ரஜினிகாந்தின் அடுத்த படம்

ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இரண்டு வாரங்களுக்கு முன் வெளிவந்த 'லிங்கா' திரைப்படம் வெளியான ஒரு சில நாட்கள் கழித்து,
படம் வாங்கிய வினியோகஸ்தர்கள் அவர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி பிரச்சனைகளைக் கிளப்பினர். படம் பற்றிய பல தாறுமாறான செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து படத்தை வாங்கி வெளியிட்ட வேந்தர் மூவீஸ் நிறுவனம் படம் பற்றி அவதூறு தகவல்களைப் பரப்புவோர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அறிவித்தனர். இருந்தாலும் நேற்று வரை வினியோகஸ்தர்களைப் பொறுத்திருந்துமாறு கேட்டுக் கொண்டதாகச் சொல்லப்பட்டது. ஆனாலும், அரையாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை ஆரம்பமான ஐந்து நாட்களிலும் 'லிங்கா' படத்தின் வசூல் ஏறவேயில்லையாம். ரஜினிகாந்தை சிலர் சந்திக்க முயன்று அது பின்னர் தள்ளிப் போடப்பட்டது. நேற்று இந்த விவகாரத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள். இயக்குனர் பாலசந்தரின் மரணத்தால் நேற்று இந்தப் பிரச்சனை பற்றி யாரும் பேசவில்லை.

இதனிடையே, இன்று புதிதாக நான்கு படங்கள் திரைக்கு வருவதையடுத்து பல தியேட்டர்களில் 'லிங்கா' படத்தைத் தூக்கி விட்டு, இந்தப் புதுப்படங்களுக்கு தியேட்டர்களைக் கொடுத்து விட்டதாகத் தெரிகிறது. வினியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் சராசரியாக 50 சதவீத அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில நாட்களில் மீண்டும் 'லிங்கா' வசூல் பிரச்சனை எழுப்பப்படலாம். அதற்குள் ரஜினிகாந்த் அவருடைய புதுப்படம் பற்றிய அறிவிப்பையோ, அல்லது வினியோகஸ்தர்களைச் சந்திக்க நேர்ந்தால், அதன் பிறகோ அந்த அறிவிப்பை அவர் வெளியிடலாம் எனச் சொல்கிறார்கள். தன்னுடைய கடைசி இரண்டு படங்களான 'கோச்சடையான், லிங்கா' ஆகிய படங்கள் ரசிகர்களுக்கும், வாங்கி வெளியிட்டு, திரையிட்டவர்களுக்கும் லாபம் இல்லையென்று ரஜினிகாந்த் முடிவுக்கு வந்தால் கடந்த காலம் போலவே அவர் அந்த நஷ்டத்தை பெரிய மனது வைத்து கண்டிப்பாகத் தீர்த்து வைப்பார் என சம்பந்தப்பட்டவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அநேகமாக, பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்களைச் சமாதானப்படுத்த அவர்களுக்காகவே ரஜினிகாந்த் அடுத்து விரைவில் புதுப்படத்தில் நடிப்பார் என்றும் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு முறையைக் கொண்டு வந்ததே ரஜினிகாந்த்தான், எனவே அவர் அதை நிச்சயம் செய்வார், அடுத்த படத்தில் விட்டதையும் மீறி பிடித்து விடலாம் என பெரும்பாலனோர் நினைப்பதாகத் தெரிகிறது. அவர்கள் ஆசையை ரஜினிகாந்த் நிறைவேற்றுவாரா...?
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget