மொபைல் சந்தையில் முத்திரை ஸியாமி ஸ்மார்ட்

சீனாவின் மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஸியாமி (Xiaomi), ஸ்மார்ட் போன் விற்பனையில், உலக அளவில் மூன்றாவது இடத்தைப்
பிடித்துள்ளது. சீனாவில் இதன் ஸ்மார்ட் போன்களுக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பு இதற்குக் காரணமாய் அமைந்துள்ளது. பன்னாட்டளவில் இதன் சந்தைப் பங்கு 2.1 சதவீதத்திலிருந்து 5.3% ஆக உயர்ந்துள்ளது. 

ஸியாமி நிறுவன ஸ்மார்ட்போன்கள், சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளன. இந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தான், தன் போன்களை விற்பனைக்குக் கொண்டு வந்தது. ஆனால், குறைவான விலையில், அதிக வசதிகளுடன் ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் ஸ்மார்ட் போன்களைத் தந்து முன்னுக்கு வந்துவிட்டது. ஐ.டி.சி. தரும் தகவல்களின்படி, இரண்டாவது இடத்தில் உள்ள ஆப்பிள் நிறுவன போன்களைக் காட்டிலும் இது மிகவும் பின் தங்கியே உள்ளது. இதன் விற்பனைப் பங்கு 5.3% ஆகும். ஆப்பிள் 12% இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால், ஸியாமி ஸ்மார்ட் போன்களின் விற்பனை ஆண்டு தோறும் 211% விற்பனை வளர்ச்சியைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்ற மூன்று மாதங்களில், ஸியாமியின் Mi 4 ஸ்மார்ட் போன் அதிக அளவில் விற்பனையானது. நவீன வசதிகள் அனைத்தையும் தரும் இந்த ஸ்மார்ட் போனின் விலை 326 அமெரிக்க டாலர் அளவிலேயே உள்ளது. 

இந்தியாவில் இணைய தள வர்த்தகம் மூலம், ஸியாமியின் போன்கள் பெரும் அளவில் விற்பனையாகின்றன. விரைவில் இங்கு வர இருக்கும் Mi 4 ஸ்மார்ட் போன் விலை ரூ.19,000 முதல் ரூ.21,000 வரை என்ற அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் பல நாடுகளில், ஸியாமி தன் மொபைல் போன்களை விற்பனை செய்திட தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனால், அதிக எண்ணிக்கையில் மொபைல் போன்களை விற்பனை செய்திடும் நிறுவனமாக விரைவில் இடம் பெறும் என ஐ.டி.சி. அமைப்பு அறிவித்துள்ளது. 

ஏற்கனவே, ஆப்பிள் நிறுவனத்தின் பலத்த போட்டியைச் சந்தித்து வரும் சாம்சங், தற்போது ஸியாமியின் போட்டியையும் சந்திக்க வேண்டியுள்ளது. முந்தைய ஆண்டில் 35 சதவீதப் பங்கினைக் கொண்டிருந்த சாம்சங், சென்ற காலாண்டில் 24.7 சதவீதமே கொள்ள முடிந்தது. இதனுடைய லாபமும் 74% குறைந்துள்ளது. 

தன் முந்தைய மாடல் போன்களின் விலை குறைப்பு மற்றும் போட்டி நிறுவனங்களால் விற்பனை குறைந்ததும் இதற்குக் காரணங்களாகும். ஆனால், இதே காலத்தில், ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து தன் விற்பனையை அதிகரித்து வருகிறது. முந்தைய ஆண்டைக் காட்டிலும், சென்ற காலாண்டில், இதன் விற்பனை 16% அதிகரித்துள்ளது. ஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ் போன்கள் அறிமுகம் ஆனாலும், முந்தைய மாடல் போன்களான 5எஸ் மற்றும் 5சி ஆகியவையே அதிகம் விற்பனை செய்யப்பட்டன. 

மொத்தத்தில், பன்னாட்டளவில், 32.7 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 25.2% கூடுதல் என ஐ.டி.சி. அறிவித்துள்ளது. வளரும் நாடுகளில், ஸ்மார்ட் போன் விற்பனை 30% அதிகரித்து வருகிறது. வளர்ந்த நாடுகளில் இது ஒற்றை இலக்கத்திலேயே இருந்து வருகிறது.

மற்ற நிறுவனங்கள் மேற்கொண்ட விற்பனை பின்வருமாறு:

லெனோவா நிறுவனத்தின் A369i and A316 மாடல் போன்கள் அதிக விற்பனையை மேற்கொண்டன. 4ஜி மாடல் போன்கள் அமெரிக்காவில் குறைந்த விலையில் அறிமுகமாயின. இதனால், இதன் விற்பனை முந்தைய ஆண்டைக் காட்டிலும் அதிகமாய் இருந்தது.

எல்.ஜி. சென்ற காலாண்டில், இதுவரை இல்லாத அளவில், 1.5 கோடி மொபைல் போன்களை விற்பனை செய்தது. இந்நிறுவனத்தின் எப் மற்றும் எல் வரிசை போன்கள், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் அதிகம் விற்பனையாயின. உயர்நிலை போன்களில் ஜி3 மாடலை வெளியிட்டு, அந்த வரிசையிலும் தன் இடத்தை நிலைப்படுத்தியது.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget