படமகா' (1978), 'தப்பிட தலா' (1978), 'ப்ரியா' (1979), 'கர்ஜனே' (1981) போன்ற கன்னட மொழித் திரைப்படங்களிலும், 'அந்துலேனி கதா' (1976), 'சிலக்கம்மா செப்பண்டி' (1977), 'தொலிரேயி கடிட்சண்டி' '(1977), 'ஆமே கதா' (1977), 'அன்னடம்முளு சவால்' (1978), 'வயசு பிலிசிண்டி'(1978), 'இதாரு அசாத்யுலே' (1979), 'அந்தமைனா அனுபவம்' (1979), 'டைகர்' (1979), 'அம்மா எவரிக்கைன அம்மா' (1979), 'ராம் ராபர்ட் ரஹீம்' (1980), 'மாயதாரி கிருஷ்ணடு' (1980), 'காளி' (1980), 'ஏதே நாசவல்' (1984), 'ஜீவன போராட்டம்' (1986), 'பெத்தராயிடு' (1995) போன்ற தெலுங்கு திரைப்படங்களிலும், 'அலாவுதினும் அற்புத விளக்கும்' (1979), 'கர்ஜனம்' (1981) போன்ற மலையாள மொழித் திரைப்படங்களிலும், 'அந்தா கானூன்' (1983), 'ஜீத் ஹமாரி(1983), மேரி அதாலத்(1984), கங்குவா(1984), ஜான் ஜானி ஜனார்தன்(1984), மஹா குரு' (1985), 'வஃபாதர்' (1985), 'பேவஃபாய்' (1985), 'பவான் தாதா' (1986), 'அசலி நகலி' (1986), 'தோஸ்தி துஸ்மன்' (1986), 'இன்சாப் கோன் கரேகா' (1987), 'உத்தர் தஷின்' (1987), 'தமாசா' (1988), 'பிரஸ்டார்ச்சர்' (1989), 'சால்பாஸ்' (1989), 'ஹம்' (1991), 'ஃபரிஸ்தே' (1991), 'கூன் கா கர்ஜ்' (1991), 'பூல் பனே அங்காரே' '(1991), 'தியாகி' (1992), 'இன்சானியத் கே தேவதா' (1993), 'ஆதங்க் ஹீ ஆதங்க்' (1995) போன்ற இந்தி மொழித் திரைப்படங்களிலும், 'பாக்கியதேவ்தா' என்ற பெங்காலி மொழித் திரைப்படத்திலும் மற்றும் 'பிளட் ஸ்டோன் (1988) என்ற ஆங்கில திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலின் போது ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் கருத்து கூறியதால் அக்கட்சி தோற்றது. அதன் பிறகு, ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதாக பல கேள்விகள் எழுப்பபட்டாலும், இன்றுவரை அவரிடம் மௌனம் மட்டுமே பதிலாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு படம் முடித்து அந்த படம் திரைக்கு வந்ததும், இமயமலைக்குச் செல்வதையும், அங்குள்ள ஆசிரமத்தில் தங்கி தியானம் செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார் ரஜினிகாந்த். சினிமா, பணம், புகழ் என பல சிகரத்தை தொட்டுப்பார்த்தாலும், அவருக்கான தேடல் 'இமயமலை பயணம்' தான். ஆனால் லிங்கா படத்துக்கு பிறகு ரஜினி கண்டிப்பாக இமயமலைக்கு செல்லமாட்டார் என்று ரஜினியின் அண்ணன் சத்யநாராயணாவும், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன் அர்த்தம் என்ன? உடனடியாய் தன் அடுத்தப்படத்தை தொடங்கப்போகிறாரா.... அல்லது அரசியல் கட்சி தொடங்கப்போகிறாரா?
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget