ஸ்மார்ட்டா ஷாப்பிங் செய்ய வேண்டுமா

ஷாப்பிங் இந்த வார்த்தையைக் காதில் கேட்டாலே நம் பெண்களுக்கு தோளில் இரண்டு இறக்கைகள் முளைத்து விடும். தான் சம்பாதித்த பணமாக  இருந்தாலும் தயங்காமல் செலவு செய்வார்கள். வண்ணங்களையும், புதிய வரவுகளையும் பார்க்கப்
பார்க்க அவ்வளவு ஆனந்தம் மனதில் பரவும். ஏதோ  இந்த உலகமே தனது கைக்குள் வந்து விட்டது மாதிரி உணருவார்கள். உடுத்திக் கொள்ள, அலங்காரம் செய்ய, சமையல் அறையில் புதுமை செய்ய  என்று சளைக்காமல் வாங்கிக் குவிப்பார்கள். குடும்பத் தலைவிகளின் கணவர்களுக்கோ ஷாப்பிங் என்ற வார்த்தையைக் கேட்ட உடன் வயிற்றில்  புளியைக் கரைக்க ஆரம்பித்து விடும்.

இவ்வளவு ஏன்...எகிறும் விலைவாசி....படி ஏறாத சம்பள உயர்வு...திடீர் செலவுகள் என கையைக் கடித்து தலையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு  வீட்டில் பட்ஜெட் பிரச்னை ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் இந்தப் பெண்களுக்கு எங்கிருந்து தான் பணம் கிடைக்குமோ. அப்போது பார்த்து இரண்டு புது  சேலையை டியூவுக்கு வாங்கியிருப்பார்கள். கடன் தானே என சொல்லிவிட்டு தனது அழகு மிளிர வலம் வருவார்கள்.

இவள் எந்தச் செலவில் கை  வைக்கப் போகிறாளோ என்ற பயம் மட்டும் பந்தாய் கணவனின் மனதில் உருளும். இது நேரடியாக அல்லாமல் மறைமுகமாக வெடித்து வீட்டில் வேறு  பிரச்னையைக் கிளப்பும். கசப்பை உருவாக்கி இனிய இல்லறத்துக்கு வேட்டு வைத்து விடும்.வீட்டில் சம்பாதிப்பது யாராக இருந்தாலும் சரி. ஷாப்பிங் செல்லும் முன் சில விஷயங்களை யோசித்தால் தேவையற்ற பொருட்கள் வீட்டில்  சேருவதைக் குறைக்கலாம். தவறான ஒரு பொருளைப் பயன்படுத்தி அதனால் ஏற்படும் உடல்நலக் குறைபாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம்.  

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை லபக் என பிடுங்கி வாயில் போட்டுக் கொள்ளும் ஷாப்பிங் பிசாசிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டியது  இன்று காலத்தின் கட்டாயம். நீங்கள் காரை எடுத்துக் கொண்டு கடை வீதிகளில் சுற்ற வேண்டியதில்லை. உங்கள் ஸ்மார்ட் போன் வழியாக ஷாப்பிங் ஆப்பில் நுழைந்து உங்கள் பேங்க் பாலன்சை தீர்த்துக் கட்டி விடும். ஷாப்பிங் செய்வதிலும் மூளையை  ஸ்மார்ட் மோடுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். 

அந்தப் பொருள் அவ்வளவு அத்தியாவசியத் தேவையா என்பது உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள  வேண்டிய முதல் கேள்வி..இப்படியே இந்த மாத பட்ஜெட்டில் இது சாத்தியமா? இதற்கு மாற்று உண்டா, வாங்கினால் எவ்வளவு நாளைக்கு  பயன்படுத்துவோம். ஏற்கனவே உள்ள பொருட்களை மாற்றாக பயன்படுத்த முடியுமா? என்று பல கேள்விகளைக் கேட்டு பர்ஸை காப்பாற்றிக்  கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஷாப்பிங் பிசாசு உங்களை கடனில் தள்ளும். 

ஆண்டாண்டுகளாய் சேமித்த பணம் கரையும். பட்ஜெட்டில் துண்டு விழுவதற்கு பதிலாக  பெட்ஷீட்டே விழும். இதிலிருந்து எப்படி மீள்வது எனத் தெரியாமல் மன உளைச்சலில் மாட்டிக் கொள்வீர்கள். வீட்டில் அன்பு மறைந்து சண்டை  பெருகும். இருக்கும் நிம்மதி காணாமல் போகும். இப்படியொரு ஷாப்பிங் தேவையா. தவிர்க்க முடியாதவர்கள் பர்ஸை வீட்டிலேயே வைத்து விட்டு  விண்டோ ஷாப்பிங் (பார்ப்பதோடு சரி, வாங்கக் கூடாது) செய்யுங்கள். மனதை அடக்க முடியாதவர்கள் அந்தப் பக்கமாக தலை வைத்துப்  பார்க்காதீர்கள். தேவையான பொருட்களுக்கு நிதி ஒதுக்கி ஸ்மார்ட்டாக செயல்படுங்கள். ஜாலியாக பறந்து திரியுங்கள். 
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget