கிரைண்டர் வாங்கும் முன் யோசிக்க வேண்டியவை

என்ன இருந்தாலும் பாட்டி சுட்ட வடை போல வருமா? கருப்பு உளுந்தை ஊற வைத்து, அலசி அலசி தோல் எடுத்து  ஒரு பக்கம்  வைத்துவிட்டு, ‘ராத்திரி கரப்பு, கிரப்பு மேய்ந்து இருக்குமோ’ன்னு ஆட்டுக்கல்லை காலையில் பார்த்துப் பார்த்துக் கழுவி, அதில்  உளுந்து போட்டு, நீர் தெளித்து தெளித்து, ஆட்டி, புசு புசுவென பந்து பந்தாக எடுத்து,
அதில் நாலு மிளகு, உப்பு போட்டால் கூட  போதும்... அப்படியே சுட்டால் தங்கம் போல பளபளவென மின்னி வரும் வடை முன்னால் ஏதாவது நிற்குமா!

கல் தோன்றியவுடன் தமிழன் கண்டுபிடித்த இயந்திரம் ஆட்டுக்கல். உலகில் எந்த மூலையில் வேண்டுமானாலும் தமிழரால் இருக்க முடியும், எது இல்லாமலும். ஆனால், இட்லி தோசை இல்லாமல் வாழவே முடியாது. ‘அதை விட்டால்  உப்புமாவா தினம் சாப்பிட முடியும்’ என்று அப்பாவியாக எதிர்கேள்வி கேட்கும் ஒரே இனம் தமிழினம்!

குழவியை  அப்படியே வைத்துவிட்டு ஆட்டுக்கல்லையே மோட்டார் மூலம் சுற்ற வைப்பது மிகப்பெரிய ஐடியாதான். யாரும்  அசைக்க முடியாத ஆட்டுக்கல்லையே ஓட வைக்கும் யோசனை கோவையில்தான் பிறந்து, கிரைண்டராக வளர்ந்தது. 1955ம்  வருடம் சபாபதி கிரைண்டரை உருவாக்கினார். குழவியை தூக்க முடியவில்லை என்பதால், சாயும் வசதி உள்ள கிரைண்டரை  உருவாக்கினார் துரைசாமி.

உலகம் முழுக்க பிளேடுகள் கொண்டே அரைக்க முடியும் என்ற நிலைதான் அதுவரை இருந்தது. கற்களால் அரைப்பதையே  மின்சாரப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக்காட்டியவர்கள் கோவைவாசிகள். அதன் பிறகு அங்கு இதுபோன்ற தொழில்கள்  பெருகின. 75% கிரைண்டர் தயாரிப்பு இன்றும் கோவையில்தான். வருடத்துக்கு 2800 கோடி ரூபாய் புழங்கும் தொழில் இது.  கிரைண்டருக்காக புவி சார் குறியீடும் பெற்று இருக்கிறது கோவை!

வெட் கிரைண்டர் தொழில் நுட்பம் ஒரு மின்சார மோட்டாரோடு இணைக்கப்பட்ட உலோக உருளை... அதில் அரைக்க கற்கள் (அந்தக் காலத்தில் தனியாக பெல்ட் அமைப்பு இருக்கும்).  உலோக உருளையில் கற்களை அடியில் பதித்து, நடுவில் குழவிகள் வைத்து மிகச்சிறிய இடைவெளி வைப்பதால், பொருட்கள் கற்களுக்கு இடையில் சென்று நசுங்கி மாவாகிறது. முன்பு இருந்த கிரைண்டர்களின் கற்களை உளி வைத்து கொத்த வேண்டிய அவசியம் உண்டு. இப்போது உள்ளவற்றில் உளிக்கொத்தும் வேலை இல்லை.வட இந்தியாவிலும் இட்லி, தோசைக்காக இல்லையென்றாலும், அல்வா தயாரிப்பிலும், அதிக அளவில் சட்னி அரைக்கவும் கிரைண்டர் உபயோகப்படுத்துகிறார்கள். கல் அரவை என்பதால் சட்னி வகைகள் சுவை குன்றாமல் இருக்கும்.

அளவு

வீட்டு உபயோகத்துக்கான 2  லிட்டரில் இருந்து வணிகப் பயன்பாடுகளுக்கான 20 லிட்டர் வரை கிடைக்கிறது. நம்  குடும்பத்துக்குத் தேவையான அளவு வாங்கலாம். ‘வேலைக்கு போகணும்... ஒரு வாரம் மாவு வேண்டும்... ஒரே நேரத்தில்  அரைத்து வைக்க வேண்டும்’ என்றால் அதற்கு ஏற்ற கொள்ளளவு வாங்க வேண்டும். சமையலறை சிறிதாக இருப்பவர்கள்  கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் - கிரைண்டரின் கொள்ளளவு அதிகமாக இருந்தால் அளவும் பெரிதாக இருக்கும்.

வகைகள்...இதில் 3 வகைகள் உள்ளன.

1. பழைய வகை கிரைண்டர்

இது ஒற்றைக் குழவி கிரைண்டர். எல்லா அளவுகளிலும் கிடைக்கும். அதிக இடம் தேவை. சுத்தம் செய்வது சற்று சிரமம்.  தனியாகக் கழற்றி சுத்தம் செய்ய இயலாது. எடை தூக்க முடியாதவர்கள் உபயோகிப்பது கடினம். ஆனால், இன்றளவும் இதன்  திறனுக்கு அருகில் எந்த அரைக்கும் சாதனமும் அருகில் வர முடியவில்லை. உணவகம், திருமண மண்டபம் மற்றும் வணிக  உபயோகங்களுக்கு இந்த வகைதான் தேவையாக இருக்கிறது.

2. டில்டிங் வகை கிரைண்டர்கள்

இதற்கும் தனியாக இடம் தேவை. பல அளவுகளில் கிடைக்கும். அதிக அளவில் பொருட்கள் அரைக்க இயலும். சுத்தம் செய்வது  ஓரளவு எளிது. சாதா கிரைண்டரை மாற்றி, சாய்க்கும் அமைப்பில் உள்ளது.

3. டேபிள் டாப் கிரைண்டர்கள்

குனிந்து வேலை செய்யும் அவசியம் இல்லை. மிக எளிதாக சுத்தம் செய்ய முடியும். இடம் அடைத்துக் கொள்ளாது. ஆனால்,  பெரிய அளவுகளில் கிடைக்காது.  ஓரளவுக்கு பொருட்கள் கொள்ளும். டேபிள் டாப் டில்டிங் வகையும் உள்ளது. இது கொஞ்சம் உயரமாக இருக்கும். டேபிள் டாப்பை விட குறைவாகவே  இடம் தேவைப்படும். நின்றுகொண்டு அரைக்க, தூக்கிக் கழுவ எது வசதியாக இருக்கிறது என்று பார்த்து வாங்கிக் கொள்ளலாம்.

எக்ஸ்ட்ரா வசதி

சில மாடல்களில் தேங்காய் துருவ, சப்பாத்தி மாவு பிசைய வசதிகள் உண்டு.

ஓவர்லோடு

இப்போது வரும் கிரைண்டர்களில் மிக்சி போலவே அதிக அளவில் பொருட்கள் போட்டால் தானாகவோ நின்று விடும் வசதி  உள்ளது. இது மோட்டார் எரியாமல் காப்பாற்றும்.

கற்கள்

ஒரு குழவிக் கல்லில் இருந்து மூன்று கற்கள் வரை உள்ள கிரைண்டர்கள் உள்ளன. 2 அல்லது 3  சிறிய கற்கள் டேபிள் டாப்பில்  இருக்கும். அவை கீழே பொருட்களைச் சுழற்றுவதால் வேகமாக அரைக்கும். எளிதாக எடுத்து கழுவி பொருத்தலாம். ஒரே கல்  என்றால் அதிக எடை இருக்கும். சிலரால் தூக்க முடியாது. கிரைண்டர் வாங்கும்போது கற்களை நாம் தனியாக தூக்க முடியுமா  என்று பார்த்து வாங்க வேண்டியது அவசியம். வட்டம், கூம்பு என இரு வடிவங்களில் கற்கள் இருக்கும். வட்ட வடிவை விட கூம்பு வடிவ கற்கள் நன்றாக அரைப்பதாக தெரிகிறது. கூம்பு வடிவத்தில் பொருட்கள் சிக்கிக் கொள்ளாது.

ஓட்டம்

எந்த கிரைண்டராக இருந்தாலும் விடாமல் ஓட வேண்டிய அவசியம் இருக்கிறது. 4 கிண்ணம் ஊற வைத்த தானியம் அரைக்க  குறைந்தபட்சம் 20 நிமிடம் இடைவிடாமல் ஓட வேண்டியது அவசியம். அதனால், அதைக் கவனிப்பது அவசியம். சூடாகாமலும்  இருக்க வேண்டும்.

பிராண்டுகள் அல்ட்ரா

இவர்கள் டேபிள் டாப் வகையில் முன்னோடியாக இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. கூம்பு வடிவ கற்கள். 5 வருட வாரன்டி.  சிறிய குடும்பங்களுக்கு  ஏற்ப ஒன்றரை லிட்டர் மாடல் கிடைக்கிறது. மத்திய தர வசதிக்கு 2 லிட்டர் உள்ளது. இரண்டரை  லிட்டரில் பெரிய அளவில்  வருகிறது. அப்படியே உருளையை கழற்றி மாவுடன் ஃபிரிட்ஜ் உள்ளே கூட வைத்துக்கொள்ளலாம்.  அத்தனை எளிது.

நிறைய வகைகள் உள்ளதால்  கிரைண்டர்கள் வாங்கும் முன் அதை மூடும் வசதி  நமக்கு எளிதாக இருக்கிறதா என்று கவனித்து  வாங்க வேண்டியது அவசியம். படத்தில் உள்ள மாடல் கிட்டத்தட்ட 9 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. 2  லிட்டர் கொள்ளளவு.  டிஜிட்டல் டைமர் நேரத்தை செட் செய்துவிட்டு வேலைகளை பார்க்கலாம்.  நடுவில் தண்ணீர் ஊற்றக்கூட டைமர் செட் செய்துகொண்டு வேலை செய்யலாம். மின்சாரம் சரியாக இல்லாமல் ஏற்படும் பழுதுகளுக்கு பாதுகாப்பு வசதி உள்ளது. பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பாகங்கள். நவீன மூடி அமைப்பு உள்ளது. உணவுக்கு ஏற்ற தரம். 10 வருட வாரன்டியுடன்  வருவது நல்ல விஷயம்.

செளபாக்யா

ஆரம்ப காலங்களில் சாதாரண க்ரைண்டர்களில் இருந்து, டில்டிங் கொண்டு வந்து குழவி தூக்கும் வேலையை மிக எளிதாக  செய்த பிராண்டு இது. இப்போது வணிகப் பயன்பாட்டுக்காக மிகப்பெரிய கிரைண்டர் முதல் டேபிள் டாப் வரை தயாரிப்பு நீள்கிறது. டில்டிங் வகை நீண்ட காலத்துக்கு உழைக்கிறது. நவீன வகைகளை விட ஆயுள் அதிகம். 10 - 15 வருடங்களுக்கு மேல்  ஓடிக்கொண்டிருக்கும் சாதா கிரைண்டர்கள் போல நவீன வகைகள் இல்லை என்பதுதான் மக்களுக்கு பொதுவான மனத்தாங்கலாக  இருக்கிறது. எத்தனை புது வகைகள் வந்தாலும் பலருக்கு பழைய மாடல் கிரைண்டர் மேல் இருக்கும் காதல் தீராது. இன்னும்  விற்பனை போட்டியில் இந்த மாடல்களும் நிற்கின்றன.

பட்டர்ஃப்ளை

இவர்களின் 3 கல் விளம்பரம் மிகப் பிரபலம். சிலர் 2 கல் வசதி, சிலரோ 3 கல் வசதி என்பார்கள். ஒவ்வொருவரின் தனிப்பட்ட  தேர்வைப் பொறுத்து அமைகிறது.   எவர்சில்வர் துறையில் கால் வைத்து பிறகு அடுப்பு, குக்கர், மிக்சி, கிரைண்டர் என்று  முன்னணியில் இருக்கின்றனர்.  படத்தில் உள்ள கிரைண்டர் விலை 4 ஆயிரத்துக்கு மேலே உள்ளது.  ஏ.பி.ஸ் பிளாஸ்டிக்கில்  செய்யப்பட்டது.  450 வாட்ஸ் திறன். 5  வருட வாரன்டி இருக்கிறது.

பிரெஸ்டீஜ்

குக்கர் துறையில் கோலோச்சிக்கொண்டு, அப்படியே சமையலறை உபகரணங்களும் தயாரித்துக்கொண்டு இருக்கின்றனர். படத்தில்  உள்ள வகையில் அப்படியே சாய்த்து மாவு கொட்டும் வசதி உள்ளது. தேங்காய் துருவும் வசதி நன்றாகவும் எளிதாகவும் உள்ளது. 5 வருட வாரன்டி. 2 லிட்டர் கொள்ளளவு.  இப்போது இந்த வகை மிகப்பிரபலமாக இருக்கிறது.  இதைத் தவிர பஜாஜ், ப்ரீத்தி, பிரிமியர் என்று பல பிராண்டுகள் களத்தில் உள்ளன. எந்த பிராண்டிலும் வராத சாதா கிரைண்டர்களும் (கோவை தயாரிப்புதான்) கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு பிராண்டிலும் நிறைய வகைகள் வருகின்றன. அந்த நேரத்தில் இருக்கும் விலையை, அமைப்பை பார்த்தே தேர்ந்து எடுக்க வேண்டி இருக்கிறது.இனி அரைச்ச மாவை அரைக்க  வேணாமே!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget