எமன் சினிமா விமர்சனம்

லைக்கா புரடக்ஷன்ஸ் - விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்க, ஜீவா சங்கர் எழுத்து, இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில், விஜய் ஆண்டனியின்
அதிரடி இசையிலும், நடிப்பிலும் வந்திருக்கும் திரைப்படம் தான் "எமன்".

அப்பா விஜய் ஆண்டனி, ஜாதி மற்றும் அரசியல் பழிக்கு பழியால் தான் சார்ந்திருக்கும் கட்சி சார்பில் எம்எல்ஏ., வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கும் சூழலில், தீர்த்து கட்டப்படுகிறார். சந்தர்ப்பவசத்தால் அவரது புத்திரர் விஜய் ஆண்டனி, புதிதாக அரசியலுக்கு வந்து நேர்மையுடனும், தைரியத்துடனும் செயல்படுகிறார். விஜய் ஆண்டனியின் வளர்ச்சியை அவருக்கு உதவுவது போல் தடுக்க நினைக்கிறார். நீண்டகாலமாக அரசியல் செய்து வரும் மம்பட்டியான் தியாகராஜன், நேரடியாக எதிர்க்காமல் கூடவே இருந்து கவிழ்க்க திட்டங்களைத் தீட்டும் தியாகராஜனின் சதிகளை விஜய் ஆண்டனி முறியடிக்கிறாரா? இல்லையா என்பதே "எமன்" படத்தின் கதையும், காட்சிப்படுத்தலும்.

அப்பாவாக அறிவுடைய நம்பியாக சில நிமிடங்களும், மகன் தமிழரசனாக படம் முழுக்கவும் இரண்டு "கெட்-அப்" புகளில் வரும் விஜய் ஆண்டனி, தனது, முந்தைய படங்களைக் காட்டிலும் நல்மெருகேற்றி நடித்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

"இந்த உயிர் பயம் காட்டறதுலாம் வேற எவன் கிட்டயாவது வச்சிக்க... எல்லாத்துக்கும் துணிந்து தான்டா உள்ள வந்திருக்கேன்.... எனும் போது சிலிர்க்க வைக்கிறார் விஜய் ஆண்டனி. அது மாதிரி அடுத்தடுத்த காட்சிகளிலும் தமிழ் அரசன் - விஜய் ஆண்டனியின் "எமன்" எனும் பட்டப்பெயர்க்காரணம் ரசனை.

நடிகை அஞ்சனாவாக அசத்தியிருக்கிறார் நாயகி மியா ஜார்ஜ். அப்பா அறிவுடை நம்பி விஜய்யின் மனைவி அகல்யாவாக வரும் சில்பா மஞ்சுநாத்தும் கச்சிதம்.

கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, கை மாற்றல்... என எல்லாம் செய்யும் அரசியல்வாதியாக, வில்லனாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் மம்பட்டியான் தியாகராஜன், அரசியல் டானாக அசத்தியிருக்கிறார். சில இடங்களில் எமனையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் இந்த எமகாதகன்! வாவ்!

ஜாதி அரசியல்வாதியாகவும், அமைச்சராகவும் தங்க பாண்டியாக வரும் அருள் டி.சங்கர், "தம்பி, உருவத்துல நான் நம்பியதானே பாக்கேன்..." என நன்றாகவே நடித்திருக்கிறார். இவரைப் போன்றே, தமிழரசனின் தாத்தாவாக வரும் சங்கிலி முருகன், மணிமாறன் - மாரிமுத்து, செல்வரத்தினம் - ஜெயக்குமார், அமைச்சரது பிஏ.தியாகு வாக - சார்லி, கோவிந்தன் - சுவாமிநாதன், அன்பழகன் - கிரண், சக்தியாக அர்ஜித் உள்ளிட்டோர் பாத்திரமறிந்து பளிச் சிட்டிருக்கின்றனர்.

செந்தில்ராஜின் படத்தொகுப்பு பாடாவதி தொகுப்பும் அல்ல... பக்ரி தொகுப்பும் அல்ல... என்பது ஆறுதல்.

ஜீவா சங்கரின் ஒளிப்பதிவு, ஆக்ஷன் படமென்றாலும் ஓவியப்பதிவு.

விஜய் ஆண்டனியின் இசையில், "மீலோடு மீலோ...", " நீ எம் மேல கை வச்சா காலி..." உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் மிரட்ட முயன்றிருக்கிறது.

ஜீவா சங்கரின் எழுத்து மற்றும் இயக்கத்தில, ஆரம்ப காட்சியில் சிறையில் இருக்கும் தமிழரசன் - விஜய் ஆண்டனி, "எந்த தப்பும் செய்யாமல்தான் உள்ள வந்து உட்கார்ந்திருக்கேன்...." என்பது லாஜிக்காக இடிக்கிறது. காமெடி - சுவாமிநாதனிடம், விபத்தை தான் ஏற்படுத்தியதாக கோர்ட்டில் ஒப்புக் கொள்வதாக சொல்லி., பணம் வாங்கி விட்டு தானே ஜெயிலுக்கு வந்திருக்கிறார். அப்படி இருக்கையில், "எந்த தப்பும் செய்யாது..." என்பது லாஜிக்காக இடிக்கிறது. மேலும், சாராய வியாபாரி விஜய் ஆண்டனி, சமூக மாற்றம் பற்றி காந்திஜியின் கருத்தை பேசுவது.... உள்ளிட்ட இது மாதிரி சில, பல லாஜிக் குறைகளை கவனத்தில் கொள்ளாது ரசிகன், "அரசியல்வாதிகளின் அடிப்படை தகுதியே இருக்கறவன்ட்ட பணத்தையும் இல்லாதவன் கிட்ட ஓட்டையும் வாங்கிக்கிறது தான் இருக்கறவன்கிட்ட வாங்குறவன், இல்லாதவனுக்கு எப்படி நல்லது பண்ணுவான்? சொல்லு ...." எனும் "பன்ச்" டயலாக்குகளை கண்டு கொண்டு எமனை கண்டு களித்தால் எமன் - எமகாதகனாகத் தெரிவான்!"
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget