2015ல் வெளியாகும் ரிச் ஹீரோ படங்கள்

2014ம் ஆண்டு சாதனை ஆண்டாகவும், கொஞ்சம் சோதனை ஆண்டாகவும் கடந்து விட்டது. படங்கள் வெளிவந்த விதத்தில் ஒரு பக்கம் சாதனை
புரிந்தாலும், படங்களின் வெற்றி, எதிர்பார்க்கப்பட்ட படங்களின் ஏமாற்றம், படங்களின் தோல்வி என சோதனைகளும் நிறைந்த ஆண்டாகவே இருந்தது.
இந்த 2015ம் ஆண்டிலாவது வெற்றிப் படங்கள் அதிகம் வந்து பல புதிய சாதனைகளைப் படைக்கட்டும். வழக்கம் போலவே இந்த ஆண்டிலும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் படங்கள் நிறையவே வர இருக்கின்றன. பல படங்கள் தயாராகி விரைவில் வெளிவர உள்ள நிலையில் அப்படி எதிர்பார்க்கப்படும் படங்களாக எவை அமைந்திருக்கின்றன எனப் பார்ப்போம்...

உத்தம வில்லன், பாபநாசம்

'உத்தம வில்லன் ' படம் அநேகமாக அடுத்த மாதம் வெளி வரலாம். ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ஜிப்ரான் இசையைமப்பில் கமலுடன், ஆன்ட்ரியா, பூஜா குமார், கே.விஸ்வநாத், மறைந்த இயக்குனர் பாலசந்தர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 8ம் நூற்றாண்டு கதையும், இந்தக் காலத்துக் கதையும் கொண்ட படமாக வித்தியாசமான கதைக் களத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

'பாபநாசம்' படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார் கௌதமி. ஜீது ஜோசப் இயக்கத்தில் மிகவும் யதார்த்தமான படமாக இந்தப் படம் உருவாகியிருக்கும் என நம்பப்படுகிறது.

கமலின் மற்றொரு படமான 'விஸ்வரூபம் 2' பட வெளியீடு பற்றி கமல்ஹாசனே அறிவித்தால்தான் உண்டு.



ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்துள்ள படம். சுமார் 120 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளிவந்து ரசிகர்களின் அதிக பட்ச எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது, மற்ற மாநில மற்ற நாடுகளில் உள்ள ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆம்பள

சுந்தர் .சி - விஷால் கூட்டணியில் இதற்கு முன் உருவாகி வெளிவராமல் முடங்கிக் கிடக்கும் 'மத கஜ ராஜா' படத்திற்குப் பிறகு அந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம். சுந்தர் .சியின் இயக்கத்தில் எப்போதுமே ஒரு நகைச்சுவை ஓட்டம் இருக்கும். விஷால் படமென்றால் ஆக்ஷன் இருக்கும். இருவரின் படங்களையும் குடும்பத்துடன் பார்க்கலாம். ஹிப் ஹாப் தமிழாவின் இசை அறிமுகமும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்னை அறிந்தால்

பொங்கலுக்கு வெளிவரும் என்று இன்றும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தாலும் அன்று திட்டமிட்டபடி வெளிவருமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறார்கள். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் முதன் முறையாக நடிக்கும் படம். மீண்டும் ஒரு 'வேட்டையாடு விளையாடு' போன்ற ஸ்டைலிஷான ஆக்ஷன் அனுபவத்தை கௌதம் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய்யின் 58வது படம்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்க ஃபேன்டஸி படமாக உருவாகி வரும் இந்தப் படம் 2015ம் ஆண்டில் அதிகமாகப் பேசப்படும் ஒரு படமாக அமைய அக்குழுவினர் கடுமையாக உழைத்து வருகிறார்கள். இதுவரை ஷங்கர் படங்கள்தான் பிரம்மாண்டமான படங்கள் என்று பேச வைக்கும். அந்த விதத்தில் இந்தப் படத்தையும் பேச வைக்க இயக்குனர் சிம்புதேவன் உழைத்து வருகிறார் என்று சொல்கிறார்கள்.

மாஸ்

வெங்கட் பிரபு - சூர்யா முதன் முறையாக இணைந்திருக்கும் படம். சூர்யா - நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டில் அஞ்சான் படத்தின் ரிசல்ட்டால் துவண்டு கிடக்கும் சூர்யாவின் மார்க்கெட்டை மீண்டும் மாஸ் ரசிகர்களுக்கான மார்க்கெட்டாக இந்தப் படம் மூலம் வெங்கட் பிரபு உருவாக்குவாரா என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. அஜித்துக்கு மங்காத்தா போன்ற திருப்புமுனையைக் கொடுத்தவர் இந்த மாஸ் படத்திலும் அந்த திருப்புமுனையை சூர்யாவுக்குக் கொடுப்பார் என்கிறார்கள்.

கொம்பன்

'குட்டிப் புலி' படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் , ராஜ்கிரண், கோவை சரளா மற்றும் பலர் நடிக்கும் படம். 'பருத்தி வீரன்' படத்திற்குப் பிறகு கார்த்தியின் நடிப்பில் மீண்டும் ஒரு கிராமிய மணம் கமழும் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்தப் படத்திற்கு உண்டு. 'மெட்ராஸ்' படம் மூலம் மீண்டும் வெற்றி நாயகனாக வலம் வரும் இந்த கொம்பனிலும் வெற்றியை கொம்புப் பிடியாக பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

காக்கி சட்டை

'எதிர் நீச்சல்' வெற்றிக் கூட்டணியான இயக்குனர் துரை செந்தில் குமார் - சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணியும், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வெற்றி ஜோடியான சிவகார்த்திகேயன் - ஸ்ரீதிவ்யா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம். பாடல்கள் வெளிவந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இரு படங்களின் ராசிக் கூட்டணிகள் இந்தக் கூட்டணியில் மீண்டும் ஒரு வெற்றியை ஏற்படுத்துமா...?

அனேகன்

'மாற்றான்' படத்தின் தோல்விக்குப் பிறகு துவண்டு விடாமல் மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்று ஆக வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயக்குனர் கே.வி.ஆனந்த் உழைத்து வருகிறார். 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் வெற்றியை மீண்டும் தக்க வைக்கும் முனைப்புடன் இருக்கிறார் தனுஷ். சிறிய இடைவெளிக்குப் பின் கார்த்திக்கும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனேகன் அசத்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்...

நண்பேன்டா

ஜெகதீஷ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையைமப்பில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் இணைந்திருக்கும் படம். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் கிடைத்த வெற்றியை 'இது கதிர்வேலன் காதல்' படத்தில் தொலைத்து விட்டு நிற்கும் உதயநிதிக்கு இந்த 'நண்பேன்டா' கண்டிப்பாகக் கை கொடுப்பாரா என்பது சீக்கிரமே தெரிந்து விடும். படத்தின் புகைப்படங்கள் ஃபிரஷ்ஷாக அமைந்திருக்கின்றன. படமும் அப்படி ஃபிரஷ்ஷாக இருந்து விட்டால் நண்பேன்டா நல்ல வெற்றியைப் பெற்று விடுவார்.

புறம்போக்கு

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மிகப் பிரம்மாண்டமான படைப்பாக மல்டி ஸ்டார் காம்பினேஷன் படமாக உருவாகி வருகிறது. 'பேராண்மை' படத்தின் மூலம் ஒரு வித்தியாசப் படைப்பைக் கொடுத்த இயக்குனர் ஜனநாதன், பெரிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திலும் சமூகப் பார்வை அதிகமிருக்கும் என்று நம்பலாம்.

எனக்குள் ஒருவன்

கன்னடத்தில் மாபெரும் வெற்றி பெற்ற 'லூசியா' படத்தின் ரீமேக்கா உருவாகி வரும் படம். பிரசாத் ராமர் இயக்கத்தில் சித்தார்த், தீபா சன்னதி, சிருஷ்டி டாங்கே மற்றும் பலர் நடித்துள்ளார்கள். 'ஜிகர்தண்டா' வெற்றியை 'காவியத் தலைவன்' படத்தில் நழுவ விட்ட சித்தார்த் இந்தப் படத்தின் வெற்றிக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

இது நம்ம ஆளு

சிம்பு நடித்து 'வாலு' படம் முதலில் வருமா 'இது நம்ம ஆளு' முதலில் வருமா என்பது அவருக்கே கூடத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 'பசங்க' பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பில் சிம்பு, நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பதால் இந்தப் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறிய ஹீரோக்களை இயக்கிய பாண்டிராஜ் சிம்புவை வைத்து இயக்கி சிக்கிக் கொண்டு விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இடம் பொருள் ஏவல்

'நீர்ப்பறவை' படத்திற்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவரும் படம். விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா - வைரமுத்து கூட்டணி முதன் முறையாக இணைந்து இனிமையான பாடல்களைக் கொடுத்திருக்கிறது. நம் மண்ணின் கதையைப் பிரதிபலிக்கும் படங்களைக் கொடுக்கும் சீனு ராமசாமி இந்தப் படத்திலும் பேசப்படுவார் என்று நம்பலாம்.

இது என்ன மாயம்

'சைவம்' படத்திற்குப் பிறகு விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு கீர்த்தி சுரேஷ் இசையமைத்துள்ள படம். கடந்த ஆண்டில் விக்ரம் பிரபு நடித்து வெளியான மூன்று படங்களுமே முதலுக்கு மோசமில்லை ரகத்தில் வெற்றி பெற்றன. அந்த ராசி இந்தப் படத்திலும் தொடருமா என்பதுதான் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு. விஜய், விக்ரம், போன்றவர்களை இயக்கிய விஜய் இப்போது விக்ரம் பிரபுவை இயக்கியிருக்கிறார்.

டார்லிங்

முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் 'பென்சில்' படம் மூலம் நாயகனாக அடியெடுத்த வைத்தாலும், அவர் நடித்து முதலில் வெளிவரும் படமாக 'டார்லிங்' படம் இருக்கும். சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜிவி, நிக்கி கல்ராணி, சிருஷ்டி டாங்கே மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற 'பிரேம கதா சித்திரம்' படத்தின் ரீமேக்கான இந்தப் படம் தமிழிலும் ஏமாற்றாத வெற்றியைத் தரும் என்று நம்பலாம்.

இந்தப் படங்களுடன் விரைவில் வெளிவர இருக்கும் படங்கள் என்று சொல்லப்படும் 'வை ராஜா வை, வலியவன், ரோமியோ ஜுலியட், சாஹசம்,' உள்ளிட்ட சில படங்கள் எதிர்பார்க்கப்படும் பட்டியலில் இருக்கின்றன. சில பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களும், ஏனைய சில படங்களும் தற்போதுதான் படப்பிடிப்பைத் துவக்கியிருக்கின்றன. இன்னும் சில மாதங்களில் அந்தப் படங்களின் தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும்.

2015ம் ஆண்டு கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் வெளிவரும், தேவையற்ற சலவுகளைக் குறைக்கும் ஆண்டாகவும் இருக்கும் பட்சத்தில், இந்தப் புத்தாண்டில் இன்னும் பல புதுமைகளை தமிழ்த் திரையுலகம் சாதிக்கும் என நம்பலாம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget