நானும் போராளிதாங்க சஞ்சிதா

சமீபத்திய வரவுகளில், ஓரளவு நடிக்க தெரிந்தவர் என, பெயர் எடுத்தவர், சஞ்சிதா ஷெட்டி. சிறிய இடைவெளிக்கு பின், மீண்டும் பிசியாகிவிட்டார். இப்போது, இவரது கைகளில் ஆறு படங்கள்.
சமீபத்தில், இவர், போட்டோ ஷூட் எடுத்து, வெளியிட்ட படங்கள், ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களையும் கலக்கி விட்டது.
அவருடன் ஒரு சந்திப்பு:

சூது கவ்வும் படத்துக்கு பின், உங்களை ரொம்ப எதிர்பார்த்தோமே?

நிறைய கதைகள் கேட்டேன்; எனக்கு முழு திருப்தி ஏற்படவில்லை. இதனால், கொஞ்சம், டைம் எடுத்தது உண்மை. அதற்கு பலனாக இப்போது ஆறு படங்களில் நடிக்கிறேன். எல்லாமே, மாறுபட்ட கதையம்சம் உடையவை.

புதுமுகங்கள் வரவு அதிகமாகி விட்டதே?

சினிமாவில் திறமை மட்டும் தான் முக்கியம் என நினைக்கிறேன். ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்து விட்டால், யார் தடுத்தாலும், அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும்.

ஹீரோக்கள் சிபாரிசு என்பதெல்லாம்...

இதுவரை ஆறு படங்களில் நடித்திருக்கிறேன். இப்போது சில படங்களின் படிப்பிடிப்பும் நடக்கிறது. இவற்றில் ஒரு படம் கூட, ஹீரோவோ, மற்றவர்களோ எனக்கு சிபாரிசு செய்து கிடைத்தது அல்ல. வந்த வாய்ப்புகள் அனைத்துமே, என் திறமையால் கிடைத்தவை. இத்தனை நாட்களாக சும்மாதானே இருந்தேன். எனக்கு யாரும் சிபாரிசு செய்யலையே.

இப்போது, நடிகைகளுக்குள் நட்பு எப்படி இருக்கிறது?

ரொம்பவே நல்லா இருக்கு. லட்சுமி மேனன் எனக்கு நெருக்கமான தோழி. அவளோட படப்பிடிப்பு நடக்கிற இடத்துக்கு போயிருக்கேன். கீர்த்தி சுரேஷுடன், சினிமா தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்வேன்.

உங்களின் கனவு இயக்குனர் யார்?

ஒவ்வொரு இயக்குனருக்கும் தனி ஸ்டைல் உண்டு. ஹீரோயின்களை பொறுத்தவரை, வெற்றி பெறும் கதைகள் அமைவது முக்கியம். எனக்கு, ஷங்கர் சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது, நீண்டநாள் ஆசை.

ஹீரோயின்களில் உங்கள் ரோல் மாடல் யார்?

அனுஷ்கா மேடம். ஏன்னா, அவங்க எந்த ரோலில் நடித்தாலும் திறமையாக நடிப்பாங்க. திரையில், அவங்க நடிப்பை பார்க்கும்போது உண்மையா இருக்கும்.

கர்நாடகாவில் இருந்து வரும் நடிகையருக்கு, தமிழ் ரசிகர்கள் மனதில் ஒரு இடம் உண்டு; உங்களுக்கும் அப்படி ஒரு இடம் கிடைக்குமா?

நிச்சயமாக கிடைக்கும். என்னை கேட்டால், நான் ஒரு போராளி தான். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல், ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடுகிறேன். பெயர், புகழ் எல்லாம் அப்புறம் தான். முதலில் ரசிகர்கள் என்னை ஏற்று கொள்ள வேண்டும். நானே விழுந்து, நானே எழுகிறேன். சினிமாவில் எனக்கு காட்பாதர் யாரும் இல்லை.

சமையலறை பக்கம் போவதுண்டா?

எல்லா வகையான சமையலையும், விரும்பி சமைப்பேன். கிடைக்கிற நேரத்தை சரியாக பயன்படுத்துவேன். சில படங்களுக்கு, எனக்கு தேவையான, உடைகளை, நானே டிசைன் பண்ணிருக்கேன். சென்னையில், பாட்டு கற்றுக்கொள்ள ஏற்பாடு நடக்கிறது. தினம் யோகா செய்கிறேன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget