கப்பல் சினிமா விமர்சனம்

நடிகர் : வைபவ்
நடிகை : சோனம் ப்ரீத் பாஜ்வா
இயக்குனர் : கார்த்திக் ஜி கிரிஷ்
இசை : நடராஜன் சங்கரன்
ஓளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன்

ஒரு கிராமத்தில் 5 சிறுவர்கள் பள்ளியில் படித்து வருகிறார்கள். இதில் ஒருவன் நாயகன் வைபவ். இந்த 5 சிறுவர்களும் கடைசி பெஞ்சில் உட்கார்ந்துக் கொண்டு அரட்டை அடித்துக் கொண்டு நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றார்கள். அந்த கிராமத்தில் கெத்தாக வாழ்ந்து வரும் ரோபோ சங்கரை இவர்களுக்கு ரோல் மாடலாக நினைத்து வருகிறார்கள்.

ஒருநாள் ரோபோ சங்கர் தாடி வைத்து சோகமாக இருக்கிறார். அப்போது ஒருவர் ஏன் இப்படி இருக்கிறாய்? என்று கேட்க, அதற்கு ரோபோ சங்கர், கல்யாணம் செய்ததால் நான் நல்ல நண்பர்களை இழந்து விட்டேன். நண்பர்களை இழக்க கூடாது என்றால் கல்யாணம் செய்யக் கூடாது என்று கூறுகிறார். இதை கேட்கும் சிறுவர்கள், நாமும் பிரிந்து விடக்கூடாது என்பதால் கல்யாணம் செய்யப்போவதில்லை என்று அனைவரும் சத்தியம் செய்துகொள்கிறார்கள். ஆனால், வைபவ் மட்டும் சத்தியம் செய்ய மறுக்கிறார். பின்னர் நண்பர்கள் எல்லாம் வைபவை வலுக்கட்டாயமாக சத்தியம் செய்ய வைக்கிறார்கள்.

பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரி செல்கிறார்கள். அங்கு வைபவ் ஒரு பெண்ணை காதலிக்க முயற்சி செய்கிறார். அதை நண்பர்கள் கெடுத்து விடுகிறார்கள். இதன்பிறகு வைபவ் சென்னைக்கு சென்று ஒரு பெண்ணை காதலித்து ஊர் சுற்ற வேண்டும் என்று எண்ணுகிறார். இதற்காக நண்பர்களிடம் பொய் சொல்லிவிட்டு சென்னைக்கு செல்கிறார்.

சென்னையில் விடிவி கணேஷ் வீட்டில் தங்குகிறார் வைபவ். வேலை செய்து வரும் விடிவி கணேஷ், பெண்களுடன் ஜாலியாக பழகி வருகிறார். இதனால் ஒரு பெண்ணுடன் பழக வேண்டும் என்று கணேஷிடம் ஐடியா கேட்கிறார் வைபவ். அதற்கு அவர் பப்பிற்கு சென்றால் அங்கு நிறைய பெண்கள் வருவார்கள். அவர்களில் ஒரு பெண்ணை நீ தேர்ந்தெடுக்கலாம் என்று கூறுகிறார்.

அதன்படி வைபவ்வும் பப்பிற்கு செல்கிறார். அங்கு பெண்களுடன் வந்தால் தான் உள்ளே அனுமதி என்று கூறுகிறார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பப்பின் வாசலில் நிற்கிறார். அப்போது நாயகி சோனம் பாஜ்வாவை பார்க்கிறார். அவரும் தனியாக வருவதால் அவரிடம் பேசி இருவரும் பப்பிற்கு செல்கிறார்கள். அங்கு இருவரும் மது அருந்திவிட்டு ஜாலியாக இருக்கிறார்கள். அப்போது சோனம் பாஜ்வாவிடம் பேசி அவருடைய போன் நம்பர் மற்றும் வீட்டின் விலாசத்தையும் பெற்றுக் கொள்கிறார்.

மறுநாள் சோனம் பாஜ்வாவை தேடி அவரது வீட்டிற்கு செல்கிறார் வைபவ். அங்கு அவரை யார் என்றே தெரியாது என்று கூறுகிறார் சோனம். முதல் நாள் நடந்த விஷயங்களை ஞாபகபடுத்த முயற்சி செய்கிறார். சோனம் பாஜ்வா போதையில் இருந்ததால் யார் என்று தெரியாது என்று கூறி அவரை அனுப்புகிறார். ஆனால், சோனம் பாஜ்வாவை காதலித்தே தீர வேண்டும் என்று முடிவு செய்து அவர் பின்னாலேயே அலைகிறார். இதனால் கடுப்பாகிறார் சோனம். இதற்கு முடிவு கட்ட வேண்டும் எண்ணி வைபவிடம் பேசுகிறார். அதற்கு வைபவ் என்னிடம் 2 நாட்கள் பழகிப்பாருங்கள் என்று கூறி இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். இவர்களின் பழக்கம் காதலாக மாறுகிறது.

இந்நிலையில் ஊரில் இருந்து நண்பர்கள் சென்னைக்கு வருகிறார்கள். வைபவ் காதலித்து வருவது அவர்களுக்கு தெரிய வருகிறது. இதனால் கோபமடையும் நண்பர்கள் வைபவ் காதலை பிரிக்க முயற்சி செய்கிறார்கள்.

கல்யாணம் செய்ய வேண்டாம் என்ற முடிவில் இருக்கும் நண்பர்கள் வைபவின் காதலை பிரித்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் வைபவ் முழுநீள நகைச்சுவை படத்தில் கதாநாயகன் பொறுப்பேற்று சிறப்பாக நடித்திருக்கிறார். நண்பர்களான கருணா, அர்ஜூனன், வெங்கட் சுந்தர், கார்த்திக் இவர்களுடன் சேர்ந்து லூட்டி அடிக்கும் காட்சிகள் காதலுக்காக அடிவாங்குவதும் இவர் செய்யும் சேட்டைகள் என ரசிக்கும் படி செய்திருக்கிறார். 

நாயகி சோனம் பாஜ்வா முதல் படத்திலேயே மாடர்ன் பெண்ணாக வலம் வருகிறார். அழகாக வந்து கவர்ச்சி காண்பித்து ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். நண்பர்களாக நடித்திருக்கும் கருணா, அர்ஜூனன், வெங்கட் சுந்தர், கார்த்திக் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

முழு நீள நகைச்சுவை படத்தை கையில் எடுத்துக் கொண்ட இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ், திரைக்கதையின் நீளத்தை குறைத்திருக்கலாம். நல்ல பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கிறார். ஷங்கரின் உதவியாளராக இருந்தவர் என்று பாடல் காட்சிகளில் தெரிகிறது.

நடராஜன் சங்கரன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘கப்பல்’ நீண்ட பயணம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget