கோலிவுட் கடலில் காமெடி அலை கரையை கடக்குமா

தமிழ் ரசிகர்கள் ரசனை மிக்கவர்கள். மிகச் சாதாரணமானவர்களின் காமெடியை கூட ரசித்து அவர்களை உச்சத்தில் தூக்கி வைப்பவர்கள். அதுவே
அவர்களிடம் சரக்கு தீர்ந்து தீர்ந்து விட்டால் கண்டுகொள்ளவும் மாட்டார்கள். அதனால்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு காமெடியன்கள் தனி ராஜாங்கம் நடத்தி வந்திருக்கிறார்கள். என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, நாகேஷ், சந்திரபாபு, தங்கவேலு, சுருளி ராஜன், கவுண்டமணி இப்படி காமெடியில் கோலோச்சியர்வகள் அதிகம். சமீபகாலத்தில் வடிவேலு, சந்தானம், சூரி சாதித்தார்கள்.

ஆனால் இனி வரும் காலங்களில் தனிப்பட்ட ஒருவரோ, இருவரோ காமெடி நாற்காலியில் கம்பீரமாக உட்கார முடியாது. ரசிகர்கள் பலரை சாய்சுக்கு வைத்திருக்கிறார்கள். வடிவேலு ஹீரோவாக நடிக்க போய்விட்டார். சந்தானம் காமெடி சலிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த இடைவெளியை பயன்படுத்தி தமிழ் சினிமாவில் புதிய காமெடி அலை வீசத் தொடங்கி விட்டது. அந்த அலையில முன்னணியில் இருக்கும் சிலரை பார்க்கலாம்....

கருணாகரன்

குட்டி குட்டி வேடங்களில் முகம் தெரியாமல் நடித்து வந்த கருணாகரனுக்கு வாழ்க்கை கொடுத்தது பீட்சா. திருட்டு விழியும், அப்பாவி முகமும் அவருக்கு நிறைய கைகொடுத்தது. சூது கவ்வும், தீயா வேலை செய்யணும் குமாரு, யாமிருக்க பயமே, ஜிகிர்தண்டா, என மளமளவென வளர்ந்தவரின் கேரியரில் ரஜினியுடன் நடித்த லிங்கா உயரத்தில் தூக்கி உட்கார வைத்துவிட்டது. மிக குறுகிய காலத்திலேயே ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் ஹீரோவாக நடித்தார். அடுத்து ராதாமோகனின் உப்புகருவாடு படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இதுதவிர கணிதன், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, இறைவி படங்களில் நடித்து வருகிறார். இன்றைய தேதியில் மோஸ்ட் வாண்டட் காமெடியனாக இருப்பவர் கருணாகரன்.

சதீஷ்

காமெடி வசனகர்த்தாவாக அறிமுகமானவர் சதீஷ். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், பொய் சொல்ல போறோம் படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். தமிழ் படம், மதராசபட்டினம், கொல கொலயா முந்திரிக்கா, மெரீனா படங்களில் நடித்தவருக்கு பிரேக் கொடுத்த படம் எதிர்நீச்சல். அதன் பிறகு மான் கராத்தே, சிகரம் தொடு, கத்தி, ஆம்பள, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என படிப்படியாக சதீஷின் கிராப் உயர்ந்து கொண்டிருக்கிறது. வை ராஜா வை, வா டீல் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். டைமிங் காமெடி இவரது ஸ்பெஷல்.

செண்ட்ராயன்

வடிவேலு பாணியில் நேட்டிவிட்டி காமெடியான கலக்கி வருகிறார் செண்ட்ராயன். பொல்லாதவன், ரவுத்திரம் படத்தில் டெரர் வில்லனாக நடித்தவர்தான் செண்ட்ராயன். அந்த வாய்ப்பு தொடார்ந்து கிடைக்காததால் காமெடிக்கு ரூட் மாறினார். பல படங்களில் காமெடியாக நடித்தாலும் மூடர்கூடம் தனி அடையாளத்தை கொடுத்தது. கேடி பில்லா கில்லாடி ரங்கா, விஷயம் வெளியில தெரியக்கூடாது, இவனுக்கு தண்ணியில கண்டம், ஒரு பந்து 4 ரன் ஒரு விக்கெட், மொசக்குட்டி படங்களில் நடித்தார். தற்போது பஞ்சுமிட்டாய், யட்சன் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். தனித்துவமான முகம், குரல் இவரது பிளஸ் பாயிண்டுகள்.

காளி வெங்கட்

குறும்பட ஏரியாவிலிருந்து காமெடியனாக சினமாவுக்கு வந்தவர் காளி வெங்கட். சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த காளி வெங்கட்டுக்கு பீட்சா 2 அடையாளம் கொடுத்தது. விழா, பண்ணையாரும் பத்மினியும், வாயை மூடி பேசவும், தெகிடி, பூவரசம் பீ பீ, முண்டாசுப்பட்டி படங்கள் அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. காமெடியன் மற்றும் கேரக்டர் ரோல்களுக்கு கச்சிதமாக பொருந்துவதால் காளி வெங்கட் காட்டில் மழைதான். காத்தாடி, உறுமீன், இந்தியா பாகிஸ்தான், ஈட்டி, இறுதி சுற்று உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களை கையில் வைத்திருக்கிறார்.

பால சரவணன்

கனா காணும் காலங்கள் என்ற சின்னத்திரை தொடர் மூலம் சினிமாவுக்கு வந்தவர் பால சரவணன். குட்டிப்புலி படத்தில் அறிமுகம். அடுத்து ஈகோ படத்தில் சோலோ காமெடியனாக நடித்தார் என்றாலும் பண்ணையாரும் பத்மினியும்தான் பாலாவை திரும்பி பார்க்க வைத்தது. அதன்பிறகு என்றென்றும், நெருங்கி வா முத்தமிடாதே, திருடன் போலீஸ், ஆ, டார்லிங், வலியவன், படங்கள் பாலாவை திரும்பி பார்க்க வைத்தது. இடம் பொருள் ஏவல், நகர்வலம், ஒரு நாள் கூத்து, உள்குத்து படங்களில் நடித்து வருகிறார். இளம் ஹீரோக்களின் காமெடி நண்பன் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துவதால் பாலாவுக்கு படங்கள் குவிகிறது.

இவர்கள் தவிர முண்டாசு பட்டியில் மூனீஷ் காந்த்தாக நடித்த ராமதாஸ், நண்டு ஜெகன், லொள்ளுசபா ஜீவா, ஈரோடு மகேஷ், பிரேம்ஜி அமரன், ரோபோ சங்கர், கும்கி அஸ்வின், போன்றவர்களும் காமெடியன்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த புதிய காமெடி அலை சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget