மதுவுக்கு அடிமையாகும் மாதுக்கள்

குடி.. குடியை கெடுக்கும். மது... நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பது போன்ற விழிப்புணர்வு பிரசாரங்கள் காலம் காலமாக நடைபெற்றுக்
கொண்டே இருக்கின்றன. ஆனால் மது போதையில் மூழ்கி கிடப்பவர்கள் இதனை கண்டு கொள்வதே இல்லை. சென்னையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வார இறுதி நாள் கொண்டாட்டம் என்ற பெயரில், நட்சத்திர ஓட்டல்களில் குடித்து கும்மாளமிடும் இளைஞர்களே இதற்கு சரியான உதாரணம்.

வீக் எண்ட் செலபிரஷேன் என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் இதனை அழைக்கிறார்கள். இதற்காக முந்தைய நாளே மதுபார்களை குத்தகைக்கு எடுத்து விடுகிறார்கள். அங்கு குறிப்பிட்ட இடத்தை ரிசர்வ் செய்து வைத்து விட்டு கூட்டமாக சென்று நள்ளிரவு வரையிலும் போதை தலைக்கேறும் வரை மது கோப்பையில் மூழ்கி கிடக்கிறார்கள். 

இப்படி பார்களில் குவியும் ஆண்களுக்கு நிகராக இன்று இளம்பெண்களும் மது போதைக்கு அடிமையாகி வருகிறார்கள். ஆண் நண்பர் களுடன் ஓட்டல்களில் சென்று சாப்பிடுவது போல மது பார்களுக்கும் அதிக அளவில் செல்லத் தொடங்கி இருக்கிறார்கள். எதைப் பற்றியும் கவலை இல்லை மங்கலான வெளிச்சத்தில்.. மனதை வருடிக்கொடுக்கும் மெல்லிசையை கேட்டுக் கொண்டே மது அருந்துவது தனி சுகம் என்கிறார் போதைக்கு அடிமையான வாலிபர் ஒருவர். 

இது போன்ற பார்களில் பக்கத்து மேஜைகளில் கோப்பையில் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும் மது வகைகள் மின்னுவது மட்டுமே தெரியும். மற்றபடி இருள் சூழ்ந்தே காணப்படும். இப்படிப்பட்ட பார்களில் தான் இன்று நவநாகரீக மங்கைகள் ஜீன்ஸ் பேண்ட், டி.சர்ட் அணிந்தபடியே வந்து ஆண் நண்பர்களுடன் மது அருந்துகிறார்கள். 

சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஆண்கள் போதையில் இருக்கிறார்களே, அப்படிப்பட்ட இடத்துக்கு சென்று நாமும் சேர்ந்து குடிக்கிறோமே என்கிற எண்ணம், அவர்கள் மனதில் துளி கூட ஏற்படுவதில்லை. ஒயின், வோட்கா என விதவிதமான மது வகைகளை உள்ளே தள்ளும் பெண்கள், நள்ளிரவில் பாரை விட்டு வெளியில் வரும்போது, ஆண் நண்பர்களின் தோளில் தொற்றிக் கொண்டே செல்லும் காட்சிகளையும் காண முடிகிறது.

உடுத்தும் உடை... உண்ணும் உணவு.. என அத்தனை விஷயங்களிலும் இன்று மேல்நாட்டு மோகமே பெண்கள் மத்தியில் பரவிக் கிடக்கிறது. அதில் ஒன்றான குடிப்பழக்கமும் நம்மூர் பெண்களை தொற்றிக் கொண்டிருப்பது வேதனை அளிக்கும் விஷயம் என்றும், இதனை தடுத்து நிறுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஒரு பக்கம் மதுக்கடைகளை மூடச் சொல்லி பல இடங்களில் பெண்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், தப்பான சகவாசகங்களால் நகர் புறங்களில் வசிக்கும் இளம்பெண்கள் இப்படி திசை மாறிச் செல்கிறார்கள். நவநாகரீக போதையில் இருந்து இளம்பெண்கள் மீண்டால் மட்டுமே இது போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget