சீரியல் நடிகை துர்கா சிறப்பு பேட்டி

டிவி சீரியல்களில் ஒரு நாளைக்கு 10, 12 சீன்கள்கூட எடுக்கிறார்கள். சில சமயங்களில் சாப்பிடக்கூட நேரம் இருக்காது. அந்த வகையில்
நாஙகளெல்லாம் ஒவ்வொரு நாளும் கசக்கிப்பிழியப்படுகிறோம் என்கிறார் டிவி நடிகை துர்கா.

பெரும்பாலும் அழுகாச்சி கேரக்டர்களாக நடிப்பது ஏன்?

அழுகாச்சி கேரக்டர்களாக நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவதில்லை. எனது தோற்றம், முக அமைப்பு எல்லாமே ரொம்ப மென்மையானதாக இருப்பதால் எனக்கு அந்த மாதிரியான கேரக்டர்களே தருகிறார்கள். மேலும், சீரியல்களைப் பொறுத்தவரை ரப் அண்ட் டப்பாக நடிக்கும் வேடங்களில் நடிப்பவர்களை திட்டுவார்கள். ஆனால் என்னைப்போன்று சாப்ட்டான வேடங்களில் நடிக்கும் நடிகைகளை தங்களில் ஒருத்தியாக கருதுவார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் சீரியல் பார்க்கும் பெண்கள் எல்லாருமே என் பக்கம்தான் இருக்கிறார்கள்.

இருப்பினும் உங்களுக்கு தொடர்ந்து ஒரேமாதிரியான நடிப்பது போரடிக்கவில்லையா?

சாப்ட்டான வேடம் என்றாலும் ஒவ்வொரு சீரியல்களிலும் ஒவ்வொரு மாதிரியான வேடங்களில்தான் நடிக்கிறேன். அதோடு, நான் நடிக்கும் கேரக்டர்கள் எல்லாமே கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். இப்படி மாறுபட்ட பிரச்சினைகளை உள்ளடக்கிய வேடங்களில் நடிப்பதால் எனக்கு ஒவ்வொரு சீரியல்களிலுமே ஒவ்வொரு மாதிரியான அனுபவம் கிடைக்கிறது. நேயர்களும் எனது நடிப்பை வெகுவாக ரசிக்கிறார்கள். ஆனபோதும், இப்போது நான் நடித்து வரும் சொந்தபந்தம் தொடரில் நான் நடித்து வரும் செளந்தர்யா என்ற கேரக்டர் இதுவரை மென்மையானதாக இருந்தபோதும், இனிமேல் வில்லியாக மாறுகிறது.

அப்படி வில்லியாக மாறும்போது எனக்கு தீங்கு விளைவித்தவர்களை நான் பழிவாங்குவதை நேயர்கள் வரவேற்று கைதட்டுவார்கள். காரணம் அந்த அளவுக்கு நான் இதுவரை கொடுமைகளை அனுபவித்திருக்கிறேன். அதனால் இனி வரும் எபிசோடுகளில் எனது கையே ஓங்கியிருக்கும்.

உங்களது மென்மையான முகம் வில்லி அவதாரத்துக்கு பொருந்துமா?

பூ ஒன்று புயலானது எப்படி என்பது உங்களுக்குத் தெரியாதா? சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும்தான் நம்மை மாற்றும். அந்த வகையில், கேரக்டர் நெகடீவாக மாறும்போது அதற்கேற்ற பர்பார்மென்ஸை கொடுத்தால் நமமுடைய கெட்டப்பும் டோட்டலாக மாறி விடும். அந்த மாதிரி ஏற்கனவே சில சீரியல்களில் நான் நடித்திருக்கிறேன். அதனால், என்னால் கதைக்கேற்ப எப்படி வேண்டுமானாலும் மாறி நடிக்க முடியும்.

சீரியல் நடிகைகளில் எந்த நடிகையின் நடிப்பு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?

என்னை அதிகமாக கவர்ந்த நடிகை என்றால் அது ரம்யா கிருஷ்ணன்தான். சீரியல்களை விட சினிமாவில் அவரது நடிப்பை ரொம்ப ரசிப்பேன். குறிப்பாக, ரஜினியுடன் அவர் நடித்திருந்த படையப்பா படத்தில் பின்னி எடுத்திருப்பார். அதற்கு முன்பு அவர் நடித்திருந்த படங்களை பார்த்தால், ரம்யாகிருஷ்ணனா இது என்று ஆச்சர்யப்படுகிற அளவுக்கு நடித்திருந்தார்.

மற்றபடி சீரியல்களில் ராதிகா மேடம் ரொம்ப பிடிக்கும். எத்தனை வெயிட்டான கதாபாத்திரங்களையும் சுமக்கக்கூடிய நல்ல ஆர்ட்டிஸ்ட். அவரது நடிப்பு ரொம்ப இயல்பாக இருக்கும். இந்தமாதிரி சீனியர்களிடமிருந்தும் நான் நடிப்பு கற்றுக்கொள்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

சீரியல்கள் பார்க்க நேரம் ஒதுக்குவதுண்டா?

ஒரே நேரத்தில் முந்தானை முடிச்சு, சொந்த பந்தம் என இரண்டு மெகா தொடர்களில் நடிப்பதால் நடிப்பதற்கே நேரம் சரியாக உள்ளது. அதனால் நான் நடித்த சீரியல்களையே என்னால் பார்க்க முடிவதில்லை. இருப்பினும், எனது வீட்டில் இருப்பவர்கள் பார்த்து தங்களது கருத்தை சொல்வார்கள். அதேபோல் என் அம்மா நிறைய சீரியல்களைப்பார்ப்பதால், ஒவ்வொரு தொடர்களைப்பற்றியும் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்வேன்.

மேலும், சில சமயங்களில் நேரம் கிடைத்தால் தமிழ் மட்டுமின்றி இந்தி சீரியல்களையும் பார்ப்பேன். அப்படி நான் பார்த்ததில் தமிழுக்கு டப்பாகியுள்ள சில இந்தி சீரியல்கள் பிரமாதமாகவும், பிரமாண்டமாகவும் இருப்பதைப்பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.

அப்படியென்றால் இந்தி ரீமேக் தொடர்களில் நடிப்பீர்களா?

ஒரு ஆர்ட்டிஸ்டா எல்லா விதமான கதைகளிலும் நடிக்க ஆசை உள்ளது. அதிலும் அவர்களின் கதை, காட்சி அமைப்புகள் நம்மளை விட வித்தியாசமாககூட உள்ளது. முக்கியமாக ஒரே மாதிரியாக இல்லாமல் குடும்ப பிரச்சினை மட்டுமின்றி, கல்லூரி போன்ற ஜாலியான கதைகளிலும் வருகிறது. அதனால், அந்த மாதிரி தொடர்களில் சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். அதேசமயம், இந்தி தொடர்களில் சினிமாக்களில் காட்சிகள் வருவது போன்று ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகள் வைக்கிறார்கள். ஆனால் நான் அந்த மாதிரியான காட்சிகளில நடிக்க மாட்டேன். அப்படி நடிக்க பிடிக்காமல்தான் சினிமாவில் நடிப்பதைகூட நான் தவிர்த்து வருகிறேன்.

சீரியல்களில் அதிக வேலைப்பளு இருப்பதாக கூறப்படுகிறதே?

உண்மைதான், ஒரே நாளில் 10,12 சீன்கள்கூட எடுக்கிறார்கள். இதனால் காலையில் ஸ்பாட்டுக்கு செல்லும் நாங்கள் மாலை வீடு திரும்பும் வரை துளியும் இடைவேளை இல்லாமல் நடிக்கிறோம். சில சமயங்களில் மதியம் சாப்பிடகூட நேரம் இருக்காது. அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு ஓடுவோம். அந்த வகையில், டிவி சீரியல்களில் நடிப்பவர்களை கசக்கிப்பிழிகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார் துர்கா.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget