சினிமா ஸ்டார் திரை விமர்சனம்

நடிகர் : ஞானி
நடிகை : ஆஷா
இயக்குனர் : ஞானி
இசை : எம் ரமேஷ் குமார்
ஓளிப்பதிவு : ஈ கே ரமேஷ் நாயுடு


நாயகன் ஞானி, சினிமாவில் மிகப்பெரிய ஸ்டாராக இருக்கிறார். இவருக்கு பெண்களை கண்டாலே பிடிக்காது. தான் காதலித்த பெண் வேறு ஒருவனை திருமணம் செய்துகொண்டது. தனது அம்மாவுக்கு வேறு ஒருவருடன் தவறான உறவு இருப்பது ஆகிய காரணங்களால், பெண்கள் மீது ஒருவித வெறுப்புடனே இருந்து வருகிறார். அவர்களை ஒரு போதை பொருளாக மட்டுமே மதித்து வருகிறார். 

ஒருநாள் ஞானி நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் சூட்டிங்கிற்காக அவரது சொந்த ஊரான கும்பகோணம் செல்ல நேருகிறது. கும்பகோணத்திற்கு முதலில் செல்ல மறுக்கும் ஞானி, பிறகு அவருக்கு அங்கு பலத்த பாதுகாப்பு அளிப்பதாக தயாரிப்பாளர் வாக்குறுதி அளிப்பதையடுத்து அங்கு செல்கிறார். 

அங்கு அவருக்கு ஒரு ஓட்டலில் அறை ஒதுக்கப்படுகிறது. அந்த ஓட்டலில் ரிசப்ஷனிஸ்டாக இருக்கும் நாயகி ஆஸாவை பார்த்ததும், மற்றவர்களைப் போல் அவளையும் அடையப் பார்க்கிறார் ஞானி. ஆனால், இது எதுவும் பிடிக்காத ஆஸா, ஞானியை திட்டிவிடுகிறாள். 

இந்த விஷயம் ஆஸாவை ஒருதலையாக காதலிக்கும் அந்த ஓட்டலின் முதலாளியின் மகனுக்கு இது தெரிய வருகிறது. அவன், சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து ஞானியை அவமானப்படுத்திவிடுகிறான். இதனால் கோபமடையும் ஞானி, அவளது வீட்டுக்கு சென்று அவளிடம் வாக்குவாதம் செய்கிறான். இதனால், ஆஸாவுக்கு பெருத்த அவமானம் ஏற்படுகிறது. 

பின்பு ஓட்டலில் வேலை பார்க்கும் ஒருவன் மூலம் ஞானிக்கு ஆஸாவின் நல்ல மனம் புரிய வருகிறது. அதுவரை பெண்களை போதைப் பொருளாக மட்டுமே பார்த்த ஞானிக்கு அவள்மீது காதல் துளிர்விடுகிறது. அவள் நினைவாகவே இருந்து வருகிறார். 

மறுநாள் காலையில் அவளை நேரில் சந்திக்க வரும்போது, அவள் ஊரை விட்டு கிளம்பி செல்கிறாள். அவளை மடக்கி, தனியாக அழைத்துச் சென்று தான் பெண்களை வெறுப்பதற்கான காரணத்தை கூறுகிறான். அவளை மணமுடித்துக் கொள்வதாக கூறி யாருக்கும் தெரியாமல் திருமணமும் செய்து கொள்கிறான். பிறகு, அவளை கும்பகோணத்திலேயே தனியாக வீடு எடுத்து தங்க வைக்கிறார். அந்த வீட்டு உரிமையாளர் அவளை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார். 

இந்நிலையில், கும்பகோணத்தில் சூட்டிங் முடிந்து சென்னைக்கு திரும்புகிறார் ஞானி. இவளை கும்பகோணத்திலேயே விட்டுவிட்டு, கூடிய விரைவில் சென்னைக்கு அழைத்து செல்வதாகவும் வாக்குறுதி கொடுத்துவிட்டு செல்கிறார் ஞானி. 

8 மாதங்கள் கடந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள் ஆஸா. அப்போது, ஞானிக்கு ஏற்கெனவே திருமணம் ஆன விஷயம் ஆஸாவுக்கு தெரிய வருகிறது. 

இந்த விஷயத்தை அறிந்த ஆஸா, ஞானியுடன் இணைந்து வாழ்ந்தாரா? தனக்கு ஏற்கெனவே திருமணம் ஆனதை ஆஸாவிடம் ஞானி மறைக்க காரணம் என்ன? என்பதே மீதிக்கதை. 

சினிமா ஸ்டாராகவே நடித்திருக்கும் ஞானிக்கு படத்தில் ஸ்டார் அந்தஸ்து இருப்பதாக தெரியவில்லை. இவர் ரொம்பவும் சிம்பிளாக பீடி அடிப்பது, முகத்தில் தாடி, சரியாக வாராத தலைமுடி என்று வலம்வருவது இவரெல்லாம் பெரிய ஸ்டாரா? என்று நம்மை கேட்க வைக்கிறது. கதை இப்படியிருந்தாலும், முதலில் இவர் இந்த கதையில் நடிக்க யோசித்திருக்க வேண்டும். 

இவரே இந்த படத்தை இயக்கியிருக்கிறார் என்பதால், படத்தின் நாயகிகளான 3 பேருடன் கிளுகிளுப்பான காட்சிகள் வைத்து தனது ஆசையை நிறைவேற்றியிருக்கிறார். படத்தின் கதைக்கு பொருந்தாத இவற்றை தவிர்த்திருக்கலாம். 

படத்தின் இறுதி காட்சியில், இந்த படத்தை மக்களின் சந்தோஷத்திற்காகத்தான் எடுத்தேன். இனிமேல் இப்படியொரு படத்தை எடுக்கமாட்டேன் என்று இவர் பேசும் வசனம், நமக்கும் நல்லதுதான் என்று தோன்றுகிறது. மற்றபடி, இவர் பேசும் வசனங்களில் அனல் அடிக்கிறது. 

நாயகி ஆஸாவுக்கு பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம். நாயகிக்குண்டான முகம் இல்லாவிட்டாலும் நடிப்பில் ஓரளவுக்கு தேறியிருக்கிறார். டைரக்டராக வரும் மயில்சாமி, ஒரே டயலாக்கை வேறுவேறு மாதிரி மாற்றி பேசும் தயாரிப்பாளராக காதல் தண்டபானி ஆகியோர் நகைச்சுவை வரவைக்கிறார்கள். 

ரமேஷ் நாயுடுவின் ஒளிப்பதிவு மிகவும் கவனிக்க வேண்டியது. இவரது கேமரா கண்கள் ஒவ்வொரு காட்சியையும் அழகாக படம் பிடித்திருக்கிறது. ரமேஷ்குமாரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையும் சுமார் ரகம்தான். 

மொத்தத்தில் ‘சினிமா ஸ்டார்’ ஸ்டார் அந்தஸ்தில்லை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget