மிலி சினிமா விமர்சனம்

நடிகர் : நிவின்பாலி, சாய்குமார்
நடிகை : அமலாபால், சனுஷா, பூர்ணா, பிரவீணா, அம்பிகா, அஞ்சு அரவிந்த்
ஒளிப்பதிவு : அனிஸ் லால்
இசை : கோபிசுந்தர் மாறும் ஷான் ரஹ்மான்
கதை : மகேஷ் நாராயணன்
டைரக்சன் : ராஜேஷ் பிள்ளை


'ட்ராபிக்' மூலம் ஹிட் கொடுத்த இயக்குனர் ராஜேஷ் பிள்ளையின் மற்றுமொரு படைப்பு. ட்ராபிக்கில் உறுப்பு தானத்தை வலியுறுத்திய இவர், இந்தப்படத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என பார்க்கலாம்.

பள்ளி மாணவியான அமலாபால் (மிலி) கொஞ்சம் அப்நார்மலான கதாபாத்திரம்.. அவரது தந்தை கல்லூரி புரபசர் என்பதால் படிப்பில் ஓரளவுக்கு சுமார் ரகமான அமலாபாலுக்கு நன்றாகப்படிக்கவேண்டுமே என்கிற கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது.. ஒரு வழியாக கல்லூரி படிப்பை முடித்தவுடன், தனது முன்னாள் மாணவியான பிரவீணாவை கார்டியனாக்கி சிட்டியில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் அமலாபாலை சேர்த்து விடுகிறார் அவரது தந்தை சாய்குமார்.

ஹாஸ்டலில் சக ரூம் மேட்டுகளுடன் சகஜமாக பழக முடியாத அமலாபாலுக்கு, வேலை நேரம் போக தனது கார்டியன் பிரவீணா வீட்டுக்கு செல்வதும், பிரவீனாவின் அம்மாவுடன் பேசுவதும் மட்டுமே ஆறுதலான விஷயங்கள். குழந்தைகள் பள்ளி ஒன்றில் வேலைக்கு போய்வரும் அமலாபாலுக்கு அங்கே ஒரு பணக்கார பெண்ணால் வேலை போய்விடுகிறது. இன்னொரு பக்கம் தான் காதலிக்கலாம் என நினைக்கும் இளைஞன் ஒருவனை சக ரூம் மேட்டான பூர்ணா தட்டிச்செல்கிறார். ஊருக்கே சென்றுவிடலாம் என்று நினைத்தால், தந்தையோ அங்கேயே வேறு வேலை தேடிக்கொள்.. ஊருக்கு வரவேண்டாம் என்கிறார்.

மன அழுத்தம் தாங்காமல் தற்கொலைக்கு முயல நினைக்கும் அந்த தருணத்தில் அவரது புதிய ரூமில் கிடக்கும் ஒரு டஸ்ட் பின் பொம்மை அவரது மனதை மாற்றுகிறது. அதைத்தொடர்ந்து பாசிட்டிவ் எனர்ஜி தொற்றிக்கொள்ள, அடுத்துவரும் நாட்களில் பிரவீணாவின் தம்பியான நிவின்பாலி, அமலாபாலின் மன அழுத்தம் நீங்கும் விதமாக ஆலோசனை தந்து, அடுத்து அவர் போகவேண்டிய புதிய பாதையை காட்டுகிறார். அவரை ஹாஸ்டலில் இருந்து விடுவித்து தனது தோழிகளுடன் தங்கவைக்கிறார்.
தனது அபார்ட்மென்ட்டில் குழந்தைகளை கவனிக்கும் 'கிரச்' ஒன்றை அமைக்க அனுமதி வாங்கும் பிரவீணா, அதை நடத்தும் பொறுப்பை அமலாபாலிடம் ஒப்படைக்கிறார்.. புதிய உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பிக்கும் அமலாபாலுக்கு அதில் சில எதிர்பாராத தடங்கல்கள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் எப்படி சமாளித்து சாதனைப்பெண்ணாக மாறுகிறார் என்பது தான் 'மிலி' நமக்கு சொல்லியிருக்கும் தன்னம்பிக்கை கதை.

ஹீரோயினை மையப்படுத்திய கதை என்பதால் ஆரம்ப காட்சி முதலே அமலாபால் நடிப்பில் புகுந்து விளையாடி இருக்கிறார் அமலாபால்.. மேக்கப் போடாமல் இயல்பான முகத்துடன் நடித்திருப்பது அவரது தைரியத்தை காட்டுகிறது.. தன்னை எல்லோரும் ஒதுக்குகிறார்களோ என்கிற பரிதவிப்பு, தான் தவறு செய்யாவிட்டாலும் தன் மீது பழி விழுகிறதே என்கிற அங்கலாய்ப்பு, சுகர் பேஷன்ட்டான அம்பிகாவுக்கு யாருக்கும் தெரியாமல் சாக்லேட், சுவீட் என வாங்கிவந்து தரும் அன்பு என முதல் பாதி முழுக்க சீரியஸ் முகம் காட்டுகிறார் அமலாபால். இடைவேளைக்குப்பின் அவர் நிமிர்ந்தெழுந்து இலக்கை நிர்ணயித்துக்கொண்டு அதை நோக்கி செயல்படுவது, இன்றைய ஆவரேஜ் ஸ்டூடண்ட்களாக இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் டானிக்.

வாழ்க்கையில் மேலேறி வர, வாழ்வை சுவாரஸ்யமாக்க நம்பிக்கை தரும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கதாநாயகன் நிவின் பாலியும் அவரது சகோதரியாக வரும் பிரவீணாவும் நம் மனதில் ஆழமாக பதிகிறார்கள். மனைவி இறந்தபின், தனது மகள் தனியாக இந்த உலகில் வாழ, பழகவேண்டும் என கண்டிப்பு காட்டும் அன்புத்தந்தையாக சாய்குமாரின் நடிப்பில் அவ்வளவு யதார்த்தம். அமலாபாலிடம் பெற்ற மகள் போல பாசத்தை காட்டும் அம்பிகாவின் கேரக்டர் நிறைவு தருகிறது. பூர்ணாவும் சனுஷாவும் நண்பிகளாக நல்ல தேர்வு.

குழந்தைகளின் பள்ளிப்பருவத்தின்போது பெற்றோர்கள் அவர்கள் மீது வலிந்து திணிக்கும் தங்களது ஆசைகள், அவர்களின் மனதை அறிய முற்படாதது, படிப்பு ஒன்றுதான் எதிர்காலம் என்பதுபோல அவர்கள் மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்கி, அதன் மூலம் அவர்களை கடும் மன அழுத்தத்திற்கு ஆளாக்குவது என பெண்களின் எதிர்கால வாழ்க்கைக்கு, அவர்களது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் காரணிகளுக்கு 'மிலி' மூலம் சாட்டையடி கொடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் பிள்ளை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget