புதிய பாதையில் உலக வைய விரிவலை

வர இருக்கும் 2015 ஆம் ஆண்டு முதல், “எங்கும் எதிலும் இணையம்” என்ற அடிப்படையில், இணையம் ஒரு புத்துணர்வுடன் வேகமாக வளரும்
என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 2014 ஆம் ஆண்டு மார்ச் 11ல், உலக வைய விரிவலை (World Wide Web) தன் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழாவினைக் கொண்டாடியது. நம் வாழ்க்கை நடைமுறையை, இணையம் எப்படி எல்லாம் மாற்றி உள்ளது என்று சிந்தித்துப் பார்க்க, அந்நாள் ஒரு நல்ல தருணமாக அமைந்தது. அத்துடன், இனி வருங்காலத்தில் இணையம் எப்படி வளரும் என்றும் எண்ணிப் பார்க்க ஒரு தொடக்கமாகவும் அமைந்தது. “எங்கும் எதிலும் இணையம்” (Internet of Things) என்ற கருத்தும் கட்டமைப்பும் இப்போது பரவி வருகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் டிஜிட்டல் மயமாகி, இணையம் வழியே அனைத்தும் ஒன்றை ஒன்று தொடர்பு கொண்டு இயங்குவதையே இப்படி குறிப்பிடுகிறோம்.
எவ்வளவு வேகமாக நாம் இணையத்துடன் இணைந்து இயங்கி வருகிறோம். 1995 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் கூட இணையம் குறித்து அறிந்தவர்கள் 42%க்கும் குறைவாகவே இருந்தனர். பலர் இது பற்றி அறியாதவர்களாகவே வாழ்ந்தனர். இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறையில் இயங்கியவர்கள் மட்டுமே இணையத்தை அறிந்திருந்தனர். 

இந்தச் சூழ்நிலையை, தற்போது பன்னாட்டளவிலான தகவல் தொடர்பு மையம் (International Telecommunication Union) அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, எந்த அளவிற்கு நாம் வேகமாக, இப்பாதையில் பயணம் செய்துள்ளோம் என்று அறியலாம். இந்த செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும் 2014 ஆம் ஆண்டின் முடிவில், மூன்று கோடி பேர் உலக அளவில் இணையத்தில் இயங்குவார்கள் என்று அந்த மையம் அறிவித்துள்ளது. 

இனி, வரும் ஆண்டுகளில், இணையம் புத்துணர்ச்சியுடன் வேறு ஒரு முழுமயான பாதையில் நம்மை இணைக்க, வாழ்விக்க இருக்கிறது. அது “எங்கும் எதிலும் இணையம்” என்பதே. ”எங்கும் எதிலும் இணையம்” என்பது மக்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகள், தகவல்கள், பொருட்கள் ஆகிய அனைத்தையும் இணையம் வழி இணைப்பதே ஆகும். மக்கள், நிறுவனங்கள் மற்றும் அரசு நிர்வாகம் ஆகிய அனைத்தும், உலக அளவில் இணையச் செயல்பாட்டினை, இந்த அடிப்படையில் அமைத்து வருகின்றன. திறமையுடன் கூடிய வாழ்க்கை ஒன்றை வழங்க, அனைத்தும் டிஜிட்டல் மயமாகி உள்ளது. 

இந்தியாவில், அதன் ஜனத்தொகையில் 81% பேர், மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 10% பேர் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துகின்றனர். வரும் மூன்று ஆண்டுகளில், ஒவ்வொரு மாதத்திலும் இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்குவோர் எண்ணிக்கை 5 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 80 லட்சம் சாதனங்களுக்கு மேல், நெட்வொர்க்கில் இணையும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. 

இந்த நெட்வொர்க்கில், கம்ப்யூட்டர், டேப்ளட் பி.சி.க்கள் மற்றும் மொபைல் போன்களுக்கும் மேலாகப் பல சாதனங்கள் இணைக்கப்படும். தெருவிளக்குகள், சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்துமிடங்கள், பெரிய விளக்குகள், சிறிய வர்த்தக மையங்கள், விடுதிகள், உணவு நிலையங்கள் என அனைத்தும் சென்சார் வழி உணரப்படும். இணையத்தில் இவற்றின் இயக்கம் அறிந்து அனைவரும் இவற்றை அணுகும் வழிகள் கிடைக்கும். 
அண்மையில் உரையாற்றுகையில், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், இந்த 21 ஆம் நூற்றாண்டு, இனி நகரங்களின் நூற்றாண்டாக இருக்கும் என்று கூறினார். மற்ற நாடுகளில் இந்த மாற்றம் ஏற்படப் போகிறதோ இல்லையோ, இந்தியாவில் இது ஏற்படுவது உறுதியாகியுள்ளது. ஐ.நா. எடுத்த கணக்கெடுப்பின்படி, இந்தியாவில், 2050 ஆம் ஆண்டில், 40.4 கோடி பேர் புதியதாக நகரங்களில் வாழத் தொடங்குவார்கள். அதே நேரத்தில், கிராமப் புறங்களில், 85.7 கோடி பேர் வாழ்வார்கள். உலக அளவில் கிராமப் புறங்களில் வாழும் மக்கள் எண்ணிக்கையில் முதலிடம் கொண்டதாக இந்தியா அமையும்.

இதனால் தான், நம் அரசு நகரங்களை மட்டுமின்றி, கிராமப்புறங்களையும் முன்னேற்ற வழிகளில் மாற்ற திட்டமிடுகிறது. அந்த வகையில் ”டிஜிட்டல் இந்தியா” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கிராமப்புறங்களில் ப்ராட்பேண்ட் இணைப்பு திட்டம், உலகத்தை எப்போதும் இணைக்கும் தொலைபேசி கட்டமைப்பு, பொதுமக்களுக்கான இணைய இணைப்பு பொது மையங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழக வளாகங்கள் அனைத்தும் வை பி இணைப்பில் கொண்டு வருதல், அரசு நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கல், அரசு வழங்கும் பொதுமக்கள் சேவைகளை டிஜிட்டல் வழி இயக்குதல் மற்றும் வேலை வாய்ப்பினைப் பெருக்குதல் எனப் பலமுனை திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இனி எதிர்காலத்தில் நகரங்களுக்கிடையே போட்டி இருக்கும். குடிமக்கள், குறிப்பாக இளைஞர்கள் பொருளாதார அடிப்படையில், சமூகம் மற்றும் சுற்றுப் புறச் சூழ்நிலை சிறப்பாக அமைந்துள்ள நகரங்களில் குடியேறுவதையே விரும்புவார்கள். 

”ஸ்மார்ட் சிட்டீஸ்” என்ற பெயரில் தற்போது நகரங்கள் முழுமையான டிஜிட்டல் மயமாக்குதலுக்கு ஆளாகி வருகின்றன. முதல் கட்டமாக, அரசு குறிப்பிட்ட நகரங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை டிஜிட்டல் மயமாக்கும் பணியில் இறங்கியுள்ளது. ஐ.எச்.எஸ். டெக்னாலஜி நிறுவனம் அறிவித்துள்ள ஆய்வின்படி, இன்னும் 11 ஆண்டுகளில், உலக அளவில், முழுமையான டிஜிட்டல் நகரங்களின் எண்ணிக்கை 88 ஆக இருக்கும். தற்போது அந்த வகையில் 21 மட்டுமே இருக்கின்றன. இந்த வளர்ச்சி தொடர்ந்து அசுர வேகத்தில் நடைபெறும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

2013 ஆம் ஆண்டில், CII & Cisco ஆகிய நிறுவனங்கள் இணைந்து, இந்தியாவில் டிஜிட்டல் நகரங்களை உருவாக்கும் முயற்சிகளுக்கான அறிக்கை ஒன்றை மிகவும் விரிவாகத் தயாரித்து வழங்கியது. 'Smart City in Indian Context' என்ற இந்த அறிக்கையில், இந்திய நகர கட்டமைப்பு இனி மிகச் சிறப்பாக மாற்றப்பட்டு இயங்க வேண்டும் எனவும், அதற்கு ஐ.சி.டி. அமைப்பினை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவித்தது. அரசும் இதனை ஏற்றுக் கொண்டது. எப்படி நம் வாழ்க்கைக்கு தண்ணீர், சமையல் எரிவாயு மற்றும் மின்சாரம் ஆகிய மூன்றும் அடிப்படைத் தேவைகளோ, அது போல, தொழில் நுட்ப வளர்ச்சியும் பயன்பாடும் ஓர் அடிப்படைத் தேவை என்பதனை ஏற்றுக் கொண்டது. தேசிய நெடுஞ்சாலைகள் எப்படி நம் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான அடிப்படையை வழங்குகின்றனவோ, அதே போல, ”இணைய நெடுஞ்சாலைகளும் (broadband highways)” நமக்கு வளர்ச்சிக்கான அடிப்படையைத் தரும் என்று உணர்ந்துள்ளது அரசு. 

ஆனால், நகரங்கள் தற்போது பொருளாதார சிக்கலில் தவிக்கின்றன. செலவினங்கள் அதிகரித்து வருகின்றன; வருமானம் தரக்கூடிய வளங்கள் குறைந்து வருகின்றன. உலக அளவில் இது எங்கும் எதிர்கொள்ளும் பிரச்னைகளாக இருந்து வருகின்றன. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதர்களுக்கான குடியிருப்பு குறித்து ஆய்வு செய்திடும் அமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய தொழில் நுட்பங்களின் அடிப்படையில் அமைக்கப்படும் கட்டமைப்புகள், அனைவரும் அறியக்கூடிய தகவல்கள், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் ஆகியவை இணைந்தால், நாம் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க முடியும். வாகனங்கள் நிறுத்துமிட சிக்கலைத் தீர்க்க இயலும். சூழ்நிலை மாசுபடுவதை நிறுத்த முடியும். குற்றங்களைத் தடுக்க இயலும். நகரங்களில் வசிக்கும் குடிமக்களுக்கும், வந்து செல்வோருக்கும் வாழ்க்கை நடைமுறைகளுக்கான செலவினைக் குறைக்க முடியும். 

எடுத்துக் காட்டாக, மக்கின்சே ஆய்வு அறிக்கைபடி, தெருவிளக்குகளுக்கு நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின் சக்தியில், 1.5% செலவிடப்படுகிறது. இவற்றை நெட்வொர்க் இணைப்பில் கொண்டு வந்தால், 40% மின் சக்தியை மிச்சப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகத் திறமையான முறையில், தெருவிளக்குகளைப் பயன்படுத்தினால், 40% குற்றங்கள் குறையும் என்றும் அறியப்பட்டுள்ளது. 

இதே மக்கின்சே அறிக்கையில், இந்தியாவில் 2010 முதல் 2020 வரை ஒவ்வொரு ஆண்டும், 70 கோடி முதல் 90 கோடி சதுர மீட்டர் பரப்பளவில், வீடுகள் மற்றும் வர்த்தக வளாகங்கள் அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகங்கள் திறன் கூடிய சென்சார்களுடன் அமைக்கப்பட்டு நெட்வொர்க் மூலம் நிர்வகிக்கப்பட்டால், மின் சக்தியை நாம் பெரிய அளவில் மிச்சப்படுத்தி வேறு பணிகளுக்குப் பயன்படுத்தலாம்.
சாலைப் போக்குவரத்து நெருக்கடி காரணமாக, ஓர் ஆண்டில், உலக அளவில் நேரம் மற்றும் எரிபொருள் வகையில், 1000 கோடி டாலர் அளவில் வீணடிக்கப்படுகிறது. வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் தேடும் வாகன ஓட்டிகளால், நகரங்களில் மேலும் 30% சாலை நெருக்கடி ஏற்படுகிறது. இதில் சுற்றுப்புறச் சூழ்நிலை மாசு படுவதும், பாதிப்பும் அதிகமாகிறது. நெட்வொர்க் மூலம் சாலைகள் இணைக்கப்படுகையில், ஒவ்வொரு காருக்கும் அதன் அருகாமையில் எங்கு நிறுத்தும் இடம் இருக்கிறது என்றும், அந்த இடத்திற்குச் செல்லும் வழியும் காட்டப்படும். 

சிஸ்கோ நிறுவனத்தின் அறிக்கையில், டிஜிட்டல் மயமாக்குவதில், மிக முக்கியமான தகவல் ஒன்றையும் தந்துள்ளது. ஒரு நாட்டின் டிஜிட்டல் மயமாக்கம், முக்கிய ஐந்து விஷயங்களைப் பொருத்துள்ளது. அவை: 1. எதிர்காலத்தை நன்கு கணித்து செயலாற்றக் கூடிய அரசியல், நிர்வாகத் தலைவர்கள், உலக அளவிலான, அனைவரும் தெரிந்து கொண்டு பயன்படுத்தக் கூடிய வாழ்க்கைத் தர நிர்ணயங்கள், திறன் சார்ந்த விதிமுறைகள், பொதுமக்களும் அரசும் இணைந்து செயல்படுதல் மற்றும் புதிய வாழ்க்கைச் சூழ்நிலை உருவாக்கம்.

சென்ற 2014 அக்டோபரில், இந்திய அரசின் மின்னியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையால் ”எங்கும் எதிலும் இணையம்” என்பதற்கான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்தியாவிற்கான Internet of Things (IoT) கொள்கை வரைவு என இது அழைக்கப்பட்டது. இந்த தொழில் பிரிவில், 2020 ஆம் ஆண்டுக்குள் 1,500 கோடி டாலர் மதிப்பிலான தகவல் தொழில் நுட்ப பிரிவு தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதற்கான அறிக்கையாக இது அமைந்துள்ளது. 

இன்றைக்கு 20 கோடி சாதனங்கள் இந்தியாவில் இணைய இணைப்பில் உள்ளன. இதனை வரும் 2020 ஆம் ஆண்டில், 270 கோடியாக உயர்த்த இந்த திட்டத்தினை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. தற்போது இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில், சாப்ட்வேர் புரோகிராம் அமைப்பாளர்கள் உள்ளனர். 2017 ஆம் ஆண்டிற்குள்ளாக, இந்த எண்ணிக்கை 30 லட்சமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

முடியப் போகும் 2014 ஆம் ஆண்டு, ”எங்கும் எதிலும் இணையம்” என்பதற்கான தொடக்கத்தினை மிக அருமையாக மேற்கொண்டு செயல்படத் தொடங்கியுள்ளது. இதன் இயக்கம் வேகம் பிடித்து, வளர்ந்து, இந்தியாவை உலக அளவில் முன்னிறுத்தும் என வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம். அப்போது நம் இந்தியத் தெருக்கள் பாதுகாப்பானதாக இருக்கும். வீடுகள் திறன் செறிந்த டிஜிட்டல் இயக்க உறைவிடங்களாக மாறும். மக்கள் மேலும் நல்ல நலத்துடன் பல்லாண்டுகள் வாழ்வார்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget