இந்தியாவில் 1Gbps வேகத்தில் இணைய இணைப்பு

கூகுள் நிறுவனம், அமெரிக்காவில், முதலில் கான்சஸ் நகரில் கூகுள் பைபர் (Google Fiber) என்ற திட்டத்தின் கீழ், ஆப்டிகல் பைபர் அடிப்படையில்,
மிக வேகமாக இணைய இணைப்பு தரும் வசதியை அளித்தது. தற்போது அதனை மேலும் சில நகரங்களில் அமைத்து வழங்குகிறது. இதே அமைப்பினையும் வசதியையும் இந்தியாவில் வழங்க கூகுள் முடிவெடுத்து, இதற்கென, இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறைக்கான அமைச்சகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அரசும், இதனை டிஜிட்டல் இந்தியா என்னும் முற்போக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ள ஆர்வம் காட்டுகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், விநாடிக்கு ஒரு கிகா பைட்ஸ் (1000Mbps (1Gbps)) வேகத்தில் தகவல் பரிமாறிக் கொள்ளும் வகையில், இணைய இணைப்பு நமக்குக் கிடைக்கும். தற்போது இந்தியாவில் சராசரியாகக் கிடைக்கும், இணைய இணைப்பு வேகத்தினைக் காட்டிலும் 500 மடங்கு வேகத்தில் இது செயல்படும். தற்போதைய சராசரி தகவல் பரிமாற்ற வேகம் 1.7 மெகா பிட்ஸ் ஆகும். 

இந்திய அரசு அதிகாரிகளிடம் இது குறித்த விசாரித்த போது, பேச்சு வார்த்தை தொடக்க நிலையில் இருப்பதாகவும், ஆனால், அரசு இந்த வசதியை ஏற்படுத்த கூகுள் போன்ற ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஆர்வத்துடன் இருப்பதாகவும் கூறினார்கள். அப்படியானால், இதனை இந்தியாவில் எப்போது எதிர்பார்க்கலாம்? என்ற கேள்விக்கு உறுதியான பதிலை யாரும் தரவில்லை.

அதற்கு முன்னர், இந்தியாவில் Fiber in India திட்டத்தினை அமல்படுத்த கூகுள் முன்வந்தால், அதன் முன் உள்ள பிரச்னைகள் என்ன என்று பார்க்கலாம். முதலில் உரிமங்கள் பெறுவது. இந்தியாவில், இணைய சேவை வழங்கும் எந்த ஒரு நிறுவனமும், அரசிடம் ஏல முறையில் கட்டணத்தை நிர்ணயம் செய்து, உரிமத்தை வாங்க வேண்டும். உரிமங்களுக்கான விலைகள் எந்த நேரத்திலும் உயரலாம். ஏலம் எடுக்கும்போது, மற்ற நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தலாம். அல்லது, இதனைத் தவிர்க்க, கூகுள், ஏற்கனவே இந்தப் பிரிவில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படலாம். 

அப்படியே, கூகுள் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு, ”இந்தியா பைபர்” திட்டத்தினை அமல்படுத்த முன்வந்தால், மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களின் பாடு திண்டாட்டமாகிவிடும். ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்கள், 3ஜி மற்றும் 4ஜி தொடர்புகளை அமைப்பதில் பல சவால்களைச் சந்தித்து வருகின்றன. இவை, கூகுள் போன்ற, இணைய இணைப்பில் அசுரத்தனமான வேகத்தில் இயங்கக் கூடிய நிறுவனத்துடன் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படலாம். ஏற்கனவே, கட்டுபடியாகத நிலையில் வருமானம் இருப்பதால், உரிமம் பெற்ற பல நிறுவனங்கள், தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வருகின்றன. இந்நிலையில், கூகுள் இத்திட்டத்தினை மேற்கொண்டால், இந்திய நிறுவனங்கள் அனைத்துமே மூடப்படலாம். அல்லது கூகுள் நிறுவனத்திற்கு இணையான பிற வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்தால் தான் செயல்பட முடியும்.

தொலைக் காட்சி ஒளிபரப்பு என்னவாகும்? 

அமெரிக்காவில், கூகுள் இந்த பைபர் இணைப்பிலேயே, சில தொலைக்காட்சி சேனல்களையும் வழங்கி வருகிறது. இந்த இணைப்பில் தொலைக்காட்சி சேனல்களையும் தருவது மிக எளிதான ஒன்றாகவும், கூடுதல் வருமானம் தருவதாகவும் அமையும். அதே முறையை இங்கும் பின்பற்ற கூகுள் உரிமம் கேட்கலாம். அப்படிக் கேட்டு வழங்கப்படும் பட்சத்தில், அது ஏற்கனவே, தொலைக் காட்சி சேனல்களை வழங்கும் நிறுவனங்களின் செயல்பாட்டிற்கு போட்டியாகவும், இடையூறாகவும் அமையும். ஏற்கனவே, பல தொலைக்காட்சி சேனல்கள், தொலைக்காட்சி நெட்வொர்க் நிறுவனங்கள், தங்கள் ஒளி பரப்பினை, இணையத்தில் காட்டி வருகின்றன. ஆனால், சரியான, வேகமான, கட்டுபடியான, இணைய இணைப்பு இல்லாததனால், இவை மக்களிடம் எடுபடவில்லை. ஆனால், கூகுள் போன்ற நிறுவனங்கள் இந்தப் பிரிவில் இயங்கத் தொடங்குகையில், தொலை தூரத்தில் அமைந்துள்ள கிராமப் புறங்களுக்கும், இச்சேவையை எளிதாகக் கொண்டு சென்றுவிடும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏற்கனவே இயங்கி வரும் ஒளிபரப்பு நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்த வேண்டி வரலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget