புத்தாண்டில் மக்களை கவரும் புதிய தொழில் நுட்பங்கள்

புதிதாய்ப் பிறந்துள்ள 2015 ஆம் ஆண்டில், ஏற்கனவே இயக்கத்தில் இருக்கும் சில தொழில் நுட்பங்கள், மக்களிடையே அதிகப்
பயனாளர்களைப் பெறும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். எப்போதும், டிஜிட்டல் உலகில், சில அதிகம் பேசப்படும்; ஆனால், அவ்வளவாகப் பயன் தரும் வகையில் மக்களைச் சென்றடையாது. சில அறிமுகமாகும்போது மக்களை ஈர்க்காது. அதனால் ஏற்படும் பயன்கள் நலம் பயக்கும் வகையில் இருக்கிறது என்று தெரிந்தவுடன், வேகமாகப் பரவலாகும். வரும் ஆண்டில் மக்களிடையே சிறப்பான இடம் பெறக் கூடிய தொழில் நுட்பங்கள் குறித்து இங்கு காணலாம்.

விண்டோஸ் 10: நீங்கள் ஓடுகளாக அடுக்கப்பட்டுத் தரப்பட்ட விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து எரிச்சல் பட்டிருந்தால், உங்களை சாந்தப்படுத்தி, தங்கள் வளையத்திற்குள் கொண்டுவரும் முயற்சியில், மைக்ரோசாப்ட் நமக்குத் தர இருப்பது விண்டோஸ் 10. இது மக்களிடையே ஏற்கனவே நன்கு பழக்கப்பட்ட விண்டோஸ் 7 சிஸ்டத்தின் ஸ்டைலைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு, தொழில் நுட்ப சோதனைப் பதிப்பாக இருந்தாலும், மைக்ரோசாப்ட், விண்டோஸ் 8 சிஸ்டத்தால், ஏமாற்றமடைந்த அல்லது அதிர்ச்சிக்கு ஆளான தன் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பினை நிறைவு செய்திடும் வகையில், விண்டோஸ் 10 உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2015 ஜூன் மாதத்திற்குப் பின்னர் வரும் அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்கள், டேப்ளட் பி.சி.க்கள் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் அனைத்திலும் விண்டோஸ் 10 சிஸ்டம் தான் இடம் பெற்று, மக்களால் விரும்பப்படும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

ஆண்ட்ராய்ட் லாலிபாப்: தன் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்கையில், கூகுள் நிறுவனம் சிறிது சறுக்கலையே சந்தித்து வருகிறது. சென்ற அக்டோபர் மாதவாக்கில், தன் லாலிபாப் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. மிக ஆர்ப்பாட்டமாக, இதற்கான அறிவிப்புகளும், விளம்பரங்களும் வந்தன. ஆனால், யார் இதனைப் பெற்று பயன்படுத்துகிறார்கள்? அல்லது அப்டேட் செய்திட வசதி தரப்பட்டுள்ளதா? இந்த கேள்விகளுக்கு இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் நெக்சஸ் (Nexus) சாதனங்களை வாங்கிப் பயன்படுத்தியவர்கள் மட்டுமே இதனை இயக்கும் வாய்ப்பு பெற்று அனுபவித்தனர். சில மொபைல் போன் நிறுவனங்கள் இதனைப் பெற்று, தாங்கள் ஜனவரி மாதம் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற இருக்கும் மொபைல் போன் கருத்தரங்கில், தங்கள் போன்களில் அமைத்து அறிமுகம் செய்திட இருக்கின்றன. லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடக்க நிலை மொபைல் போன்களிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிஸ்டமாகும். இந்த சிஸ்டம் இயங்க, 512 எம்.பி. மெமரி போதும். எனவே, 2015ல், இந்த சிஸ்டம் இயங்கும் போன்கள், இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைப் பெறும்.

என்.எப்.சி: அண்மைக் களத் தொடர்பு தொழில் நுட்பம் (Near Field Communication): எந்த வயர் தொடர்பும் இல்லாமல் தகவல் பரிமாறும், வை பி போன்ற தொழில் நுட்பம் இது. இதன் மூலம் சிறிய அளவிலான டேட்டாவினைப் பரிமாறிக் கொள்ளலாம். இந்த தொழில் நுட்பத்தினை இயக்கும் இரண்டு டிஜிட்டல் சாதனங்களை, மிகக் குறைந்த தூரத்தில் (சில சென்டிமீட்டர்கள்) வைத்துச் செயல்படுத்தினால், தகவல்கள் பரிமாறப்படும். இந்த தொழில் நுட்பம் இயங்கும் உங்கள் மொபைல் போன் ஸ்கிரீனில் தட்ட வேண்டிய இடத்தில், பணம் செலுத்துவதனைப் பெற்றுக் கொள்ளும், இதே தொழில் நுட்பம் கொண்ட சாதனத்தின் அருகே தட்டினால், உங்களுடைய போனில் உள்ள தகவல் மூலம், பணம் அந்த இன்னொரு சாதனத்திற்கு அனுப்பப்படும் தகவல் பரிமாறிக் கொள்ளப்படும். இது ஏறத்தாழ, கிரெடிக் கார்ட் அல்லது ஏ.டி.எம். கார்டினை, வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் சாதனங்களில் ஸ்வைப் செய்து பணம் செலுத்தும் முறையைப் போன்றதாகும். 2015 ஆம் ஆண்டில் வர இருக்கும் அனைத்து மொபைல் ஸ்மார்ட் போன்களும், நிச்சயமாக இந்த தொழில் நுட்பத்தினைக் கொண்டதாகவே இருக்கும். இதற்கான கட்டணம் செலுத்துதலை ஏற்றுக் கொள்ள ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷன் தேவைப்படும். இது இந்தியாவிற்கு வருவதற்கும், பயன்பாட்டில் பரவுவதற்கும் சற்று காலம் எடுத்துக் கொள்ளும் என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

எம்.எச்.எல். (The Mobile High-Definition Link): மொபைல் ஆடியோ மற்றும் வீடியோ இடைமுகத்திற்கான வரையறை செய்யப்பட்ட தரம் இது. இதன் மூலம், மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள் மற்றும் பிற கையில் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய சாதனங்களை ஹை டெபனிஷன் தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் ஆடியோ ரிசீவர்களுடன் இணைத்து செயல்படுத்தும் தொழில் நுட்பமாகும். MHL 3.0 என்னும் இந்த தர வரையறை 4K (Ultra HD) வீடியோ மற்றும் 7.1 சரவுண்ட் சவுண்ட் ஆடியோவினை சப்போர்ட் செய்திடும். உங்களிடம் உள்ள ஸ்மார்ட் போனில், 4K or UHD அளவில் வீடியோ எடுக்கும் திறன் இருந்தால், எம்.எச்.எல்.கேபிள் ஒன்றை வாங்கி, உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியின் HDMI போர்ட்டில் இணைத்து செயல்படுத்தலாம். 

யு.எஸ்.பி. 3: நீங்கள் இனி யு.எஸ்.பி. மெமரி ஸ்டிக் ஒன்று வாங்குவதாக இருந்தால், சற்று கூடுதல் பணம் செலுத்தி, யு.எஸ்.பி. 3 வகை இணைப்பினைத் தரும் ஸ்டிக்கினை வாங்கவும். இந்த மேம்படுத்தப்பட்ட யு.எஸ்.பி. தொழில் நுட்பத்தில் “SuperSpeed” என்னும் தர வரையறை செயல்படுகிறது. இதன் மூலம் ஒரு விநாடியில், 5 கிகா பிட் டேட்டா பரிமாறிக் கொள்ள முடியும். இது தற்போது பயன்பாட்டில் இருக்கும் யு.எஸ்.பி. 2 மெமரி ஸ்டிக் செயல்படுவதைக் காட்டிலும் பத்து பங்கு கூடுதல் வேகத்தில், டேட்டாவினைப் பரிமாறும்.ஒரு ப்ளாஷ் ட்ரைவ் ஸ்டிக், யு.எஸ்.பி. 3 வகையைச் சார்ந்தது என அறிய, அதன் போர்ட்டில் நீல வண்ணமும், அதன் ப்ளக்குகளில் SS என்ற எழுத்துக்களும் இருப்பதைக் கொண்டு அறியலாம்.

புளுடூத் ஸ்மார்ட்: புளுடூத் நிறுவனம், சென்ற டிசம்பர் 2 அன்று, அதன் புதிய மேம்பாட்டுப் பதிப்பு 4.2 குறித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அம்சம், இதில் தரப்படும் பாதுகாப்பாகும். இதனைப் பயன்படுத்துபவர் அனுமதியின்றி, மொபைல் போனுடன் இன்னொரு சாதனத்தை இணையாக்க (Pairing) முடியாது. மேலும், இது பழைய பதிப்புகளில் உள்ள டேட்டா பரிமாறும் வேகத்தினைக் காட்டிலும் 2.5 மடங்கு அதிக வேகத்தில் தகவல்களப் பரிமாறிக் கொள்ளும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget