கோடை விடுமுறையில் கையை கடித்த படங்கள்

2016ம் ஆண்டின் 5வது மாதமான மே மாதத்திற்குள் 90 படங்கள் வெளிவந்துள்ளன. இந்த ஜுன் மாதம் முடிவதற்குள்ளாகவே அரையாண்டு காலத்திற்குள் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 100 படங்களைக் கடந்துவிடும். கடந்த இரண்டு
ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடந்து மீண்டும் ஒரு சாதனையைப் படைக்கப் போகிறது.

எந்த அளவிற்கு படங்களின் எண்ணிக்கை வெளியாகிறதோ அதில் மூன்றில் ஒரு பங்கு கூட வெற்றிப் படங்கள் அமையாதது தான் வருத்தப்படக் கூடிய விஷயமாக இருக்கிறது. அந்த சதவிகிதத்தை ஏற்றினால் மட்டுமே இவ்வளவு படங்கள் வெளிவருவதற்கான அர்த்தமும் சரியாக இருக்கும்.

கடந்த மே மாதத்தில் 17 படங்கள் வெளியாகியுள்ளன. வழக்கம் போலவே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களும், எதிர்பாராமல் எந்தப் படமாவது வெற்றி பெறுமா என்ற படங்களும், தவறாமல் எப்படியும் வெளிவந்துவிடும் சில சிறிய படங்களும் இந்தப் பட்டியலில் உள்ளன.

மே மாதம் 6ம் தேதி சூர்யா நடித்து பல கோடி ரூபாய் செலவில் தயாரான '24' படமும், 'எடால், நான் யார், உன்னை முதல் பார்த்தேன்' ஆகிய படங்களும் வெளிவந்தன. '24' படம் வெளியீட்டிற்கு முன் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், படம் வெளிவந்த பிறகு அந்த எதிர்பார்ப்பு அளவிற்கு வெற்றி அமையவில்லை என்பதுதான் உண்மை. இருந்தாலும் படத்தை ஒரு பெரிய வெற்றி படம் போலவே தயாரிப்புத் தரப்பில் பிரகடனப்படுத்தினார்கள். அடுத்து வெளிவர உள்ள 'சிங்கம் 3' படத்தின் வியாபாரம் எந்த அளவிற்கும் பாதிகப்படக் கூடாது என்பதுதான் அதற்குக் காரணம். அன்றைய தினம் வெளியான மற்ற மூன்று படங்களும் இந்த ஆண்டுப் படங்களின் வரிசையில் இடம் பெற்றன.

மே 13ம் தேதி 'இணைய தலைமுறை, ஜம்புலிங்கம் 3டி, கோ 2, பென்சில், உன்னோடு கா' ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன. 'இணைய தலைமுறை' படத்தின் கதைக் கரு இந்தக் கால அரசியலுக்குத் தேவையான ஒன்று. ஆனால், அதை சொல்லிய விதத்தில் இயக்குனர் இன்னும் பல தலைமுறைகளைத் தாண்ட வேண்டும். 'பென்சில்' படத்தை கொரியன் படத்திலிருந்து அப்படியே காப்பியடித்துக் கொடுத்து, காணாமல் போய்விட்டார்கள். இனி, காப்பி படம் எடுப்பவர்களுக்கு 'பென்சில்' சிறந்த உதாரணமாக அமையட்டும். 'உன்னோடு கா, ஜம்புலிங்கம் 3டி' வழக்கம் போல படங்களின் லிஸ்ட்டில்தான் இடம் பெற்றன.

'கோ 2' படம் வெளியீட்டிற்கு முன் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். 'கோ' படத்தின் வெற்றியை மனதில் வைத்து, அந்தப் படம் போலவே இரண்டாம் பாகமும் பரபரப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், பாபி சிம்ஹா தனி ஹீரோவாக வெற்றி பெற இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டும் என அவருக்கு இந்தப் படம் உணர்த்தியிருக்கும். தேசிய விருது என்பது ஒரு அடையாளம்தான், அது கமர்ஷியல் சினிமாவுக்கு எந்தப் பலனையும் தராது என்பதை நன்றாகவே புரிந்து கொண்டிருப்பார்.

மே 20ம் தேதி 'ஸ்லம்டாக் கோடீஸ்வரன், கத சொல்லப் போறோம், மருது' ஆகிய படங்கள் வெளிவந்தன. முந்தைய 'கதகளி' படம் தந்த தோல்வியை 'மருது' படத்தின் சுமாரான வெற்றி விஷாலின் மார்க்கெட்டுக்கு கொஞ்சம் சரி செய்திருக்கும். சாதிய அடையாளங்கள், பழக்கமான நகர, கிராமத்துப் பின்னணியை விட்டு இயக்குனர் முத்தையா விலக வேண்டும் என்பதை இந்தப் படம் அவருக்கு உணர்த்தியிருக்கும். கொலப்புள்ளி லீலா நன்றாக நடித்திருந்தாலும் அவருடைய மலையாள முகம் 'மருது'க்கு எடுபடவில்லை. மற்ற இரண்டும் படங்களும் 2016 படங்களின் எண்ணிக்கையை கூட்டிவிட்டது.

மே 27ம் தேதி 'ஜெனிஃபர் கருப்பையா, சுட்ட பழம் சுடாத பழம், மீரா ஜாக்கிரதை, உறியடி, இது நம்ம ஆளு' ஆகிய படங்கள் வெளிவந்தன. 'உறியடி' படம் பார்த்தவர்கள் பலரும் படத்தைப் பாராட்டினார்கள். ஆனால், படம் வெளியாவதற்கு முன்பே அந்தப் படத்தை ரசிகர்களிடமும், மக்களிடமும் தீவிரமாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் தயாரிப்பாளரும், இயக்குனரும் தவறிவிட்டார்கள். சில நல்ல படங்கள் மக்களிடம் முழுமையாகப் போய்ச் சேராமல் போய்விடுவது யாருடைய தவறு.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக சிம்புவின் ரசிகர்கள் மட்டுமே ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த படம் 'இது நம்ம ஆளு'. எப்படியோ பல போராட்டங்களுக்குப் பிறகு வந்த படம். இன்னும் கொஞ்ச நாள் கழித்து இந்தப் படம் வெளிவராமல் இருந்திருந்தால் நயன்தாராவுக்கும், பாண்டிராஜுக்கும் நன்றாக இருந்திருக்கும் என்ற பேச்சு கண்டிப்பாக வரும்.

மே மாதம் முழுவதுமே கோடை விடுமுறை மாதம்... இந்த மாதத்தை நல்ல படங்களாகக் கொடுத்து வசூலை அள்ளியிருக்கலாம். அதை மே மாதம் வெளியான படங்கள் செய்யத் தவறின. ஏப்ரலில் வெளிவந்த 'தெறி' படம் நேற்று 50வது நாளைக் கடந்ததற்கு முக்கியக் காரணமாக மே மாத படங்கள் அமைந்துவிட்டன.

இந்த மாதத்திலாவது வரும் படங்கள் ரசிகர்களுக்கு ரசக்க வைக்கும் மாதமாக அமைய வைக்கட்டும்...

மே மாதம் வெளியான திரைப்படங்கள்



மே 6

24

எடால்

நான் யார்

உன்னை முதல் பார்த்தேன்

மே 13

இணைய தலைமுறை

ஜம்புலிங்கம் 3டி

கோ 2

பென்சில்

உன்னோடு கா

மே 20

ஸ்லம்டாக் கோடீஸ்வரன்

கத சொல்லப் போறோம்

மருது

மே 27

இது நம்ம ஆளு

ஜெனிஃபர் கருப்பையா

மீரா ஜாக்கிரதை

சுட்ட பழம் சுடாத பழம்

உறியடி
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget